|
யுவன் என்ற சிறுவனுக்கு சந்தேகம் எழுந்தது. ஒரு உயிர் மற்றொரு உயிரை துடிதுடிக்க கொல்கிறதே.. அது பாவம் இல்லையா! தன் தாத்தாவிடம் கேட்டால் விடை கிடைக்கும் என நினைத்தான். அவனுக்கு ஒரு கதை சொல்லத் தொடங்கினார் தாத்தா. ‘‘தன் வழியில் சென்று கொண்டிருந்த பூச்சியைக் குறி வைத்தது ஒரு பல்லி. மெல்ல அதை இரையாக்கி விட்டு, சுவரில் ஊர்ந்தது. ஆனால் பிடி நழுவி கீழே சறுக்கியது. இரை தேடிய கோழிக்குஞ்சு ஒன்றின் கண்ணில் பல்லி படவே, அதைக் கொத்தி தின்றது. வயிறு நிறைந்த மகிழ்ச்சியில் குஞ்சு திரிந்த போது, வானில் வட்டமடித்த பருந்து ஒன்று கீழே வந்து குஞ்சை துாக்கிச் சென்றது. அதை ஏப்பம் விட்ட பருந்து மரக்கிளையில் அமர்ந்து ஓய்வெடுத்தது. அதை வேட்டையாடத் துணிந்தான் வேடன் ஒருவன். வில்லை எடுத்து அம்பு தொடுத்தான். அடிபட்ட பருந்து துடித்தபடி புதருக்குள் விழுந்தது. பருந்தை எடுக்க புதருக்குள் கையை விட்ட போது, புதரில் இருந்த பாம்பு தீண்டியதால் அவன் உயிரிழந்தான். இப்படி ஒரு உயிரைக் கொன்று மற்றொரு உயிர் வாழும்படியே கடவுள் படைத்திருக்கிறார். தற்காப்புக்காகவோ அல்லது தான் உயிர் வாழவோ மற்ற உயிர்களைக் கொல்வதை தவிர்க்க முடியாது. இந்த அடிப்படையில் தான் இயற்கை செயல்படுகிறது. ஆனால் மனிதன் மட்டும் அதர்மவழியில் பிற உயிர்களைக் கொலை செய்கிறான். அதற்குரிய தண்டனையில் இருந்து அவன் தப்ப முடியாது. அதனால் மனிதர்களைத் தவிர மற்ற உயிர்கள் வாழ்வதற்காக கொல்வதால் பாவமாகாது’’ என்றார் தாத்தா.
|
|
|
|