|
ஒரு ஊரில் அருகருகே இரண்டு பால்காரிகள் வசித்தனர். ஒருத்தி பணக்காரி. ஐந்து பசுக்கள் வைத்திருந்தாள். ஆடம்பரமாக செலவழிப்பாள். இன்னொருத்தியிடம் ஒரே ஒரு பசு தான் இருந்தது. அதன் மூலம் கிடைத்த பாலை விற்று சிக்கனமாக குடும்பம் நடத்தினாள். பணக்காரிக்கு அடுத்தவர் பொருளைக் கவர்வதில் அலாதி பிரியம். ஏழை பால்காரியிடம்,“என் வீட்டு மாடுகள் தரும் பால் போதவில்லை. தினமும் எனக்கு கொஞ்சம் பால் கொடு. நீ கேட்கும் போது மொத்தமாக திருப்பித் தருகிறேன்,” என்றாள். இரக்கமுள்ள ஏழை பால்காரியும் பாவம் என்று சம்மதித்தாள். ஒருநாள் ஏழை பால்காரியின் மாடு நோய்வாய்ப்பட்டு படுத்தது. அதனால் பால் கறக்க முடியவில்லை. அதனால் பணக்காரியிடம் போய், ‘‘அக்கா! இதுவரை ஐம்பது படி பால் தந்துள்ளேன். அதை தினமும் ஒருபடி வீதம் திருப்பித் தந்தால், என் குடும்பத் தேவையை சமாளித்து விடுவேன். அதற்குள் பசுவும் குணம் பெற்று விடும்” என்றாள். பணக்காரி தன் ஏமாற்று வித்தையைக் காட்ட முடிவெடுத்தாள். ‘‘ பஞ்சப்பராரியான உன்னிடம் பால் வாங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை’’ என்றாள். வருத்தப்பட்ட ஏழை பால்காரி பஞ்சாயத்தாரிடம் முறையிட்டாள். நீதிபதி இருவரையும் அழைத்து விசாரித்தார். ஏழையிடம் உண்மை இருப்பதை புரிந்து கொண்டார். அதை சோதித்துப் பார்க்க ஒரு தேர்வு வைத்தார். “இதோ இங்குள்ள கிணற்றடியில் பத்து செம்பு தண்ணீர் வைத்திருக்கிறேன். இருவரும் ஆளுக்கு ஐந்து செம்பாக எடுத்து கால்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள்” என்றார். பணக்காரி ஐந்து செம்பு தண்ணீரையும் கடமைக்கு காலில் ஊற்றி விட்டு திரும்பினாள். ஏழையோ ஒரு செம்பு தண்ணீரில் காலை சுத்தமாக கழுவி விட்டு, நான்கு செம்பு தண்ணீரை அப்படியே விட்டு விட்டாள். ‘‘ஏழைப்பெண் சிக்கனமானவள் என்பதை நிரூபித்து விட்டாள். பணக்காரியோ ஐந்து செம்பு தண்ணீரைக் காலி செய்தது மட்டுமின்றி கால்ளையும் சுத்தமாக்கவில்லை என்பதால் ஆடம்பரமாக செலவழிப்பவள் என்பது புரிகிறது. பணக்காரியே தண்டனைக்குரியவள். ஐந்து மாடுகள் இருந்தாலும் ஆடம்பரமாக செலவழித்தால் உன்னைப் போல அடுத்தவரிடம் கடன் வாங்கத் தான் நேரிடும்’’ என தீர்ப்பளித்தார் நீதிபதி. ஒருவரின் குணத்தை அவருடைய செயலே வெளிப்படுத்தி விடும் அல்லவா!.
|
|
|
|