|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » ஒரு பைத்தியக்காரியின் பிதற்றல் |
|
பக்தி கதைகள்
|
|
‘வஜுபி ஹமாடி டிமாண்டி கண்டி ஜுஜாதி யமி உமி ஹம்ஜுபி’ அந்த முதியவள் அம்மன் சன்னதிக்கு எதிரே நின்றபடி உளறிக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டு வெறுப்பை உமிழ்ந்தபடி சன்னதிக்குள் நுழைந்தேன். பின்னால் வந்த பெண் என்னைப் பலமாக இடித்தாள். கோபத்துடன் திரும்பிப் பார்த்து அதிர்ந்தேன்.. பச்சைப்புடவைக்காரியான மீனாட்சியே தான்.. ‘என்னுடன் வா’ பிரகாரத்தில் ஆள் இல்லாத இடத்தில் அன்னை அமர்ந்தாள். அவளது காலடியில் நானும் அமர்ந்தேன். “என் பக்தர்களைக் வெறுத்தால் பத்ரகாளியாகி சம்ஹாரம் செய்வேன்.” “என்ன சொல்கிறீர்கள்? “வஜுபி ஹமாடி டிமாண்டி கண்டி ஜுஜாதி யமி உமி ஹம்ஜுபி” “அது பிதற்றல்.” “நமக்குப் புரியாத மொழியைப் பிதற்றல் என்பது அறிவீனத்தின் உச்சம்.” “அது என்ன மொழி தாயே?” “தமிழ்தான்.” “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்கிறது தொல்காப்பியம். அவள் சொன்ன ஏதாவது ஒரு சொல்லிற்குப் பொருள் கூறுங்கள் பார்க்கலாம்.” “உனக்குத் தெரிந்ததெல்லாம் நேரடிப் பொருள் ஒன்றே. அது போக இறைச்சிப் பொருள் என்று ஒன்று இருக்கிறது.” “அது என்னம்மா?” “சொற்களின் மேலோட்டமான பொருளைத் தாண்டி குறிப்புப் பொருள் புலப்படுமாயின் அதுவே இறைச்சிப் பொருள். தாய் தன் குழந்தையை அர்த்தமில்லாத சொற்களால் கொஞ்சுவாள். புஜ்ஜிம்மா. ஜிங்கிலி போன்ற கொஞ்சல் மொழிகளுக்கு பொருள் இல்லை. ஆனால் தாயன்பு என்னும் இறைச்சிப் பொருள் இருக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவனை “பித்தா” எனப் பாடியபோது அதை மேலோட்டமாகப் பார்த்தால் ‘பைத்தியக்காரன்’ எனக் கேலி செய்வதாக தோன்றும். அதன் இறைச்சிப் பொருள்: அடியார்களைப் பித்துப் பிடித்தவனைப் போல் நேசிப்பவன் சிவன். “அந்த முதியவள் முன்பெல்லாம் என் முன் நின்று ஸ்தோத்திரங்கள் சொல்லியிருக்கிறாள். இப்போது முதுமையால் மறந்து விட்டது. மனநிலையும் நன்றாக இல்லை. என்றாலும் கோயிலுக்கு வந்து எதையாவது சொல்லிவிட்டுப் போகிறாள். உன் போன்ற அகந்தை பிடித்தவர்கள் ஸ்பஷ்டமாகச் சொல்லும் மந்திரங்களைவிட அவளின் பிதற்றல் பிடித்திருக்கிறது..” நடுங்கினேன். ஒரு காலத்தில் எனக்கும் அந்த நிலை ஏற்பட்டால்.. . “உன் மனதில் தோன்றும் எண்ணங்களை வழிபாடாக கொள்வேன்.” “என் மனநிலை பாதிக்கப்பட்டால்...’’ “உன் ஆழ்மனதில் தோன்றும் உணர்வுகளை வழிபாடாகக் கொள்வேன். ஒரு கட்டத்தில் அந்த உணர்வும் இல்லாமல் போகும். அப்போதும் ஆன்மாவின் ஆழத்தில் இருப்பது எனக்குத் தெரியும். பேச்சு, எண்ணம், உணர்வு எதுவுமற்ற ஆழ்ந்த அமைதிநிலையே அன்பின் பூரண வெளிப்பாடு.” “தாயே... நான் இறக்கும்போது உங்களை நினைக்க முடியவில்லை என்றால்...’’ “நீயே சொல்லேன்.” “தாயே உங்களை மறக்கும் நிலையே மரணம். உங்களை நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மரணமே இல்லை. உங்களை அன்பு வடிவாக வழிபடுபவர்கள் என்றென்றும் வாழ்கிறார்கள். சில சமயம் இந்த உடம்புடன். சில சமயம் இது இல்லாமலும். அன்பு கனிந்த கனிவே சக்தி.” “சபாஷ்” “போகும்போது முதியவளை விழுந்து வணங்கிவிட்டுச் செல்லப் போகிறேன்.” “அவள் இருந்தால்தானே.” “பின்?” “அதுதான் என்னை வணங்கிவிட்டாயே. உனக்கு பாடம் புகட்டவே முதியவளாகத் தோன்றி வாய்க்கு வந்தபடி பிதற்றினேன்.” வேரறுந்த மரமாக அவளது காலில் விழுந்து கதறினேன்.
|
|
|
|
|