|
சீதாராமர் காட்டில் சுற்றித்திரிந்த போது, ஒரு பெண் துறவியைச் சந்தித்தனர். சீதையைப் பார்த்த அந்தத் துறவி, ""மகளே! நீ மிகவும் அழகாக இருக்கிறாய். எல்லாப் பெண்களுக்கும் அழகாகப் பிறக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. உன் கணவனைப் பார்த்தாலே தெரிகிறது. அவன் மிகவும் நல்லவன் என்று! மனைவியின் மனம் கோணாமல் நடக்கும் கணவனைக் காண்பதும் அரிது. அதுவும் உனக்கு வாய்த்துவிட்டது. அது மட்டுமல்ல! உன் அடக்கத்தைப் பார்த்தால் அவனுக்கு நீ மிகவும் பணிந்து நடப்பதும் எனக்குப் புரிகிறது. எந்தப் பெண் கணவனே கண்கண்ட தெய்வமென வாழ்கிறாளோ அவள் பாக்கியசாலி. ஆக, எல்லாவகையிலும் நீ கொடுத்து வைத்தவள். நீ இன்பமாய்வாழ வேண்டும், என வாழ்த்தினார்.
சீதை அவரிடம்,""அம்மா! தாங்கள் சொன்னதில் முதல் இரண்டும் சரி. ஆனால், மூன்றாவதாகச் சொன்னீர்களே! நான் அவருக்கு பணிந்து நடக்கிறேன் என்று! அதில் எவ்வளவு தூரம் உண்மையிருக்கிறது என்பது புரியவில்லை. ஏனெனில், நான் அவருக்கு பணிந்து நடக்கிறேனா... இல்லை...அவர் எனக்கு பணிந்து நடக்கிறாரா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. நான் சொல்வதை அவர் மறுப்பதில்லை, அவர் சொல்வதை நானும் தட்டுவதில்லை. அவர் என்னுடையவர், நான் அவருடையவள் என்ற எண்ணம் எங்கள்இருவருக்குமே இருக்கிறது. என் நடவடிக்கைகள் அவருக்கும், அவரது செயல்பாடுகள் எனக்கும் நிறைவைத் தருகின்றன, என்றாள். கணவனும், மனைவியும் கருத்தொருமித்து நடக்க வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்பதையே, இதன் மூலம் சீதை, இன்றைய தம்பதியருக்கு சொல்லித் தருகிறாள்.
|
|
|
|