|
சொக்கநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் பச்சைப்புடவைக்காரியைத் தரிசித்து விட்டு வெளியே வந்தேன். வழியில் வரிசையாகப் பெண்கள் அமர்ந்து பூ விற்றுக் கொண்டிருந்தனர். நடுவே பளிச்சென இருந்த ஒருத்தி பூக்கூடையைத் துாக்கிக் கொண்டு என் பின் வந்தாள். “சாமி... பூ வாங்கிட்டுப் போங்க!” மனம் ஏகக் குழப்பத்தில் இருந்தது. சில நிகழ்வுகள் நிஜமாகவே என் கண்முன் நடக்கிறதா, இல்லை, பச்சைப்புடவைக்காரி அவற்றை நிகழ்த்திக் காட்டுகிறாளா, இல்லை, நான் எப்போதோ கேட்டதில், படித்ததில் மனதின் ஆழத்தில் புதைந்து போயிருப்பவை வெளியே வருகிறதா எனப் புரியவில்லை. இப்படித்தான் மகா பெரியவா வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை நானே பார்த்தது போல் எழுதி விட்டேன். அது தவறல்லவா? இந்தக் குழப்பத்தில் பூ ஒன்று தான் குறைச்சல்? “குழப்பம் எதற்கு? நடந்தது நடந்து விட்டது. எல்லாம் ஒரு காரணத்திற்காகத் தான் நடந்தது. ஆகவேண்டியதைப் பார்.” பூக்காரியாகக் காட்சி தந்த பச்சைப்புடவைக்காரியின் காலில் விழுந்து வணங்கினேன். “உன் மனதில் ஏதோ கேள்வி இருக்கிறது எனத் தோன்றுகிறது.” “ஆம் தாயே! கடவுள் தரிசனம் கிடைக்கும் போது நெக்குருகிப் போகும், மயிர்க்கூச்செறியும், பேச்சே வராது. சிந்தனையும் செயலும் இல்லாத உன்மத்த நிலைக்குச் சென்றுவிடுவோம் என பல மகான்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உங்களை நான் அடிக்கடி பார்க்கிறேன். மனம் விட்டுப் பேசுகிறேன். எனக்கு அந்த மாதிரியான அனுபவங்கள் எதுவும் உண்டாகவில்லையே தாயே!” “உனக்காக என் கடவுள் தன்மையை மறைத்துக்கொண்டு உன் தாயாக வருகிறேன். அதனால்தான் உன்னால் இப்படிப் பேச முடிகிறது. என் பேச்சில் தப்புக் கண்டுபிடிக்க முடிகிறது. நான் சொல்லும் விஷயங்களை யோசித்துப் பார்த்துப் பதில் சொல்ல முடிகிறது.” “ஒரு முறை ஒரே ஒரு முறை என் முன்னால் கடவுளாகவே வாருங்களேன்!” “அப்படி வந்தால் அடுத்த கணம் நீ இருக்க மாட்டாய். என்னுடன் ஒன்றி விடுவாய். அதற்கு ஒரு காலம் வரும். அப்போது பார்க்கலாம்.” என் முகம் வாடிவிட்டதைப் பார்த்து அன்னை ஆறுதல் கூறினாள். “கடவுள் தரிசனம் எப்படி இருக்கும் என்று உனக்குச் செய்முறை விளக்கம் தருகிறேன். விழிப்புடன் இரு.” அன்று என் மாமனாரை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல நேரிட்டது. என்னதான் மருத்துவர் நண்பராக இருந்தாலும் என் செல்வாக்கை பயன்படுத்தினாலும் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க நேர்ந்தது மாமனாரும், என் மனைவியும் வேறு அறையில் இருந்தனர். நான் மருத்துவரின் அறைக்கு அடுத்து இருந்த காத்திருக்கும் அறையில் இருந்தேன். என்னுடன் பல நோயாளிகள் இருந்தனர். எனக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. நின்றபடியே சுற்றி நடப்பதை உள்வாங்கிக் கொண்டிருந்தேன். முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் காட்டுக் கூச்சல் இட்டாள். “எவ்வளவு நேரமா காத்துக்கிட்டிருக்கறது? மத்தவங்களாவது நல்லா நடக்கறவங்க. என் புருஷனால நடக்க முடியாது. நான் வெளியூரு. இப்ப பஸ் பிடிச்சிப் போனாலும், ஊரு போய்ச்சேர ராத்திரி பத்து மணியாயிரும். எனக்குப் பின்னால வந்தவங்க எல்லாம் பாத்துட்டாங்க. என்ன மட்டும் ஏன் அனுப்ப மாட்டேங்கறீங்க?” நர்ஸ் சமாதானம் செய்து பார்த்தார். அந்தப் பெண் அடங்கவில்லை. தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளின் முன்னுரிமை நெறிமுறைகள் என சகட்டு மேனிக்கு எல்லாவற்றையும் கரித்துக் கொட்டினாள். பொறுக்க முடியாமல் நர்சிடம் சொன்னேன். “இவர்களை உள்ளே அனுப்புங்கள். நாங்கள் இன்னும் ஒரு மணி நேரம் காத்துக்கொண்டிருக்கவும் தயார்.” “டாக்டர்கிட்ட சொல்லியாச்சு சார். சீக்கிரமே கூப்பிடறேன்னு சொல்லியிருக்காரு. எங்களுக்கு இந்தக் கத்தல் எல்லாம் பழகிருச்சி சார்.” அந்தப் பெண் இன்னும் கத்திக்கொண்டிருந்தார். “ஆஸ்பத்திரியா நடத்தறீங்க? கவர்மெண்ட்டுக்கு எழுதிப்போடறேன். கன்ஸ்யூமர் கோர்ட்ல கேசு போட்டு உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்” மருத்துவரின் அறைக்கதவு லேசாகத் திறக்க, உள்ளே எட்டிப் பார்த்தேன். மருத்துவர் என்னைப் பார்த்துவிட்டார். “அடடா நீங்களா? ஏன் சார் வெளியே நிக்கறீங்க? உள்ள வந்து உக்காருங்க.” காத்திருந்தவர்களின் சுட்டெரிக்கும் பார்வையை வாங்கியபடி உள்ளே போனேன். குசலம் விசாரித்த மருத்துவர் “இன்னும் கொஞ்சம் கேஸ் பாத்துட்டு உங்க மாமனாரைப் பாத்துடறேன். ஒண்ணும் அவசரம் இல்லையே?” “இல்ல டாக்டர்.” அடுத்து அறைக்குள் நுழைந்தவளைப் பார்த்ததும் எனக்கு குலை நடுங்கியது. சற்று முன் மருத்துமனை நிர்வாகத்தைக் கிழி கிழி என்று கிழித்த அந்த முப்பது வயதுப் பெண். “உன் புருஷன் நல்லா இருக்காராம்மா? நீ நல்லா இருக்கியா?” என கேட்டபடி கதவிடுக்கில் கைவிட்டு விளையாடிக்கொண்டிருந்த அவள் குழந்தையை விலக்கிவிட்டு அதனிடம் சாக்லெட் கொடுத்தார். மருத்துவரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் அவரைப் பார்த்து வணங்கினாள் அந்தப் பெண். இனி இவள் கத்தமாட்டாள் எனத் தோன்றியது. அடுத்த சில நிமிடத்தில் அந்தப் பெண்ணின் கணவர் வாக்கரைப் பிடித்தபடி நடந்து உள்ளே வந்தார். மருத்துவர் அவரை மறைவாக இருந்த ஒரு படுக்கையில் வைத்துச் சோதனை செய்தார். அவளது முகம் ஒரே உணர்ச்சிக் குவியலாக இருந்தது. மருத்துவரும் அவள் கணவரும் வெளியே வந்தனர். “அந்த வாக்கரைத் தள்ளி வைத்து