|
ஒருமுறை பிரம்மலோகம் வந்தார் நாரதர். அவரிடம், ‘‘நாரதா! நீ பார்த்த விஷயங்களில் எதைக் கண்டு போதெல்லாம் ஆச்சரியப்பட்டாய்?’’ எனக் கேட்டார் பிரம்மா. ‘‘தந்தையே! ஆச்சரியமான விஷயம் எதுவென்றால், இறந்த ஒருவரைக் கண்டு மற்றவர்கள் கதறுவது தான். ஏனெனில் அழுபவர்களும் ஒருநாள் உலகை விட்டுச் செல்ல வேண்டியவர் என்பதை அவர்கள் நினைக்கவில்லையே!’’ என்றார். ‘‘ அதைப் போலவே மனிதனை மனசு படுத்தும் பாடு இருக்கிறதே’ அதைக் கண்டாலும் வியப்பாக இருக்கிறது. பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை இல்லாதவர்கள் யாருமில்லை. பாவத்தில் ஈடுபடுபவர்கள் அதற்குரிய தண்டனை அடைகிறார்கள். அதை அறிந்த பிறகும் நற்செயலில் ஈடுபட மக்கள் தயங்குகிறார்கள். இனிமையுடன் பேச விரும்பாமல் மற்றவர் மீது கோபம் கொள்கிறார்கள். மற்றவர்கள் தன்னிடம் நேர்மையுடன் நடக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் தான் மட்டும் உண்மையை விட்டு விலகி செயல்படுகிறார்கள். இப்படி மனதின் அலங்கோலம் கண்டு வியக்கிறேன்’’ என்றார். ‘‘இதற்கெல்லாம் தீர்வு என்ன?’’ எனக் கேட்டார் பிரம்மா. ‘‘ மனிதன் தன்னைப் போல பிறரையும் நேசித்தால் யாருக்கும் தீங்கு செய்யும் எண்ணம் வராது’’ என்றார் நாரதர்.
|
|
|
|