Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவள் கொடுத்த அனுபவம்
 
பக்தி கதைகள்
அவள் கொடுத்த அனுபவம்


சேலத்தில் ஒரு ஆன்மிக அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நான் என்னை மறந்து பேசிக்கொண்டிருந்தேன்.
‘‘குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட முறையில் செய்வது வழிபாடு இல்லை. நேரம், காலம் எல்லாம் மறந்து, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி கடவுளை நினைத்து உருகிக்கொண்டிருப்பதுதான் உத்தம வழிபாடு.
கடவுளுக்கு நன்றி சொன்னால் போதுமா? கைக்குட்டையைத் தவற விட்ட ஒருவர்,  அதை எடுத்துக்கொடுப்பவர்க்கு வாய் வார்த்தையாக நன்றி சொல்லி விடலாம். நம் ஒரே குழந்தை வலியால் துடிக்கும் நேரத்தில் சிகிச்சை செய்து, வலியைப் போக்கி உயிரைக் காப்பாற்றும் மருத்துவருக்கு வாய் வார்த்தையாக நன்றி சொல்ல முடியுமா என்ன? சம்சாரம் என்னும் மிகப் பெரிய வலியை நிரந்தரமாகப் போக்கும் அந்த மகா மருத்துவச்சி கால்களில் விழுந்து கதறினாலும் போதாதே ஐயா!”
பேசி முடித்தவுடன் ஒருவர் கேள்வி கேட்க எழுந்தார்.
‘‘கடவுள் கடவுள்னு அடிக்கடி சொன்னீங்களே, அவர் யாரு? எப்படி இருப்பாரு? நீங்க பாத்திருக்கீங்களா?”
அமைப்பின் தலைவர் காதில் கிசுகிசுத்தார்.
“இவனோட அப்பாதான் சார் நம்ம நிகழ்ச்சியை ஸ்பான்சர் பண்றாரு. அதனால ஜாக்கிரதையாப் பேசுங்க.”
 “நன்றி சொல்றதுன்னா என்ன? நாம ஏன் கடவுளுக்கு நன்றி சொல்லணும்? பச்சைப்புடவைக்காரின்னா யாரு? இதோ இந்த அம்மாவும் பச்சைப்புடவைதான் கட்டியிருக்காங்க. இவங்க என் கம்பெனிலதான் வேலை பாக்கறாங்க. புருஷனோட வாழத் தெரியாமத் தனியா வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. இவங்களையா இவ்வளவு புகழ்றீங்க?”
அழுகை வந்தது. கண்ணைத் திறந்தவன் அதிர்ந்து போனேன். முன் வரிசையில் பளீரென பச்சை நிறத்தில் பட்டு உடுத்தி மகாராணி போல் ஒரு நடுத்தர வயதுப் பெண் இருந்தாள். இப்போதுதான் வந்திருப்பாள் போலும்!
காலமெல்லாம் என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள் வந்துவிட்டாள். எனக்கே எனக்கென்று இவள் இருக்கும்போது கேள்வி கேட்பவனைப் போல் ஆயிரம் வில்லங்கம் வீராச்சாமிகளை என்னால் சமாளிக்க முடியும்.
முன்னால் அமர்ந்திருந்த அன்னையைப் பார்த்துக் கைகூப்பினேன்.
“யோவ்! காலி சேரைப் பார்த்துக் கை கூப்பிக்கிட்டிருக்க! உனக்கு மறை கழண்டிருச்சா?”
ஆஹா! பச்சைப்புடவைக்காரி என் கண்களுக்கு மட்டும்தான் தெரிகிறாள்.  மனதில் அசாத்தியத் துணிச்சல் வந்தது.
“ஐயா உங்கள் கேள்விகள் முடிந்து விட்டதா?”
“இப்போதுதானே ஆரம்பித்திருக்கிறது.”
“சரி கேட்டு முடியுங்கள். மொத்தமாகப் பதில் சொல்கிறேன்.”
“ கடவுள், தெய்வம், இறைவன், ஆன்மா, ஆண்டவன், மீனாட்சி, பச்சைப்புடவைக்காரி, சிகப்புப் புடவைக்காரி எல்லாமே  உங்கள மாதிரி ஆளுங்க கிளப்பிவிட்ட புருடாதானே! கடவுள் பேர்ல எத்தனையோ ஆயிரம் வருஷமா மோசடி நடந்துக்கிட்டிருக்கே அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”
பேசும் சக்தியை முற்றிலுமாக இழந்தேன். என் மவுனம் அவன் ஆத்திரத்தை அதிகமாக்கியது.
“வழிபாடு, பூஜைன்னா என்ன? கடவுள்னு ஒரு ஆள் இருக்காருன்னு சும்மா பேச்சுக்கு வச்சிப்போம். அந்த ஆளை எதுக்குய்யா கும்பிடணும்? அந்த ஆளு ஏன்யா சாதாரண மனுஷங்க கண்ணில தட்டுப்படமாட்டேங்கறான்? “
எனக்குக்  கோபம் பொத்துகொண்டு வந்தது. தலைவர் ஓடி வந்து என் தோள்பட்டையைப் பிடித்தார்.
“அப்பா, ஸ்பான்சர், ஜாக்கிரதை.”
அவர் கையை உதறி விட்டுப் பேச முற்பட்டேன். முன்னால் அமர்ந்திருந்த பச்சைப்புடவைக்காரி என்னைப் பார்த்து ‘வேண்டாம்’ என ஜாடை காட்டினாள்.  அடங்கிவிட்டேன்.
கேள்வி கேட்டவனைப் பார்த்துக் கைகூப்பினேன்.
“என்னை மன்னியுங்கள்.  உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை. நான் சாதாரண  அடிமை. கொத்தடிமை.”
