|
குவித்து வைத்த கைகளை மெல்லப் பிரித்தாள் சீதை. தாமரை மலர் போல சிவந்த கைகளின் நடுவே ராமனின் கணையாழி கண் சிமிட்டி ஒளிர்ந்தது. மெல்ல கைகளை முகத்தின் அருகே கொண்டு வந்து கணையாழியை முத்தமிட்டாள். மெய்மறந்த அவள் ராமன் விரலுக்கு கணையாழி வந்த கதையை மனதிற்குள் ஓடவிட்டாள். ராமனின் துாதன் தான் என்பதை நிரூபிக்கும் சாட்சியாக அனுமன் கொண்டு வந்த கணையாழி, சீதையின் தந்தை ஜனகர் திருமணப் பரிசாக அளித்த சீர் வரிசைகளில் ஒன்று. காட்டுக்கு போகும் நிர்ப்பந்தத்தால் அலங்காரங்களை நீத்த ராமன், கணையாழியை மட்டும் விரலோடு கொண்டு சென்றான். ‘ஜனகர் என் மாமனார் மட்டுமல்ல, அவர் ஒரு ராஜரிஷி. எதிலும் பற்றில்லாமல் சலனம் அற்றவராக வாழ்ந்தவர். அவரது அன்பளிப்பு என்னிடம் இருந்தால், சிரமம் இன்றி, நிர்ணயிக்கப்பட்ட காலத்தைக் காட்டில் எளிதாகக் கழிப்பேன்’ என்ற நியாயமான காரணத்தை எண்ணினான் ராமன். ராமனைப் போல தான் சீதையும் எப்போதும் அலங்கார பூஷிதையாக வலம் வருவாள். அவளும் காட்டிற்குச் செல்ல முடிவெடுத்த பின் ஆபரணங்களை களைந்தாள். ஆனால் சூளாமணியை மட்டும் தலைப் பின்னலில் வைத்துக் கொண்டாள். ஆமாம், அது மாமியார் கோசலை அன்புடன் அளித்த ஆபரணங்களில் ஒன்று. சேடிப் பெண்கள் பலர் இருந்தும் கூட, பெற்ற தாய் போல சீதைக்கு தலை வாரி, பூச்சூட்டி, ஆபரணம் அணிவித்து அழகு பார்த்தவள் கோசலை. பிறந்த வீட்டை விட, புகுந்த வீட்டுப் பெருமை பேசுவது தான் பெண்ணிற்கு அழகு என்ற இலக்கணத்தை உணர்ந்த சீதை, அதை நிலைநாட்ட சூளாமணியை அணிந்தாள். இவர்களின் இந்த நிலைப்பாடுதான் எவ்வளவு நன்மையாக முடிந்தது! ராமன் மீட்க ஏற்பாடு செய்கிறான் என்பதை கணையாழி மூலமாக சீதையும், சீதை உயிருடன் இருக்கிறாள் என்பதை அனுமன் கொண்டு வந்த சூளாமணி மூலமாக ராமனும் அறிந்து கொண்டார்களே! காட்டு வழியில் இருவரும் அத்திரி முனிவர், அனுசூயா தம்பதியரை சந்தித்தனர். ஓடோடி வந்து அவர்களை அத்திரி வரவேற்றார். அனுசூயாவும் அன்புடன் உபசரித்தாள். சீதையை தன் பெண் போல பாவித்தாள். மிதிலைக்கு வந்து விட்ட பிரமை சீதைக்கு ஏற்பட்டது. தந்தை ஜனகர், தாய் சுநைனா எப்படி பாராட்டுவார்களோ அதற்குச் சிறிதளவும் குறையாமல் கவனித்துக் கொண்டனர். என்ன இவர்களிடம் ராஜ தோரணை இல்லை. ஆனால் அதே கனிவு, பரிவு, பாசம், அக்கறை எல்லாம் இருந்தன. ஆயிரம்தான் கணவரும், கணவர் வீட்டாரும் அனுசரணையாக இருந்தாலும், பெற்ற தாயின் பாசத்திற்கு ஈடாகுமா? அந்த உணர்வை அனுசூயாவிடம் அடைந்தாள் சீதை. காலையில் நீராடியதும் சீதைக்கு தலை வாரி, பூச்சூட்டி, திலகமிட்டு அழகுபடுத்துவாள். எளிய ஆனால் சுவையான உணவை அளித்து மகிழ்வாள் அனுசூயா. ஒருநாள் அவள் ஒரு மூட்டையை எடுத்து வந்து பிரித்தாள். அவ்வளவும் அலங்கார நகைகள். அவற்றைப் பார்த்ததும் சீதைக்குக் கண்களில் நீர் நிறைந்தது. தன் தாய் சுநைனை தனக்கு நகைகளை அணிவித்து அழகு பார்த்தது நினைவுக்கு வந்தது. அதே பாசம் இங்கேயும் பரிமளிப்பதை உணர்ந்து நெகிழ்ந்தாள். ஆனால் ராமன் தன்னையே பார்ப்பதைக் கண்டதும் தயங்கினாள். ‘வேண்டாம்’ என்றிடுவானோ? ‘காட்டுக்கு செல்லும் போது ஏக்கத்தை துறக்க வில்லையோ எனக் கேட்பானோ? ‘நகைகளை அயோத்தி அரண்மனை பெட்டிக்குள் வைத்துப் பூட்டி விட்டு, மனசுக்குள் ஆசையை மறக்காமல் பூட்டிக் கொண்டு வந்து விட்டாயா என்பானோ?’ சீதையின் தயக்கம் அனுசூயாவுக்குப் புரிந்தது. அவள், ‘‘ராமா.... நான் மகாலட்சுமியை பூஜிப்பவள். மலராலும், வில்வ இலைகளாலும் மட்டும் இல்லாமல் நகைகளை மகாலட்சுமி விக்ரகத்துக்கு அணிவித்து மகிழ்பவள். ‘உடலும், உயிருமாக நீ என் முன்னர் வரவேண்டும்; அப்போது நான் இந்த நகைகளைப் பூட்டி அழகு பார்க்க வேண்டும் அம்மா,’ என நயந்து வேண்டிக் கொண்டது இப்போது தான் என் வாழ்வில் நிறைவேறுகிறது. ஆனால் பூஜைக்காக அன்றி, வேறு எதற்காகவும் இந்த நகைகளை பயன்படுத்தியதில்லை. அதே போல ஆசைகளைத் துறந்த சீதையாகிய இந்த மகாலட்சுமியும் தற்காலிகமாகத்தான் இந்த நகைகளை எனக்காக ஏற்கிறாள்!’’ என்றாள். ராமன் கண்களில் இப்போது நிம்மதி ஒளி தெரிந்தது. ‘தற்காலிக’ அலங்காரம் என்றதால் ஆபரணங்கள் மீது சீதை ஆர்வம் காட்டமாட்டாள் என நினைத்தான். சீதையும் அதைப் புரிந்து கொண்டாள். அனுசூயாவின் அன்பை ஏற்று மரவுரி மீது ஆபரணம் அணிந்தாள். மெல்ல நடந்து குடிலுக்கு அருகிலுள்ள தடாகத்திற்குச் சென்று எட்டிப் பார்த்தாள். நீருக்குள் பிம்பத்தைக் கண்டாள். பெண்மையின் இயல்பாக, தன் இளமையின் மீது கர்வம் கொண்டாள். மின்னும் நகைகள் மேலும் அழகூட்டிய அற்புதம் கண்டு நாணம் கொண்டாள். குடிலுக்குத் திரும்பிய சீதையை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் அனுசூயா. ராமனும் மனசுக்குள் கிளர்ந்தான். இப்படி ஒரு அழகை, இத்தனை நாளும் ரசிக்க இயலாமல் போனதை எண்ணி சற்று வருந்தினான். காட்டிலும் இல்வாழ்வின் இனிமை மலர்வதை உணர்ந்தான். ராமனின் காதலை மானசீகமாக உணர்ந்த சீதை, இயல்பான நிலைக்கு திரும்ப நகைகளைக் கழற்றினாள். தான் விரும்பியது போல மகாலட்சுமியான சீதைக்கு ஆபரணம் அணிவித்து அழகு பார்த்த அனுசூயா, நகைகளை பழையபடி மூட்டையாகக் கட்டினாள். ‘‘ சீதை...இவை உனக்குரியது அம்மா, எடுத்துக் கொள். முனிவரை மணந்ததால், இந்த நகைகள் உபயோகமற்ற பொருளாக பரண் மீது துாங்கிக் கொண்டிருந்தன. மகாலட்சுமிக்கு அணிவிக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தேன். அதுவும் இப்போது நிறைவேறியது. இனி இவை உனக்கே சொந்தமானது’’ என்றாள். ராமனும் சம்மதமாகத் தலையசைத்தான். சீதை அந்த நகைகளை வாங்கிக் கொண்டாள். அவை வெறும் ஆபரணம் அல்ல; தான் கடத்தப்படும் துன்பத்தை அடையாளம் காட்டப்போகும் சாதனம் என்பதை உணராமலேயே! ராவணனால் கடத்தப்பட்ட போதும் சரி, அசோகவனத்தில் சிறைப்பட்டிருக்கும் போதும் சரி அனுசூயா அளித்த நகைகள், ராமனின் கணையாழி எத்தனை பெரிய ஆறுதலைத் தந்தன என்பதை எண்ணி சீதை நிம்மதி பெருமூச்சு விட்டாள். ................ |
|
|
|