|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » திருந்திய உள்ளம் |
|
பக்தி கதைகள்
|
|
அரண்மனை உப்பரிகையில் நின்ற மன்னர் தாவீது பணியாளனை கைதட்டி அழைத்தார். ‘சொல்லுங்கள் அரசே’ என பணியாளன் ஓடி வந்தான். ‘அதோ அங்கிருக்கும் பெண் யார் என்று உனக்குத் தெரியுமா?’ எனக் கேட்டார் மன்னர். ‘தெரியும் மன்னா! அவள் எலியாவின் மகள் பத்சேபா’ என்றான் பணியாளன். ‘எனக்கு அவளைப் பிடித்திருக்கிறது. அந்தப்புரத்துக்கு வரச் சொல்’ என மன்னர் ஆணையிட்டார். ‘அப்படியே ஆகட்டும் மன்னா! ஆனால்…..’ என பணியாளன் இழுத்தான் ‘என்ன ஆனால்…. ‘ தாவீது திரும்பினார். ‘அவளுக்குத் திருமணமாகி விட்டது. படைவீரர் உரியா என்பவரின் மனைவி.’ என்றான் பணியாளன். ‘அவள் யாருடைய மனைவியாக இருந்தாலும் கவலையில்லை. இன்று அவள் என் படுக்கை அறைக்கு வர வேண்டும்’ என தாவீது கட்டளையிட்டார். அரச கட்டளைக்கு மறுபேச்சு ஏது? பத்சேபா வரவழைக்கப்பட்டாள். மன்னரின் நிபந்தனையை மறுக்க முடியவில்லை. பத்சேபா உடன்பட்டாள். சற்று நேரத்தில் வருத்தமுடன் வீட்டுக்குச் சென்றாள். பத்சேபாவின் கணவரான உரியா, படைத்தலைவன் யோவாபுவின் கீழ் பணியாற்றி வந்தான். இந்நிலையில் தாவீதுக்கு அவளை எப்படியாவது முழுமையாக அடைய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இதற்காக யோவாபுவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதை உரியாவிடம் கொடுத்து யோபாவுவிடம் கொடுக்கச் சொன்னார். உரியாவும் அப்படியே செய்தான். அதில் ‘ யோபாவு…. போரில் உரியா சாக வேண்டும். எனவே எதிரிகள் அதிகமுள்ள இடத்திற்கு அவனை அனுப்பு. அவன் விரைவில் மரணத்தை அடையட்டும்’. மன்னரின் தகவலை யோபாவு வாசித்து முடித்து நிமிர்ந்து பார்த்தார். அங்கே ஒன்றும் அறியாமல் உரியா நின்றிருந்தான். எதிரியான அமலேக்கியரோடு போர் நடந்த காலகட்டம் அது. தாவீதின் படை அமலேக்கியரை அழிக்கப் புறப்பட்டது. யோபாவு தன்னுடைய வீரர்களோடு புறப்பட்டார். ‘உரியா சாக வேண்டும்’ என்ற மன்னரின் ஆணை மனதில் ஓடியது. அதன்படி உரியா ஆபத்தான பகுதிக்கு அனுப்பப்பட்டான். எதிரிகள் உரியாவைக் கொன்றனர். கணவர் இறந்த செய்தி பத்சேபாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவள் கதறினாள். உள்ளுக்குள் மகிழ்ந்த தாவீது ‘‘பத்சேபா… கவலைப்படாதே. உரியாவின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. இனி மேல் உன்னைக் காப்பாற்றும் கடமை எனக்குரியது. இனி அந்தப்புரத்திலேயே இரு’ என்றார். அரச கட்டளைக்கு அவளும் கட்டுப்பட்டாள். தாவீதின் மனைவியாகி கர்ப்பம் தரித்தாள். தாவீதின் செயலைக் கண்ட ஆண்டவர் கோபம் கொண்டார். பத்சேபாவுக்கு பிரசவ காலம் நெருங்கியது. குழந்தை பிறந்த ஒரு வாரத்திற்குள் நோய்வாய்ப்பட்டு இறந்தது. தப்புக் கிடைத்த தண்டனை கண்டு மன்னர் தாவீது அழுதார். மனம் திருந்தி நீதிவழியில் நடக்க முடிவு செய்தார். அதன்பின் ஆண்டவர் அருளால் இரண்டாவது மகன் பிறந்தான். அக்குழந்தையே மன்னர் சாலமன் என்னும் பெயரில் நீதிமானாக விளங்கினார்.
|
|
|
|
|