“யாருக்கு?”
“என் எஜமானிக்கு.”
அவன் அமர்ந்துவிட்டான். அதன்பின் வேறு யாரும் கேள்வி கேட்கவில்லை. அரங்கத்திலேயே உணவிற்கு ஏற்பாடு செய்தனர்.
“ஐந்து நிமிடம்  ஓய்வெடுத்து விட்டு வருகிறேன். நீங்கள் சாப்பிடுங்கள்” என்றேன். அவர்கள் விலகிச் சென்றதும் பச்சைப்புடவைக்காரியின் கால் அருகில் அமர்ந்தேன்.
“அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்துகொள். இல்லாவிட்டால் நீ ஏன் தரையில் அமர்ந்திருக்கிறாய் என கேட்பார்கள். நாம் பேச முடியாது.”
அவள் சொன்னபடி செய்தேன்.
“உங்களையே மறுக்கிறான். கடவுள் இல்லை எனக் கொக்கரிக்கிறான். உங்களைக் கேலி செய்கிறான். என்னைக் காயப்படுத்துகிறான். அவனிடம் ஒன்றும் பேசவேண்டாம் என்கிறீர்களே! ஏன் தாயே?”
“நீ பேசினால் அவன் இன்னும் அதிகமாக பழிப்பான். நீ இன்னும் பெரிதாக அழுவாய்.  இதெல்லாம் தேவையா?”
“ஆன்மிகத்தைப்  பகுத்தறிவு வென்று விட்டதாக ஊரெல்லாம் சொல்லப் போகிறான், தாயே!”
“கவலைப்படாமல் சாப்பிடப் போ. நீ கிளம்பும் முன் உன்னிடம் வந்து கதறுவான் பார்.”
குனிந்து எதையோ எடுப்பது போல் அன்னையை வணங்கிவிட்டுச் சாப்பிடச் சென்றேன்.
அரை மணி நேரத்தில் எல்லோரும் போய்விட்டனர்.  நானும் ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். காரில் ஏறும் முன் கேள்வி கேட்ட பகுத்தறிவுவாதி எங்கிருந்தோ ஒடி வந்தான். நான் தடுத்தும் கேளாமல் காலில் விழுந்து விம்மி அழுதான்.
 “ஐயா நீங்க சொன்னதெல்லாம் சத்தியம். பச்சைப்புடவைக்காரி இருக்காய்யா. கடவுளே இல்லைன்னு கொக்கரிச்சிக்கிட்டு  இருந்த இந்தப் பாவிக்குக் காட்சி கொடுத்தாய்யா. அவளைப் பாத்தவுடன் சிலிர்ப்பு உண்டாச்சு பாருங்க...அது நான் சாகறவரைக்கும் அடங்காதுய்யா. அவ மட்டும்தான்யா சத்தியம். மத்ததெல்லாம் பொய். என்ன மாதிரி பாவிக்கே அப்படி ஒரு பாக்கியம் கெடைச்சதுன்னா எப்பவும் அவளை நினைச்சிக்கிட்டிருக்கற உங்கள நெனச்சிப் பாத்தேன்யா. தாங்க முடியலய்யா..”
பேசியபடியே மயங்கி விழுந்தான்.  பக்கத்திலிருந்த ஆட்கள் அவனை அள்ளிப்போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினர்.   பாவம் என்ன ஆச்சோ?
அரங்கத்துக்குள்ளிருந்து பச்சைப்புடவைக்காரி வந்தாள்.
“அவனுக்கு ஒன்றும் ஆகாது. நான் பார்த்துக்கொள்கிறேன்.”
“என்ன நடந்தது தாயே?”
“கடவுள் இல்லை என நாத்திகம் பேசுபவர்களை வாதத்தால் வெல்ல முடியாது. அப்படி வென்றாலும் அது நிலைக்காது. அதனால்தான் உன்னைப் பேச வேண்டாம் எனத் தடுத்து அவனுக்குக் காட்சியளித்தேன். அவன் நாத்திகன்தான். ஆனாலும் நல்லவன். நேர்மையானவன். சில போலிச் சாமியார்களிடம் ஏமாந்ததில் நாத்திகனாகிவிட்டான். உன்னை ஒரு சாக்காக வைத்து அவனை மீண்டும் அன்பு வழிக்கு இழுத்து விட்டேன். அது சரி, நீ ஏனப்பா அழுகிறாய்?”
“ஒருநொடி காட்சி கொடுத்தீர்கள். பரவசத்தின் உச்சிக்குச் சென்று பிதற்ற ஆரம்பித்துவிட்டான். எனக்குத் தொடர்ந்து காட்சி கொடுத்துக்கொண்டேயிருக்கிறீர்கள். என்னுடன் சரிக்குச் சரியாய்ப் பேசுகிறீர்கள். ஆனாலும் என்னால் அவனைப் போல பரவசத்தை உணர முடியவில்லையே! அவ்வளவு பாவம் செய்திருக்கிறானா, உங்களிடம் மன்னிப்புக் கேட்கக்கூட எனக்குத் தகுதியில்லை தாயே! ”
“முட்டாள்! தெய்வீக நிலையை உணர வைப்பதற்காக காட்சி தந்தேன். உன்னை எழுத வைப்பதற்காக உன்னுடன் பேசுகிறேன்.”
“எனக்கு அதுபோன்ற ஒரு பரவச நிலை கிட்டவே கிட்டாதா?”
“எழுத வேண்டியதை எல்லாம் எழுதி முடித்தவுடன் நிச்சயம் பரவசம் கிட்டும். அது சரி கொத்தடிமையான நீ எப்படி அது வேண்டும் இது வேண்டும் எனக் கேட்கலாம்?”
அன்னையின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar