|
காட்டில் இருந்த காலத்தில் சீதை பெண் துறவி ஒருவரைச் சந்தித்தாள். அத்துறவி, ‘‘மகளே! நீ அழகாக இருக்கிறாய், எல்லோருக்கும் அழகாகப் பிறக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. உன் கணவனைப் பார்த்தாலே நல்லவர் என்பது தெரிகிறது. மனைவியின் மனம் கோணாமல் நடக்கும் கணவரை அடைவதும் அரிது. அதுவும் உனக்கு வாய்த்திருக்கிறது. அது மட்டுமல்ல! உன்னைப் பார்த்தால், கணவருக்கு பணிந்து நடப்பவள் என்பது தெரிகிறது. ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ என வாழும் பெண்ணே பாக்கியசாலி. எல்லாவிதத்திலும் கொடுத்து வைத்தவள் நீ. நலமுடன் வாழ்வாயாக!’’ என வாழ்த்தினார். ‘‘அம்மா! தாங்கள் சொல்வது உண்மை என்றாலும், ‘நான் அவருக்கு பணிந்து நடக்கிறேன்’ என்பதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஏனெனில் நான் பணிவுடன் நடக்கிறேனா... இல்லை... அவர் பணிவுடன் நடக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. நான் சொல்வதை அவரோ, அவர் சொல்வதை நானோ இதுவரை மறுத்ததில்லை. அவர் என்னுடையவர், நான் அவருடையவள் என்ற எண்ணம் இருப்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்கிறோம்’’ என்றாள் சீதை. கணவனும், மனைவியும் எப்படி வாழ வேண்டும் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
|
|
|
|