குருகுலத்தில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ‘‘அன்பு மாணவர்களே! உலகில் மூன்று வித மனிதர்கள் இருக்கிறார்கள். சிலர் தங்களிடம் பழகுபவர்களை பண்பினைக் கெடுத்து அவர்களுக்குத் துன்பம் கொடுக்கத் தயங்குவதில்லை. இன்னும் சிலர் சுயநலத்துடன் பிறர் பொருளை அபகரித்து வாழ நினைக்கின்றனர். மூன்றாம் வகையினர் பொதுநலத்துடன் மற்றவருக்கு உதவுகின்றனர். இதில் நீங்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் என முடிவு செய்யுங்கள்’’ என்றார். ஒரு மாணவன் புரியாமல் விழித்தான். ‘‘ஐயா! எனக்கு மீண்டும் ஒருமுறை விளக்கலாமா?’’ என்றான். அவனிடம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். அதை மூன்று கிண்ணங்களில் ஊற்றி முதல் கிண்ணத்தில் சிறிது களிமண்ணை இட்டார். அது கரைந்தவுடன் தண்ணீர் தெளிவற்ற நிலைக்கு மாறியது. களிமண் குணம் கொண்டவர்கள் பிறரைக் கெடுத்து தீங்கு செய்கிறார்கள். இரண்டாவது கிண்ணத்தில் சிறிது பஞ்சினை இட்டார். தண்ணீரை உறியத் தொடங்கியது பஞ்சு. இப்படிப்பட்டவர்கள் சுயநலவாதிகள். மூன்றாம் கிண்ணத்தில் சிறிது சர்க்கரையை இட்டார். அது கரைந்து நீரை சுவையுடையதாக்கியது. அதை மாணவர்களுக்கு கொடுக்க மகிழ்ச்சியுடன் குடித்தனர். சர்க்கரை போல சிலர் மற்றவர்களுக்கு நன்மையே செய்கின்றனர்’’ என்றார். நீங்களும் சர்க்கரை போல மற்றவருக்கு ‘ஸ்வீட்டாக’ மாறுவீர்கள் தானே! |