|
ஒரு வீட்டிற்கு வந்த வியாபாரி ஒருவர் வீட்டுக்காரரரிடம், “ஐயா! இந்த ஊரில் ஒருமாதம் தங்கி வியாபாரம் செய்ய விரும்புகிறேன். அதுவரை இங்கு தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் தேவையான பணத்தையும் கொடுக்கிறேன். தங்களின் அனுமதி கிடைக்குமா?,” எனக் கேட்டார் வீட்டுக்காரரும் சம்மதித்தார். வியாபாரி தினமும் இரவு வீட்டுக்கு வந்ததும், பெரும் பணத்தை எண்ணி விட்டு துாங்கச் செல்வார். அதைப் பார்த்த வீட்டுக்காரனுக்கு பணத்தை அபகரிக்கும் எண்ணம் வந்தது. அதற்காக வியாபாரி துாங்கும் வரை காத்திருந்த பின், அவரது தலையணைக்கு கீழிருக்கும் பையில் துழாவிப் பார்த்தான். பணம் சிக்கவில்லை. ஆனால் காலையில் வியாபாரி தன் சட்டை பாக்கெட்டில் பணம் வைப்பதைப் பார்ப்பார். “இந்த மனுஷன் எங்கு தான் ஒளித்து வைப்பானே தெரியவில்லையே! இரவில் பணத்தைக் காணவில்லை. ஆனால் காலையில், எப்படியோ கையில் பணம் இருக்கிறதே!” எனத் தவித்தார். துாக்கம் அறவே போனது. வீட்டுக்காரர் திருதிருவென விழிப்பதைப் பார்த்த வியாபாரி, “என்னப்பா பணத்தை தேடுகிறாயா?” எனக் கேட்டார். “நீங்கள் என்ன மந்திரவாதியா? காலையில் பணம் இருப்பதும், இரவில் காணாமல் போவதன் மர்மம் தான் என்ன? பணத்தை எங்கு தான் வைத்து பாதுகாக்கிறீர்கள்?” எனக் கேட்டான். “உன் படுக்கைக்கு கீழே பார்,” என்றார் வியாபாரி. அவனும் பார்க்க, அடியில் பணம் இருந்தது. “நீ என் பொருட்களை நோட்டமிட்டதை நான் பார்த்துவிட்டேன். எனவே, உன் படுக்கையின் அடியிலேயே வைத்து விட்டேன். இது தான் நான் செய்த தந்திரம்,” என்றார். வீட்டுக்காரன் தலை குனிந்தான். அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படுவது அவமானத்தை தரும்.
|
|
|
|