|
இலங்கை மன்னன் ராவணன் நிலைகுலைந்து போனான். காரணம் அனுமன்தான். ‘‘கேவலம் ஒரு குரங்கு... என் நாட்டையே சேதப்படுத்தி விட்டதே! இத்தனை படை வீரர்கள் இருந்தும் அவர்களின் கட்டுக் காவலை மீறி தைரியமாக தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறதே! இதை நினைத்து வேதனைப்படுவதா, வெட்கப்படுவதா, அவலமாகச் சிரிப்பதா?’’ என மனதிற்குள் குமைந்தான். ‘‘என் பராக்கிரமத்தை அறியாமல், அதிகாரத்தை உணராமல் சிறுபிள்ளைத்தனமாக எப்படியெல்லாம் விளையாடிவிட்டது! ஆனால் சாதாரண விளையாட்டா அது? எத்தனை நஷ்டம், எவ்வளவு வேதனை…. ஒன்றும் செய்ய இயலாமல் பிரமை பிடித்தது வீரர்கள் திகைத்து நின்றார்களே, இது எனக்கு ஏற்பட்ட அவமானம் அல்லவா? நல்லவேளையாக இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரத்துக்கு அந்தக் குரங்கு கட்டுப்பட்டது! இல்லையென்றால் இலங்கை மொத்தமும் நிர்மூலமாகி இருக்கும். கேவலம் ஒரு மானுடனுக்கு அதைவிடக் கேவலமாக குரங்கு துாதுவனாக வந்ததுதான் எத்தனை கேலிக்கூத்து! என் தகுதிக்கு பொருத்தம் இல்லாத அற்ப ஜீவன் என் முன்னால் எக்காளமிடுகிறது. என் மகன் அட்சகுமாரன் உள்ளிட்ட பலரையும் அழித்திருக்கிறான் அந்த குரங்கான அனுமன். அது மட்டுமா... பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுண்டு, தர்பாருக்கு வந்த போது எனக்குக் கட்டுப்பட்டானா? உயர்ந்த என் சிம்மாசனத்துக்குச் சமமாக வாலால் ஆசனம் அமைத்தபடி சவால் விட்டானே! எப்படிப் பொறுத்துக் கொள்வது? இதற்கு தண்டனையாக அவன் வாலில் தீயிட்ட போது இலங்கையை எரித்தானே! என் நண்பன் வாலி போலவே பேராற்றல் பெற்றிருக்கிறானே... இவன்! வாலி என்றதும், அவனது வாலில் தன்னைக் கட்டிக்கொண்டு ஏழு கடல்களிலும் மூழ்கடித்ததை நினைத்தான். அந்த பயத்தால் உடலும் சிலிர்த்தது. ஆனால் சாமர்த்தியமாக வாலியுடன் சமரசமாகி ஒருவருக்கொருவர் ஆபத்து காலத்தில் உதவ வேண்டும் என ஒப்பந்தம் செய்து கொண்டோமே! ஆனால், அந்த வாலியை ராமன் கொன்று விட்டானாமே! அதுவும் மறைந்திருந்து கொன்றிருக்கிறான். அப்படியென்றால் வாலியின் வலிமை, ராமனுக்கும் தெரிந்திருக்கிறது என்று தானே அர்த்தம்! அத்தகைய ஆண்மை மிக்க நண்பனை இழந்துவிட்டேனே! இல்லாவிட்டால், இப்போது அவனது உதவி எனக்கு கிடைத்திருக்குமே! என்றெல்லாம் சிந்தித்த ராவணன் சட்டென்று தலையை சிலுப்பினான். என் உண்மையான பலத்தை உலகுக்குத் தெரிவிக்கத்தான் இவை எல்லாம் நடந்திருக்கிறது. வாலியின் உதவி இல்லாமல், தனி ஒருவனாக நான் ராமனை எதிர்ப்பேன், அந்த அற்ப மானிடனை வெற்றி பெற்று சீதையை அடைவேன். நணபனான வாலியின் உதவியால் அடைவதை விட, என் சுயபலத்தாலேயே விருப்பத்தை அடைவேன்’’ என ராவணன் கருதினான். முதலில் சீர்குலைந்த இலங்கை நகரை சீர்படுத்த விரும்பினான். கரி படிந்த அரண்மனை, மாளிகைகளை பழையபடி ஒளிவீசும்படி மாற்ற வேண்டும். வாடி வதங்கிய நந்தவனங்களுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும். யாரை ஏவி இந்த பணியை நிறைவேற்றலாம்? என யோசித்தான். இதற்கான நபர் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மன் தான். சிருஷ்டித்து அலுத்துப் போன அவனை, அழிந்த நகரை சீர்படுத்தும் மாற்றுப் பணியில் ஈடுபடுத்த விரும்பினான். . இந்த பிரம்மன் தானே ராவணனுக்கு வரம் அளித்தவர். ஆமாம்...