|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » அவள் அடித்த அகந்தைப் பாம்பு |
|
பக்தி கதைகள்
|
|
“எங்க ஹாஸ்பிட்டல்ல கைனகாலஜில ரெண்டு பேர் இருக்கோம். டாக்டர் ரேவதி எனக்கு ரொம்ப சீனியர். அம்பது வயசுக்கு மேல. பேஷண்ட்ஸ் எங்க ரெண்டு பேர்ல யார வேணும்னாலும் தேர்ந்தெடுக்கலாம். கடந்த ஆறு மாசமா ஒரு பேஷண்ட்கூட நான் வேணும்னு சொல்லல.” சென்னையில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் இப்படி என்னிடம் புலம்பினார். “ஏன்? நீங்க கோபப்படுவீங்களா? நார்மல் டெலிவரியை சிசேரியனா மாத்திக் காசு பிடுங்கறீங்களா?” அவளது சிரிப்பில் விரக்தி தான் தெரிந்தது. “அவங்கதான் பேஷண்ட்டைத் திட்டுவாங்க. எரிஞ்சி விழுவாங்க. போன மாசம் மட்டும் பத்து நார்மல் டெலிவரி கேசை சிசேரியனா மாத்தியிருக்காங்க.” “அப்பறம் ஏன் உங்ககிட்ட யாரும் வரலை?” “எனக்கு அகம்பாவம், ஆணவம் அதிகமாம். எங்க சீஃப் சொல்றாரு. எது சார் ஆணவம்? கர்ப்பிணிகளை ஆதரவா அணைச்சு தைரியம் சொல்றதுதான் ஆணவமா? ‘என்னால தாங்க முடியலை டாக்டர்... சிசேரியன் பண்ணிருங்க’ன்னு கெஞ்சினாலும் பேசி புரியவச்சி நார்மல் டெலிவரி செய்றதுக்குப் பேர்தான் அகம்பாவமா? எல்லாத்தையும் மீறி கேஸ் சிக்கலாச்சுன்னா சுயமரியாதை கூடப் பாக்காம டாக்டர் ரேவதியோட உதவி கேக்கறதுக்குப் பேர்தான் அகங்காரமா? பேஷண்ட் ஏழையா இருந்தா அவங்க செலவக் கூட நான் கட்டறேன். இதுதான் உங்க ஊர்ல ஆணவமா, சார்? “டாக்டர் தொழிலை விட்டுட்டு சந்தையில கத்திரிக்கா விக்கலாம்னு இருக்கேன்.” என்று சொல்லி புறப்பட்டாள். அதன் பின் என் அமைதி போனது. பச்சைப்புடவைக்காரியின் மீது கோபம். என்னிடம் ஏன் இந்த பிரச்னை வரவேண்டும்? “சார் கொரியர்.” பெண்குரல் கேட்டு வெளியே வந்தேன். “யாரோ ஒரு மருத்துவருக்குப் பிரச்னை என்றால் ஏனப்பா என் மீது கோபப்படுகிறாய்?” அன்னையின் திருவடிகளை வணங்கினேன். “அவளுக்கும் உனக்கும் இருப்பது ஒரே பிரச்னைதான். நான் நல்லவன் என்ற அகம்பாவம். நம்மிடம் திறமை இருக்கிறது என்ற ஆணவம். நாளை மாலையில் விளக்கம் கிடைக்கும்’’ மறுநாள். ஒரு வாடிக்கையாளரின் ஜி. எஸ். டி.ரிட்டர்னைத் தாக்கல் செய்ய முயற்சித்தேன். கணினியில், ஜி எஸ்டி வளைதளத்தில் பல பிரச்னைகள். ஒரு வழியாகச் சமாளித்து முடித்தேன். வாடிக்கையாளருக்கு விபரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். பத்தாவது நிமிடம் அலைபேசி அலறியது. “ஆடிட்டர் சார்... டாக்ஸ் லட்ச ரூபாய் கூடக் கட்டிட்டீங்களே?” அதிர்ந்தேன். என்னாச்சு எனக்கு? சென்ற