Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காலாவதியாகாத அன்பு
 
பக்தி கதைகள்
காலாவதியாகாத அன்பு

“சொந்தமா மருத்துவமனை கட்டணும்னு ஆசைப்பட்டது தப்பா? அதுக்காகப் பொண்டாட்டி தாலியத் தவிர மத்ததெல்லாத்தையும் அடமானம் வச்சி பேங்க்ல கடன் வாங்கினது தப்பா? மத்தவங்க மாதிரி இல்லாம வாங்கற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வச்சிக்கிட்டுப் பைசா சுத்தமா வரி கட்டறது தப்பா? இல்ல, தெனமும் அந்தக் கடன்காரிய – அதுதான் சார் உங்க பச்சைப்புடவைக்காரிய – கும்பிடறது தப்பா? வாரம் தவறாம அவ கோவிலுக்குப் போறது தப்பா? என் பேஷண்ட்டுக்கு ஏதாவது ஒண்ணுன்னா சோறு தண்ணிய விட்டுட்டு அவங்க உயிருக்குப் போராடறது தப்பா? எனக்கு மட்டும் ஏன் சார் இப்படியெல்லாம் நடக்கணும்?”
என்னிடம் புலம்பியவர்  புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்.
“நீங்க இப்படிப் புலம்பற அளவுக்கு என்னாச்சு டாக்டர்?
 “நான் மருத்துவமனை கட்டறதுக்காக வாங்கின நிலத்துல ஒரு மரக்கடை இருந்துச்சி. காலி பண்ணிருவேன்னு சொல்லிக் கை நீட்டிக் காசு வாங்கிட்டு இப்போ தகராறு பண்றான். கேஸ்  போட்டிருக்கேன். என்னப் பத்தி வருமான வரி ஆபீசுக்குக் கன்னா பின்னான்னு எழுதிப் போட்டிருக்கான்.  அவங்களும் அத நம்பி எனக்கு நோட்டீஸ் கொடுத்திருக்காங்க. அடுத்த வாரம் வாய்தா”
ஒரு வாரம் கழிந்தது.
அன்று காலை சைக்கிளில் சென்ற போது காய்கறி விற்கும் பெண் என்னை வழிமறித்தாள்.
“வாழைக்காய் வாங்கிட்டுப் போங்க சாமி.”
“வேற வேலையில்ல? வழிய விடும்மா?”
“படியளப்பவளிடமே பம்மாத்து வேலையைக் காட்டுகிறாயோ?”
சைக்கிளை நிறுத்தி விட்டுப் பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன். மனதில் அந்த மருத்துவரின் புலம்பல்தான் ஒடிக் கொண்டிருந்தது.
“அந்த மருத்துவனின் பிரச்னைக்கு  என்ன தீர்வு நான் சொல்வேன் என்று சொல்... பார்க்கலாம்.”
அன்னை  என்னைச் சீண்டிப்பார்க்கும் மனநிலையில் இருக்கிறாள். நானும் உரிமை எடுத்துக்கொண்டேன்.
 “பெரிதாக என்ன சொல்லப் போகிறீர்கள்? அந்த மருத்துவர் நல்லவர். என்றாலும் அவருக்கு இது சோதனைக் காலம். மனதில் இருக்கும் அன்பை அதிகமாக்கிக் கொண்டால் இதிலிருந்து தப்பிக்கலாம். இல்லாவிட்டால் விதிவிட்ட வழி..”
“அதுதான் இல்லை. அவன் மனதில் ஏற்கனவே வானம் அளவுக்கு அன்பு இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று காட்டுகிறேன் பார். அது எப்படி அவனைக் காப்பாற்றப்போகிறது என்பதையும் சொல்கிறேன்.”

இரண்டு மாதங்களுக்கு முன்பு..  அந்த மருத்துவர் பன்னிரெண்டு மணி நேரம் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. எப்போது வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுத் துாங்கப்போகிறோம் என அவர் ஏங்கும் நேரத்தில் அவருக்கு மற்றொரு மருத்துவரிடமிருந்து  அவசர அழைப்பு வந்தது..
12 வயதுச் சிறுவனுக்குக் குடல்வால் நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத  சிக்கல் வந்துவிட்டதாம். உடனே வர வேண்டும் எனக் கெஞ்சினார் அவர். போனால் எப்படியும் நான்கு, ஐந்து மணி நேரமாகிவிடும். அதுவரை பசி தாங்குமா என யோசித்தார் நிபுணர்.
ஒரு மனிதனின் உயிர் - அதிலும் ஒரு சிறுவனின் உயிர் - ஆபத்தில் இருக்கும் அவனைக் காப்பாற்றும் திறமையையும் பொறுப்பையும் அந்த மீனாட்சிதான் கொடுத்திருக்கிறாள்.  என்னால் முடிந்ததைச் செய்தேயாக வேண்டும்.
மனைவியிடம் விபரம் சொல்லிவிட்டு மருத்துவமனைக்குப் பறந்தார் நிபுணர்.

