|
மன்னர் ஒருவனுக்கு கலைப்பொருட்கள் மீது தீராத ஆசை. கலைநயம் மிக்க பளிங்குச் சிலைகளை வெளிநாட்டில் இருந்து வரவழைத்தான். அவற்றைப் பார்த்து பார்த்து ரசித்தான். அவற்றில் சிறு துாசு படிவதைக் கூட அவன் விரும்பவில்லை. சிலைகளைத் துடைக்க ஒரு பணியாளனை நியமித்தான். ஒருநாள் பணியாளனின் கவனக்குறைவால் பளிங்கு சிலை ஒன்று தவறி விழுந்து உடைந்தது. விஷயம் அறிந்த மன்னர் தண்டனையாக பணியாளனுக்கு நுாறு கசையடிகள் கொடுத்தான். இருப்பினும் கோபம் அடங்காததால், பணியாளனைத் துாக்கிலிடவும் உத்தரவிட்டான். அந்த நேரத்தில் குலகுரு அரண்மனைக்கு வந்தார். நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட அவர், ‘‘சிலை இப்படித்தான் உடைந்ததா?’’ என்று கேட்டபடியே அருகில் இருந்த மற்றொரு சிலையைக் கீழே தள்ளினார். அதுவும் மன்னரின் கண் முன்னர் நொறுங்கியது. கோபத்தின் உச்சிக்கு சென்ற மன்னர், ‘‘குருவே! உமக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா?’’ எனக் கத்தினான். ‘‘அப்பனே! பைத்தியம் உனக்குத் தான். அழியும் பொருள் மீது ஆசை என்னும் பித்து கொண்டுள்ளதால், விலை மதிப்பற்ற மனித உயிரைப் பறிக்கத் துணிந்து விட்டாய். சிலையை உடைத்த எனக்கும் மரண தண்டனையளிக்க உத்தரவிடு’’ என்றார். தவறை உணர்ந்த மன்னன் பணியாளனை உடனடியாக விடுவித்தான். நாரதரின் வீணாகானம் |
|
|
|