மாதம் அதே வாடிக்கையாளர் ‘‘ ஆடிட்டர் சார் உங்க வேலை பட்டுக் கத்திரிச்ச மாதிரி இருக்கும். பத்து பைசா கூட குறைச்சு கூட கட்ட மாட்டீங்க.” என்னைவிட அனுபவம் மிக்க தணிக்கையாளர்களே என்னிடம் சந்தேகம் கேட்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கும். அப்படிப்பட்ட நான் ஏன் தவறு செய்தேன்? தொழிலுக்கு லாயக்கில்லாதவனாகிவிட்டேனா? அலுவலகத்தைப் பூட்டிவிட்டு கிளம்பினேன். சாப்பிடப் பிடிக்கவில்லை. துாக்கம் வரவில்லை. படுக்கையில் அமர்ந்தபடி தனியாக அழுதேன். உருவெளிப்பாடாகத் தோன்றினாள் உமையவள். “என்னப்பா, யானைக்கே அடி சறுக்கிவிட்டதோ?” “நல்லவர்களுக்கு அகங்காரம் வரக்கூடாது என்று எந்த விதியும் இல்லையே! நீ உண்மையாகத்தான் உழைத்தாய். கவனமாகத்தான் இருந்தாய். என்றாலும் உன்னையும் மீறித் தவறு நடந்துவிட்டது.” “என் மானம் போனது, தாயே. வாழ்வே வெறுத்துவிட்டது.” “உன் அகங்காரம் மேலும் வளராமல் தடுக்கும் தடுப்பூசி இது. உன் ஆணவத்தை விட்டுவிட்டு உன்னைவிட வயதில் குறைந்த, அனுபவமில்லாத ஒரு தணிக்கையாளனிடம் செய்த தப்பைச் சொல். அவன் சொன்னபடி நடந்து கொள். பிரச்னை தீரும்.” “தாயே அந்த மகப்பேறு மருத்துவருக்கும் இதே பிரச்னை என்றீர்களே! அவளிடம் என்ன சொல்லட்டும்?” “முதலில் உன் விவகாரத்தைப் பார். அதன்பின் அவளுடன் பேசு. உன்னைச் சாக்கு வைத்து அவள் பிரச்னையையும் தீர்த்துவிடலாம்.” மறுநாள் ஒரு இளம் தணிக்கையாளரை அழைத்து நான் செய்த தவறை விளக்கினேன். “சார், நீங்க அப்படி செஞ்சிருக்க முடியாது சார். சும்மா விளையாடாதீங்க சார்.” “பாலா இப்போ சீனியராப் பேசல. உங்கள என் குருவா நினச்சிப் பேசறேன். இந்தத் தப்ப எப்படி சரி பண்றதுன்னு சொல்லுங்க. நீங்க கேட்கும் குருதட்சணையக் கொடுக்கத் தயாரா இருக்கேன்.” “என்ன சார் பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு? இது சாதாரணம் சார். நான் சொல்றதைச் செய்யுங்க. உங்க கிளையண்ட்டுக்கு பைசாகூட நஷ்டம் வராது.” தவறைத் திருத்தும் வழியைச் சொல்லிக்கொடுத்தார் இளம் தணிக்கையாளர். “உங்களுக்கு எவ்வளவு பீஸ் கொடுக்கணும், பாலா?” “உங்க ஆசீர்வாதம் போதும் சார்.” இந்த செயலால் பச்சைப்புடவைக்காரியின் மனம் குளிர்ந்திருக்க வேண்டும். இரண்டு நாள் கழித்து அந்த மகப்பேறு மருத்துவர் வந்தபோது அவளே வார்த்தைகளாக என்னுள் வந்தாள். . “உங்களையும் அறியாம உங்க திறமை மேலயும் உங்க அன்பான அணுகுமுறை மேலயும் உங்களுக்கு ஆணவம் வந்திருச்சி. ஏதோ நீங்களே குழந்தையை உருவாக்கி கொடுக்கறதா நெனக்கறீங்க. இந்த மனோபாவம் பேசும்போது