|
சென்னையில் இருக்கும் ஒரு அமைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவாற்ற என்னை அழைத்திருந்தனர். பச்சைப்புடவைக்காரியின் அன்பைப் பற்றிய பேச்சு என்பதால் ஆர்வத்துடன் ஏற்றேன். நிகழ்வு தொடங்கும்முன் மேடைக்குப் பின்புறம் இருந்த அறையில் அமைப்பின் தலைவருடன் பேசிக்கொண்டிருந்தேன். ‘‘நிறையக் கேள்விகள் வரும். ஜாக்கிரதையாப் பதில் சொல்லுங்க சார்’’ தலைவரின் குரலில் ஒரு மெல்லிய அச்சுறுத்தல். “எந்த மாதிரியான கேள்விகள் வரும்?” “தப்பு பண்றவங்கள ஏன் பச்சைப்புடவைக்காரி தண்டிப்பதில்லை? தப்பே செய்யாதவங்களை ஏன் படாத பாடு படுத்தறா. கோடிக்கணக்குல கொள்ளையடிக்கற அரசியல்வாதி சந்தோஷமா இருக்கான். நேர்மையாக வாழ்ற ஏழைக்கு எதுக்கு நோயையும் பிரச்னைகளையும் வரணும்? இந்த மாதிரி வில்லங்கமான கேள்வி கேட்க ஒரு கூட்டமே காத்திருக்கு சார்.’’ “அவள் என்ன திட்டமிட்டிருக்கிறாள் என்று எனக்கு எப்படி ஐயா தெரியும்?” “நீங்க அவளோட பக்தனாச்சே?” “நான்தான் அவளோட கொத்தடிமை. அவ எனக்கு கட்டுப்பட்டவ இல்ல’’ “இதையெல்லாம் அங்க வந்து சொல்லுங்க. உங்களக் கிழி கிழின்னு கிழிக்கப் போறாங்க பாருங்க.” எனக்கு குலை நடுங்கியது. “நல்லா யோசிச்சி வைங்க. பத்து நிமிஷத்துல நிகழ்ச்சி ஆரம்பிச்சிடும்’’ என்று சொல்லியபடி தலைவர் வெளியேறினார். அவர் போனதும் விளக்குமாறு ஏந்தியபடி பெண் ஒருத்தி வந்தாள். “நான் வெளியே போகணுமாம்மா?” ‘‘எனக்கு வெளியே என்று எதுவும் கிடையாதே? எப்படியப்பா போவாய்?’’ மனதில் இருக்கும் குப்பைகளை கூட்டித் தள்ளும் அன்பு என்ற விளக்கமாறுடன் வந்திருக்கும் வாகீஸ்வரியை வணங்கினேன். “அந்தக் காட்சியைப் பார்.” அந்தக் காட்சியின் நாயகன் ஒரு கந்துவட்டிக்காரன். அறுபது வயதிருக்கும். அநியாய வட்டிக்குக் கடன் கொடுத்து, ஏழைகளின் வயிற்றில் அடித்துக் கோடிக்கணக்கில் குவித்திருந்தான். கடனை வசூலிக்க கொலை, கற்பழிப்பு என பாதகங்களைச் செய்பவன். அவனிடம் பலரும் தாலிகளை அடகு வைத்திருந்தார்கள். இன்னும் பல பெண்கள் அவனால் தாலியை இழந்திருக்கிறார்கள். ஒருசமயம் நாற்பது வயதுக்காரர் ஒருவர் வீடு கட்ட, கடன் வாங்கி அதைக் கொடுக்க முடியாமல் போனதால் அவரது வீட்டையே எடுத்துக்கொண்டான். இன்னொருவர் கடனைத் திருப்பித் தராத போது, அவரது மனைவியைத் துாக்கிக்கொண்டு வந்து கற்பழித்திருக்கிறான். “எவனுக்கெல்லாமோ சாவு வருகிறதே தாயே! இந்தக் கிராதகனுக்கு மட்டும் சாவே வராதா?’ “மீனாட்சி! உனக்கு கண் என்ன குருடா? உன்னுடைய ஊர்ல இப்படி ஒரு அநியாயம் நடக்குது பாத்துக்கிட்டுச் சும்மா இருக்கியே?’ பச்சைப்புடவைக்காரியைப் பலரும் ஏசினர். காட்சி மாறியது. கந்துவட்டிக்காரனுக்கு ஒரே மகன். நாற்பது வயது இருக்கும். தந்தையின் போக்கு அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. தந்தையிடம் பணத்தையோ, பரிசையோ வாங்க மறுப்பான். “இது ஏழைங்க ரத்தத்தால வந்த பணம்ப்பா. இதத் தொட்டா எனக்கும் பாவம் ஒட்டிக்கும்.” எனக் கத்துவான். தந்தையுடன் இருக்கக் கூடாது என்பதற்காகவே ஊரைவிட்டு வெளியேறி சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்தான். மனைவி, ஒரே மகனுடன் சென்னையில் வாழ்ந்தான். ஒரு நாள் மாலையில் அலுவலகத்திலிருந்து காரில் வீடு திரும்பிய போது அவனுக்குத் தலை சுற்றியது. காரை ஓரம் கட்டினான். நல்லவேளையாக நண்பன் ஒருவன் உடனிருந்தான். அவன் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றான். போகும் வழியில் கந்துவட்டிக்காரனின் மகன் ரத்தவாந்தி எடுத்தான். கார் எங்கும் ரத்தம். மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் ‘ரத்தப் புற்று. முற்றி விட்டது. அதிக நாள் தாங்காது.’ என மருத்துவர்கள் தெரிவித்தனர். கந்துவட்டிக்காரன் பதறிப்போய் சென்னைக்கு ஓடினான். ராஜ வைத்தியம் பார்த்தும், ஒரே மாதத்தில் மகன் இறந்தான். கந்துவட்டிக்காரன் தன் மருமகள், பேரனை மதுரைக்கு அழைத்து வந்தான். பேரன் நன்றாகப் படித்தான். ப்ளஸ் டூவில் அதிக மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றான். மதுரை மருத்துவக் கல்லுாரியிலேயே இடம் கிடைத்தது. முதலாண்டு தேர்வு சமயம், ஒருநாள் இரவு தலை மிக வலிக்கிறது எனக் கதறினான் பேரன். மருத்துவமனையில் சேர்த்தனர். மூளையில் கட்டி இருப்பதால், இன்னும் ஒரு வருடம் வாழ்ந்தால் அதிகம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். “பார்த்தாயா? அவன் செய்த பாவங்களுக்கு கிடைத்த தண்டனையை?” எனக்குப் பற்றிக்கொண்டு வந்தது. “என்ன கொடுமை தாயே இது! பாவம் செய்தவன் கந்துவட்டிக்காரன். அவன் கல்லைப் போல் இருக்கிறான். இந்தப் பாவம் வேண்டாமென்று வேற்றுாரில் நியாயமாக வாழ்ந்த மகனைக் காவு வாங்கினீர்கள். ஒரு பாவமும் அறியாத பேரனுக்கும் மரண தண்டனை கொடுத்தீர்கள். ஏன் இந்தக் கொடுமை?” “உன் அலுவலகத்தில் எடுபிடி வேலைக்கு படிப்பறிவில்லாத பையன் ஒருவன் இருக்கிறானே... சிக்கலான வருமான வரி வழக்கில் நீ எடுக்கும் முடிவு தவறு என அவன் வாதம் செய்தால் என்ன செய்வாய்?” “ பளார் என்று கன்னத்தில் அறைவேன், தாயே!” “அதை நான் செய்யட்டுமா?” “தாயே!” “ அந்த பையனைப் போல் நான் வகுத்த கருமக் கணக்கில் விஷயம் தெரியாமல் மூக்கை நுழைக்கிறாய்.” “கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள் தாயே’’ “சொல்கிறேன். கந்துவட்டிக்காரன் என்னுடைய பக்தன். முற்பிறவியில் அவன் பலரை வாழ வைத்திருக்கிறான். அவன் நல்வினைப்பயன் நிறைய மிச்சம் இருக்கிறது. இந்தப் பிறவியில் பணத்தாசையால் தடம் புரண்டான். சென்ற பிறவியில் நல்லவனாக இருந்தானே என்பதற்காக ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கிறேன். இந்தப் பூமியில் சில ஆண்டுகள் மட்டுமே வாழ வேண்டிய நிலையிலுள்ள இரண்டு ஜீவன்களை, அவனுக்கு மகன், பேரனாகப் பிறக்க வைத்தேன். அவர்கள் காலக்கணக்கு முடிந்ததும் அந்த உயிர்களைப் பறித்துக்கொண்டேன். இது அவனுக்கு வலுவான நினைவூட்டலாக அமைந்துவிட்டது. கந்துவட்டிக்காரன் கலங்கிவிட்டான். இப்போது தொழிலைக் கைவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கும் முடிவுக்கு வந்து விட்டான்.” “முற்பிறவியில் நல்லவனாக வாழ்ந்தவன் ஏன் திடீரென தீயவனாக மாறினான்?” “நல்லவர்கள் முதலில் லேசாகப் பெருமைப்படுகிறார்கள். படிப்படியாக கர்வம் வருகிறது. என்னைவிட நல்லவர்கள் யாருமில்லை என்ற எண்ணம் பிறக்கிறது. நான் நல்லவன் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிறார்கள். தீமை பிறக்கிறது. இது கந்துவட்டிக்காரன் கதை மட்டுமல்ல; பண்டாசுரன் போன்ற அசுர்களின் கதையும் இதுதான்.” நான் உறைந்து போயிருந்தேன். “நீயும் அந்தப் பாதையில் செல்லக் கூடாது என்று எச்சரிக்கவே வந்தேன். நீ நல்லவனா, கெட்டவனா?” “இரண்டும் இல்லை, தாயே! நான் உங்கள் கொத்தடிமை! நீங்கள் மனம் வைத்தால் என்னை நல்லவனாக வாழச் செய்து நிறைவைத் தரலாம். இல்லாவிட்டால் என்னை அசுரனாக்கி அழிவைத் தரலாம். வலி மிகுந்த வாழ்க்கையைத் தரலாம். உங்கள் இஷ்டம் தாயே! இதில் என் செயலாவது யாதொன்றும் இல்லை.” பச்சைப்புடவைக்காரி கையில் இருந்த விளக்குமாற்றால் என் தலையைத் தொட்டாள். உடம்பு சிலிர்த்தது. இனிமேல் கூட்டத்தில் என்ன கேள்வி கேட்டாலும் சரியான பதில் சொல்லமுடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.
|
|
|
|