|
ஒரு சமயம், வள்ளலார் ஒற்றியூர் சத்திரத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் ஒரு திருடன் ஒசைபடாமல் பூனைபோல அவரருகே வந்து நின்றான். ராமலிங்கரின் காதில் கிடந்த கடுக்கன் (தங்கத்தோடு) திருடனின் கண்ணை உறுத்தியது. கடுக்கனைக் கழற்ற முயற்சித்தான். தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டாலும், வள்ளலார் எழுந்திருக்காமல் இருந்தார். திருடன் வலது காதில் கழற்றியதும் திரும்பிக் கொண்டு இடக்காதையும் காட்டினார். மகிழ்ச்சியோடு வேகமாக கழற்றிவிட்டு ஓட்டம் பிடித்தான். தன் வைராக்கியத்தை சோதிக்க வந்த குருவாக, அந்த திருடனை ஏற்றுக்கொண்டார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் உள்ளம் திருடனின் ஏழ்மையை எண்ணி வருந்தியது. பொன்னே! மணியே! முத்தே! இரிசப்ப செட்டியார் என்பவர் வள்ளலாரின் அன்பராக விளங்கினார். அவருடைய இல்லத்திற்கு வள்ளலார் வந்தபோது, நாதஸ்வர வித்வான்கள் மூவர் நாதஸ்வரம் வாசித்தனர். இசையை ரசித்துக் கேட்ட வள்ளலார் மிகவும் மகிழ்ந்தார். வித்வான்களுக்கு விபூதி வழங்கினார். முதலாமவரை, "நீ மணியே! என்றும், இரண்டாமவரை, ""நீ முத்தே என்றும், மூன்றாமவரை,""நீ பொன்னே! என்றும் வாழ்த்தினார். இதற்கு முன் வள்ளலாருக்கு நாதஸ்வர வித்வான்கள் அறிமுகம் கிடையாது. ஆனால், உண்மையிலேயே அவர்களின் பெயர்கள் திருவழுந்தூர் சுப்பிரமணி, திருப்பாதிரிப்புலியூர் முத்துவீரன், திருவயிந்திபுரம் பொன்னன் என்பதே ஆகும். வள்ளலாரின் வாழ்த்து தங்கள் பெயருடன் பொருந்தி வந்ததை நினைத்து அவர்கள் ஆச்சரியப்பட்டனர். |
|
|
|