அங்கே நிலைமை சிக்கலாகத்தான் இருந்தது. என்றாலும் இரண்டு மணி நேரம் போராடி சிறுவனின் உயிரைக் காப்பாற்றினார்.  
சிறுவனின் தந்தை, அறுவை சிகிச்சை நிபுணரின் கையில் முகம் புதைத்து அழுதார். கத்தை கத்தையாகப் பணம் தர முன்வந்தார். மருத்துவர் அதை வாங்க மறுத்துவிட்டார்.
 “செய்ய வேண்டியதைத்தான் செய்தேன். அதற்காக நிர்ணயிக்கப்பட்ட தொகை எதுவோ அதை மருத்துவமனை மூலமாக வாங்கிக் கொள்கிறேன். அதற்கு மேல் பணம் வாங்குவது பச்சைப்புடவைக்காரிக்குப் பிடிக்காது..”
“ஏதாவது வாங்கிக்கொள்ளவில்லையென்றால் என் மனம் ஆறாது.”
“சரி. உங்கள் கையால் ஒரு ரூபாய் கொடுங்கள் போதும்.”

“ஏன் தாயே எப்போதோ இந்த மனிதர் காட்டிய அன்பு இப்போதுள்ள இடியாப்பச் சிக்கலிலிருந்து காப்பாற்றுமா?”
“அன்பு மனிதர்கள் தயாரிக்கும் மருந்தல்ல – காலாவதியாவதற்கு. அன்பு என்னும் சர்வரோக நிவாரணிக்குக் காலாவதியாகும் தேதி கிடையாது. அன்பின் விளைவுகள் நிரந்தரமாக இருக்கும்.  அந்த மருத்துவனுக்கு நாளை என்ன நடக்கப்போகிறது என்று  இன்றே உனக்குக் காட்டுகிறேன், பார்.”

அன்றுதான் அந்த அறுவை சிகிச்சை நிபுணர் வருமான வரி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நாள். காலை ஒன்பது மணி. மருத்துவர் வாடகைக் கட்டிடத்தில் இருந்த தனது பழைய மருத்துவமனையில் பித்துப் பிடித்தவர் போல் அமர்ந்திருந்தார். 11 மணிக்கு விசாரணை.

அவர் வரிஏய்ப்புச் செய்யவில்லை. என்றாலும் வருமானவரித்துறை விசாரணை என்பதே ஒரு வில்லங்கமான விஷயம்தான். என்னதான் நேர்மையாக வரி கட்டியிருந்தாலும் அதைப் புரிய வைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும் என மருத்துவருடைய ஆடிட்டர் பயமுறுத்தியிருந்தார். விசாரணையும் வழக்கும் முடியச் சில வருடங்கள் ஆகலாம் என்றும் சொல்லியிருந்தார்.
மருத்துவர் கடன் வாங்கிய வங்கியிலிருந்து மிரட்டத் தொடங்கியிருந்தனர். கட்டட வேலை ஆரம்பிக்க  இன்னும் தாமதமானால் மொத்தக் கடனையும் ரத்து செய்யத் தயங்க மாட்டோம் என உறுதியாகச் சொல்லிவிட்டனர்.
 ‘அம்மா! பச்சைப்புடவைக்காரி! இதற்கு மேல் என்னால் எதையுமே தாங்கிக் கொள்ளமுடியாது. நான் உன்னிடமே வந்து விடுகிறேன்.’
அவரைப் பார்க்க ஒரு நோயாளி வந்திருப்பதாக நர்ஸ் வந்து  சொன்னவுடன் எரிச்சலின் உச்சகட்டத்துக்குப் போய்விட்டார்.
“யாராக இருந்தாலும் பார்க்கமுடியாது எனச் சொல்லிவிடு.”
“உங்களப் பாத்தேயாகணுமாம் டாக்டர். முக்கால் மணிநேரமாக் காத்திருக்காரு. ரொம்ப அவசரமாம்.”
அப்போது கூடத் தன்னால் ஒரு நோயாளியின் உயிருக்கு ஆபத்து வரக் கூடாது என நினைத்தார் மருத்துவர். மேலோட்டமாகப் பார்த்துவிட்டு வேறு ஒரு மருத்துவரிடம் அனுப்பலாம் எனத் தீர்மானித்தார். அவரை உள்ளே வரச் சொன்னார்.
வந்தவர் புன்னகை செய்தார். அறுவை சிகிச்சை நிபுணரின் புன்னகையில் உயிரே இல்லை.

