|
ஒருமுறை கைலாயம் சென்ற நாரதர், மோட்சம் பெறும் வழியைத் உபதேசிக்கும்படி சிவனிடம் வேண்டினார். ‘‘நாரதா... மோட்சம் என்பது எத்தனை பெரிய பாக்கியம். அதை பெறுவது எளிதல்லவே... அதிலும் பிரம்மச்சாரி ஒருவன் உடல், உள்ளத்தைக் கட்டுப்படுத்துவது பெரும்பாடு. புலன்களை ஒடுக்கி, மனதை ஒருமுகப்படுத்தினால் மட்டுமே மோட்சத்திற்குச் செல்லும் வழி புலப்படும். ஐம்புலன்களை ஆட்டுவிக்கும் மனதை கட்டுப்படு அதனதன் போக்கில் அலையவிடக் கூடாது. எப்போதும் இனிய சொற்களைப் பேச வேண்டும். கடவுளுக்குப் படைக்கும் பிரசாதத்தை மட்டுமே உண்ண வேண்டும். மனதாலும், நாவாலும் பகவான் நாமத்தை ஜபிக்க வேண்டும். விழித்திருக்கும் போது மட்டுமின்றி, துாங்கும் போதும் ஜபிக்கும் பழக்கம் வேண்டும்’’ என்றார் சிவன். அப்படியே ஏற்ற நாரதர் எட்டெழுத்து மந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்டார். கூடவே இசை ஆர்வத்துக்கும் தீனி போட ஆரம்பித்தார் நாரதர். இசை வல்லுநர்களிடம் இசை கற்றார். ஒருசமயம் சரஸ்வதியிடம் இசை கற்றதோடு, அவளது வீணையையும் பெற விரும்பினார். அதற்காக அவர்களின் திருவடியில் விழுந்து வணங்கினார். ‘‘நாரதா, என்ன வேண்டும்?’’ என அவர்கள் கேட்டனர். ‘‘இசைத் திறமை மேலும் வளரவேண்டும்; தங்களைப் போல எனக்கும் வீணை வேண்டும். அதை இசைக்கும் ஆற்றலும் பெற வேண்டும். இசையால் பக்தியைப் பரப்ப அருள்புரிய வேண்டும்’’ என்றார் நாரதர். இதைக் கேட்ட பிரம்மாவும், சரஸ்வதியும் அவரது பொதுநலத் தொண்டைப் பாராட்டினர். ஞானத்தை அளித்தார் நான்முகனான பிரம்மா. சரஸ்வதியும் ஒரு வீணையை அளித்தாள். கூடவே பாடும் ஆற்றலை வழங்கினாள். ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரத்தை ஆதாரமாக வைத்து வீணா கானம் இசைத்தார் நாரதர். காண்போரை கவரும்படி கானம் இசைத்து உலா வந்தார். அவரது சேவை பெருக வேண்டும் என விரும்பிய பிரம்மனும், சரஸ்வதி, ‘‘நாரதா! இலங்கையிலுள்ள மாதையூர் சிவனை தரிசித்தால் பல மேன்மைகள் உண்டாகும்’’ என்றனர். அதன்படி மாதையூருக்குச் சென்ற நாரதர் உள்ளம் உருக சிவனைப் பாடிப் பணிந்தார். அதில் ஈடுபட்ட சிவன், ‘‘நாரதா, என்ன வேண்டும்?’’ என்றார். ‘‘எம்பெருமானே! நினைத்த உடனே எங்கும் செல்லும் ஆற்றல் வேண்டும். தீயவர் கூட மனம் திருந்தி கடவுளைச் சரணடைய வேண்டும்,’’ எனக் கேட்டார் நாரதர். ‘‘நாரதா, விரும்பிய படியே திரிலோக சஞ்சாரி ஆனார். ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழிலில் ஈடுபட்டால் கூட கானம் இசைத்து குறுக்கிடலாம். அந்த உரிமை உனக்கு உண்டு’’ என்றார் சிவன். நாரதரின் வீணைக்கு ‘மகதி’ என்று பெயர். அதை மீட்டியபடி, எல்லா உலகங்களுக்கும் பயணம் செல்ல ஆரம்பித்தார். வேதம், ஆகமங்கள் எல்லாம் நாரதரின் புகழைப் பாட தொடங்கின.
|
|
|
|