|
ஒரு நாள் துருக்கி மன்னனும், முல்லாவும் அரண்மனை தோட்டதில் உலாவிக் கொண்டிருந்தனர். ‘‘ உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள்! ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் மனதிற்குள் எடை போட்டுப் பார்த்து அவரது மதிப்பைக் கூறி விடுவீர்களாமே!” என்றார் மன்னர். ”இறையருளால் எனக்கு அப்படிப்பட்ட சக்தி இருக்கிறது என நினைக்கிறேன்’’ என்றார் முல்லா. ”சரி, இப்போது என் உண்மையான மதிப்பு என்ன... கூறுங்கள் பார்க்கலாம்” என்றார் மன்னர். முல்லா மன்னரை ஏற இறங்கப் பார்த்து விட்டு, “மன்னரே! தங்களின் உண்மையான மதிப்பு பத்துப் பொற்காசுகள்’’ என்றார் மன்னருக்குத் துாக்கிவாரிப் போட்டது. முல்லா தன்னை அவமரியாதை செய்வதாக ஆத்திரப்பட்டார். ‘‘என்னைக் கேவலப்படுத்துகிறீரா?. என் இடுப்பில் உள்ள கச்சையின் மதிப்பு பத்துப் பொற்காசுகள் இருக்குமே?” என்றார் சீற்றமுடன். ‘‘மன்னரே! நான் குறிப்பிட்டதும் தங்களின் கச்சையின் மதிப்பைத் தான். தங்களின் உடலை ஒரு காசுகூட மதிப்பிட முடியாது. இந்த உடலால் எத்தனை காலம் உலகில் வாழ முடியும்? உயிர் அகன்று விட்டால் மன்னர் என்னும் மரியாதை இருக்குமா?. அழியும் உடம்புக்கு என்ன மதிப்பு இருக்கும்?” என்றார் முல்லா. முல்லாவின் பதில் கேட்ட மன்னருக்கு ஆத்திரம் அடங்கியது. அறிவுக்கண் திறந்தது.
|
|
|
|