வெளிப்படுது. அதனால கர்ப்பிணிகள் உங்களைத் தவிர்க்கறாங்க. பிரசவம்ங்கறது இந்த உலகத்தில புதுஉயிர் நுழையும் தெய்வீக நிகழ்வு. கடவுள் அருளால் நடக்கும் அற்புதம் அது. தாய்மை என்பதை பல்கலைக்கழகமா நெனைச்சா அதுக்குத் தலைவி பச்சைப்புடவைக்காரி தான். அவள் ஒரு பெண்ணிற்குத் தாய் என்னும் பட்டம் அளிக்கும்போது மேடையை நிர்வகிக்கும் சாதாரண ஊழியைதான் நீங்கள். அந்த மகாராணி பட்டத்தை தரும்போது அந்த மாணவி சரியா வாங்கிக்கறாளான்னு பார்க்கணும். பட்டம் வாங்க மேடை ஏறி வர மாணவி நடுவுல படி தடுக்கி விழாமப் பாக்கணும். அதுமட்டுமே உங்க வேலை.. ஆனா எல்லாம் உங்க திறமையால நடக்கற மாதிரி நெனக்கிறீங்க. நான் ஒருத்திதான் திறமையாச் செய்யுறேன்னு அகங்காரம் வந்துருச்சின்னா கூடவே சொதப்பிடுவோமோங்கற பயமும் வரும். அந்த பயத்தில வெட்கம், மானத்தை விட்டு உங்கப் போட்டியாளர்கிட்ட போய் உதவி கேக்கறீங்க. இது வெளில தெரிஞ்சதால எல்லாரும் உங்களை கத்துக்குட்டி டாக்டர்னு நெனைக்கறாங்க. நம்ம உடம்பை எடுத்துக்குங்க. நான் சாப்பிட்டேன்னு சொல்லலாம். நடந்துகிட்டு இருக்கேன்னு சொல்லலாம். இப்போ தோட்டத்துல உக்காந்திருக்கேன்னு சொல்லலாம்.. ஆனால் உடம்புல நடக்கற நுட்பமான நிகழ்வுகள் எல்லாம் நம்மையும் மீறி ஏதோ ஒரு சக்தியில நடக்குது. உதாரணமா சாப்பிடற உணவ நீங்க கஷ்டப்பட்டு ஜீரணம் பண்ணல. அதுவா ஜீரணமாகுது. யாராவது “சாப்பிட்டத ஜீரணம் பண்ணிக்கிட்டு இருக்கேன்”னு சொன்னா உங்களுக்குச் சிரிப்பு வராதா? இல்லை நான் இப்போ என் இதயத்த துடிக்க வச்சிக்கிட்டு இருக்கேன்னு சொன்னா அது கேலிக்கூத்தா ஆயிரும். இன்னும் ஆழமாப் பாத்தா இந்த நிகழ்வுகள் மனசோட தலையீடு இல்லாம நடக்கறதுதான் நல்லது. நீங்க சாப்பாட்டுக்கு அப்பறம் ஒரு மூலையில உக்காந்து உங்க ஜீரணத்தப்பத்தி நெனச்சிக்கிட்டே இருந்தா ஜீரணம் சரியா நடக்காது. “மனசாலக் கட்டுப்படுத்த முடியாத ஜீரணம், ரத்த ஓட்டம், இதயத்துடிப்பு, துாக்கம் இதையெல்லாம் ஆதி பராசக்தியான பச்சைப்புடவைக்காரிதான் கட்டுப்படுத்தறா. ‘எல்லாம் அவள் செயல்’ என்னும் நெனைப்புல வேலை பாருங்க. எல்லாரும் உங்களத் தேடி வருவாங்க.” “இத எப்படி கண்டுபிடிச்சீங்க?” “என் மனசுலயும் அகம்பாவப் பாம்பு ஆடிக்கிட்டுத்தான் இருக்கு. ரெண்டு நாளைக்கு முன்னால பச்சைப்புடவைக்காரிதான் அந்தப் பாம்ப அடிச்சா. அவ கொடுத்த வார்த்தைகளால நான் உங்க மனசுல இருக்கற பாம்ப அடிக்க முயற்சி செய்யறேன்.” கண்ணீர் மல்க என்னைப் பார்த்துக் கைகூப்பினாள் அந்த மகப்பேறு மருத்துவர். |
|
|
|
|