விட்டுப் பிடிமானம் இல்லாமல் நடங்க, பார்ப்போம்.” “அப்படி நடக்கலாமா டாக்டர்?” “தாராளமா.” “கிழே விழுந்துர மாட்டேனே?” “அப்படி விழுந்தாப் பிடிக்க நான் இருக்கேன்ல? பயப்படாம நடங்க.” வாக்கரைத் தள்ளி வைத்துவிட்டு அந்தப் பெண்ணின் கணவர் இயல்பாகவே நடந்தார். நான்கு அடி கூட நடந்திருக்க மாட்டார். பெரிய விம்மல் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். அந்தப் பெண்தான். “டாக்டர் நீங்க கடவுள். என் புருஷன் இன்னிக்கு நடக்கறார்னா அதுக்கு நீங்கதான் காரணம். உங்க அருமை தெரியாம உங்களக் கன்னாப்பின்னான்னு திட்டிட்டேன். மன்னிச்சிருங்க டாக்டர்.’ ” அவளை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை. ‘அழாத புள்ள’ என கணவன் சொன்னதுகூட அவள் காதில் விழவில்லை. தொடர்ந்து விம்மி விம்மி அழுதாள். அதன்பின் அந்தப் பெண் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மாமனாரையும், மனைவியையும் காரில் அமரச்செய்துவிட்டு மருந்து வாங்க மீண்டும் மருத்துவமனைக்குள் நுழைந்தேன். உள்ளே இருந்த மருந்துக்கடையில் கூட்டமில்லை. அங்கிருந்த பெண்ணிடம் மருந்துச் சீட்டைக் கொடுத்தபோது, அவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். “என்னப்பா கடவுள் தரிசனம் எப்படி இருந்தது?” கேட்டவள் மகா மருத்துவச்சி என்பதை உணர்ந்து காலைத் தொட்டு வணங்கினேன். “தாயே! உங்களின் இருப்பை மூர்க்கத்தனமாக மறுக்கும் நாத்திகர்களும், உங்களை நம்பி, ஆனால் நீங்கள் அருள்பாலிக்கவில்லை என உங்களைக் குறை கூறும் ஆத்திகர்களும் சொல் இழந்து, செயல் இழந்து, ஏன் தன்னையே இழக்கும் நிலையே கடவுள் தரிசனம். இன்று மருத்துவருக்காகக் காத்திருந்த போது அவரை பழித்தது அந்தப் பெண்தான். அவர் முன்னிலையில் பேசமுடியாமல் விக்கி விக்கி அழுததும் அவள் தான். இப்படித்தான் பலரது நிலை இருக்கப்போகிறது.” “நீ விரும்பினால் இப்போதே உனக்கு கடவுள் தரிசனம் தருகிறேன்.” “இது என்ன பேச்சு, தாயே! எனக்கென எப்படி தனிப்பட்ட விருப்பம் இருக்க முடியும்? நான் உங்கள் கொத்தடிமை என்பதை மறந்தீர்களா? நீங்கள் என்னை ஒரு நாட்டுக்கு அரசனாக வைத்தாலும், நரகத்தின் பாதாளத்தில் வேக வைத்தாலும் ஏன் என்று கேள்வி கேட்கும் உரிமையில்லாத கொத்தடிமை, தாயே! என்னைப் பொறுத்தவரை என் விருப்பம், என் அகந்தை, என் மனம் என்று எதுவும் அற்ற நிலையே முழுமையான தரிசன நிலை.” “நானும் அதைத் தானடா சொல்கிறேன். அப்படி ஒரு நிலை வந்தால் அங்கே நீ இருக்கமாட்டாய். நான் மட்டுமே இருப்பேன். அன்பு மட்டும் தான் இருக்கும். இப்போது புரிகிறதா?” கையில் இருந்த மருந்துப் பொட்டலங்களைக் கீழே போட்டுவிட்டு அவள் காலடியில் விழுந்தேன். நிமிர்ந்து பார்த்தபோது அங்கே அவள் இல்லை.
|
|
|
|