கடுந்தவம் புரிந்த ராவணனுக்கு அவரே மனம் இரங்கினார்! கேட்கும் வரங்களை வழங்க முன் வந்தார். ஆனால் சாகாவரம் பெற்று தேவர்கள் போல தானும் வாழ வேண்டும் எனக் கோரிக்கை வைத்த போது, அதனால் பிரபஞ்ச அழிவிற்கு வழி ஏற்படுமே என பிரம்மன் யோசித்தார். எச்சரிக்கையுடன் ராவணனைக் கையாள வேண்டும் என தீர்மானித்து மகாவிஷ்ணுவைத் தியானித்தார். அவரது மனதிற்குள் தோன்றிய மகாவிஷ்ணு மெல்ல முறுவலித்தார். மத்சய (மீன்), கூர்ம (ஆமை), வராக (பன்றி), நரசிம்ம, வாமன, பரசுராம அவதாரங்களை மானசீகமாக அடுத்தடுத்துக் காண்பித்தார். பளிச்சென பொறி தட்டியது பிரம்மனுக்கு. எத்தகைய வரம் கொடுத்தாலும் ராவணனின் மரணம் பரமாத்மாவின் கையால் அமையும் என்ற உண்மை புரிந்தது. தான் நிரந்தரமானவனாக, என்றும் அழிவில்லாதவனாக, தேவர்களுக்குச் சமமானவனாக வாழ வேண்டும் எனக் கேட்ட போது, பிரம்மன் அவனது அகங்காரத்தையே மூலதனமாக்கி, வாழ்க்கை வியாபாரத்தை முடிக்க முடிவு செய்தார். யாரால் அழிவு ஏற்படக் கூடாது என்பதற்கான வரையறையை ராவணனிடமே கேட்டார் பிரம்மன். அலட்சியத்துடன் ராவணன், ‘‘ கடவுளர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், சக அரக்கர்கள், மிருகங்கள் என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போனான் ராவணன். இவர்கள் யாராலும் எனக்கு அழிவு நேரக்கூடாது’’ என்றான். உன்னிப்பாக கவனித்த பிரம்மன் அந்த பட்டியலில் மானுடர் இல்லை என்பதைக் கண்டு கொண்டார். ஆமாம், ராவணனுக்கு அவ்வளவு மெத்தனம். அற்ப மானிடர்கள் என்று மனித குலத்தை அவன் கருதி விட்டான். ஆகவே மானிடர் அன்றி வேறு யாராலும் அவன் கொல்லப்படமாட்டான் என வரம் அளித்தார் பிரம்மன். இந்நிலையில், இலங்கையை புனரமைக்கும் பணிக்கு பிரம்மனைஅழைத்தான் ராவணன். அவனைப் பொறுத்தவரை பிரம்மா ஒரு கடவுள் அல்லது வானுலக தேவன். அவரால் தனக்கு மரணம் ஏற்படாது என்ற நிலையில், அவரை அடிமையாக நடத்தினால் தவறில்லை? அது தனக்கு பெருமையே! அத்துடன் பிரம்மனை அடிமையாக்கினால், உலகம் தன்னை மதிக்கும் அல்லவா? எதிர்க்கும் எண்ணம் யாருக்கும் ஏற்படாது இல்லையா? என ராவணன் சிந்தித்தான். ராவணனுக்கு அழிவு நெருங்குவதை உணர்ந்த பிரம்மன் காட்சியளித்தார். ‘‘நான்கு முகம் கொண்ட பிரம்மனே! அனுமன் என்னும் அற்பக் குரங்கு என் நாட்டை சேதப்படுத்தி விட்டது. உடனே தேவதச்சன் மூலம் இலங்கையை பழையபடி ஒளிவீசச் செய்ய வேண்டும்,’’ என உத்தரவிட்டான். பிரம்மனும் அப்படியே செய்து விட்டு, ‘‘மனிதரைப் பற்றி தாழ்வாக கருதித்தானே சீதையை அபகரித்தாய்! அந்த சீதையின் கணவரான ராமன் என்னும் மானிடனால் அழியப் போகிறாய்! ஆணவத்தின் அழிவு இப்படித்தான் அமையும்’’ என மனதிற்குள் சிரித்தார்.
|
|
|
|