“காலங்காத்தால தொந்தரவு செய்யறதுக்கு மன்னிக்கணும். உங்களுக்கு இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்லருந்து நோட்டீஸ் ஏதாவது வந்திருக்கா?”
“ஆமா. ஆனா அதப் பத்தி நீங்க ஏன் கவலைப்படணும்?”
“சொல்றேன். வருமான வரி விஷயத்துல நீங்க எப்படி?”
இந்தாளுக்கு எதற்கு இதெல்லாம்? என்றாலும் தன் மனதில் இருப்பதை யாரிடமாவது கொட்ட வேண்டும் என்று தோன்றியது. கொட்டிவிட்டார்.
“நான் ஒழுங்கா வரி கட்டறவன். சிட்டில இருக்கற என்ன மாதிரி சர்ஜன்ஸ் மத்தியில அதிகமா வரி கட்டறவன் நான்தான்னு என்னோட ஆடிட்டர் அடிக்கடி சொல்வாரு.”.

“கடந்த காலத்துல கணக்குல வராத பணத்த வச்சி சொத்து ஏதும் வாங்கியிருக்கீங்களா?”
“கணக்குல வராத பணமே என்கிட்ட கிடையாது. இருபது வருஷத்துக்கு முன்னால வாங்கின என் வீடு, இப்போ பொண்டாட்டி நகையை அடகு வச்சிக் கடன் வாங்கி மருத்துவமனை கட்டறதுக்காக  நான் வாங்கியிருக்கற நிலம் தவிர வேற எந்தச் சொத்தும் கெடையாது. அந்த நிலத்துல ஒருத்தன் உக்காந்துக்கிட்டுக் காலி பண்ணமாட்டேன்னு பாடாப் படுத்தறான்.”
“எனக்குத் தெரியும். இந்த இடத்துல ஒரு கையெழுத்துப் போடுங்களேன்.”
“என்னய்யா விளையாடறீங்களா? ஆளாளுக்கு என்ன வறுத்தெடுக்கணும்னு கிளம்பிட்டீங்களா? ஆர்வமாக் கேட்டீங்களேன்னு என் இன்கம்டாக்ஸ் விபரங்களைச்  சொன்னாக்  கையெழுத்து அது இதுன்னு மிரட்டறீங்களே?”
“சார் என் பேரு திவாகர். அசிஸ்டண்ட் கமிஷனர் ஆப் இன்கம்டாக்ஸ். உங்க வரி ஏய்ப்பு பத்தின புகார்  என்கிட்டதான் வந்திருக்கு. நீங்க இங்க கையெழுத்துப் போட்டீங்கன்னா மத்ததை நான் பாத்துக்கறேன். . இந்தக் கேஸ இதோட முடிச்சிடறேன். இனிமே எங்க டிபார்ட்மெண்ட்டிலருந்து உங்களத் தொந்தரவு பண்ணாத மாதிரி வலுவா எழுதி வச்சிடறேன்.”
“அது நீங்க  வந்து..”
“உங்களப் பத்திப் புகார் சொன்னவங்களோட ஆடிட்டரையும் கூப்பிட்டு மிரட்டியிருக்கேன். அவங்க உங்க இடத்தக் காலி பண்ணலேன்னா அவங்கள நாஸ்தி பண்ணிருவேன்னு சொல்லி பயமுறுத்தியிருக்கேன். கொஞ்சம் டயம் கேட்டிருக்காங்க. நீங்க சிக்கிரமே கட்டட வேலைய ஆரம்பிக்கலாம்.”
அறுவை சிகிச்சை நிபுணருக்கு என்ன பேசுவது எனத் தெரியவில்லை.

“சார்... ரெண்டு மாசத்துக்கு முன்னால நடுராத்திரி வரைக்கும் போராடி என் ஒரே பையனோட உயிரக் காப்பாத்தினீங்க.  என் பையனுக்கு ஏதாவது ஆகியிருந்தா நான் செத்திருப்பேன். எனக்கு உயிர்ப்பிச்சை போட்டிருக்கீங்க! இது மாதிரி இன்னும் லட்சம் தரம் செஞ்சாலும் என் நன்றிக்கடன் தீராது.”

அங்கே அறுவை சிகிச்சை நிபுணர் அழுதார். இங்கே காய்கறி விற்கும் பெண்ணின் காலில் விழுந்து நான் கதறினேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar