|
ராமனுக்குப் பட்டாபிேஷகம் நடக்கப் போவதை மந்தரை மூலம் அறிந்த கைகேயி, ‘‘நல்ல செய்தி சொன்ன உனக்கு என்ன கொடுத்தாலும் தகும்’’ என தன்னுடைய முத்து மாலையை பரிசளித்தாள். மந்தரையோ தன் சூழ்ச்சியைத் தொடங்கினாள். ‘‘மகாராணி! ராமனுக்குப் பட்டம் சூட்டுவதில் தங்களுக்கு என்ன பெருமை இருக்கிறது?’’ என மனதைக் கலைத்தாள். ‘‘ராமனைப் பெற்ற எனக்கு இதை விட மகிழ்ச்சி உண்டோ?’’ என மறுத்தாள் கைகேயி. ‘‘ராமன் எப்படி உங்கள் மகன் ஆவான்? கோசலை பெற்றவன் அல்லவா அவன்?’’ என மனதில் விஷத்தைக் கலந்தாள். ‘ராமன் மிக நல்லவன். பெற்ற தாய் போல என்னிடமும் பாசம் காட்டுபவன்’ என்றாள் கைகேயி. ‘‘ராமனின் வாரிசுகள் தான் அயோத்தியை அரசாள்வர். உங்களின் மகன் பரதனுக்கு அந்த வாய்ப்பு இனி கிடைக்காது. அரச குலத்தில் பிறந்து, சக்கரவர்த்தியின் மனைவியாக வாழ்ந்து என்ன பயன்? அடுத்தவள் பெற்ற மகனிடம் கையேந்தி நிற்கப் போகிறீர்களா?’’ என்றாள். மந்தரையின் சூழ்ச்சியால் மனம் மாறினாள் கைகேயி. 14 ஆண்டுகள் ராமனைக் காட்டுக்கு அனுப்புவதை வரம் கேட்க புறப்பட்டாள். முத்துமாலையை பரிசாகப் பெற்ற மந்தரை, இப்படியாக ‘உண்ட வீட்டுக்கே இரண்டகம்’ நினைத்தாள். நல்லவர் நட்பு வாழ வைக்கும். ஆனால் தீயவர் நட்பு தீமையில் முடியும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
|
|
|
|