|
ராவணன் வீழ்ந்தான். அவனது பிரிவைத் தாங்க முடியாத மண்டோதரி, கணவரின் சடலத்தின் மீது விழுந்து மாண்டாள். ராவணனின் அந்தப்புரத்தில் இருந்த பெண்கள் எல்லோரும் துயரத்திற்கு ஆளாயினர். அதை எல்லாம் அமைதியாகப் பார்த்தபடி இருந்தான் ராமன். பிரமாண்டமான போரில் வானரர்களின் ஒத்துழைப்புடன், வெற்றிவாகை சூடியிருக்கிறான் ராமன்! போரின் பின்விளைவுகள் இப்படி வருத்தமளிக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை? ராவணன் மரணம், அவனது வாரிசுகளுக்கு நிரந்தர சோகத்தை அளித்துவிட்ட குற்ற உணர்வு அவனை அலைக்கழித்தது. தாமரை மொட்டாக கூம்பிய மனதுடன் விபீஷணனைப் பார்த்தான். ‘‘சகோதரா, இப்போது நீ முக்கிய கடமையை நிறைவேற்ற வேண்டிய தருணம்’’ என ஆரம்பித்தான். விபீஷணன் குழப்பத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். ‘‘ஆமாம் விபீஷணா! ராவணன் உள்ளிட்ட உன் சகோதரர்கள், உன் வம்சத்தவரான அரக்கர்களுக்கு நீத்தார் கடனை நிறைவேற்ற வேண்டும்.’’ ‘‘ராவணனை என் சகோதரன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன். நான் இறுதிச் சடங்கு செய்ய மாட்டேன்,’’ என விபீஷணன் மறுத்தான். ‘‘அது முறையல்ல விபீஷணா...உன்னைத் தவிர யாரும் உயிருடன் இல்லை. ஆகவே நீ தான் பொறுப்பேற்க வேண்டும்’’ விபீஷணன் யோசித்தான். அண்ணன் கும்பகர்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘நீ ஒருவனாவது மிஞ்சியிருந்து செய்யப்போகும் இறுதிக்கடனால் தான் எங்களின் ஆன்மா விடுதலை பெறும்’ . ராமனும் இதை வற்புறுத்துவதை அறிந்து சம்மதித்தான். இறுதிச் சடங்குகளை விபீஷணன் முறைப்படி செய்தான். ராமன் சுறுசுறுப்புடன் அடுத்தடுத்த செயல்களில் இறங்கினான். தம்பி லட்சுமணனை அழைத்து விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் நடத்த உத்தரவிட்டான். அண்ணன் விரும்பியபடி விபீஷணனுக்கு பட்டம் கட்ட ஏற்பாடு செய்தான். மலர்கள், ஆபரணங்களால் விபீஷணனை அலங்கரித்து மகுடம் சூட்டி பட்டாபிஷேகம் நடத்தினான் லட்சுமணன். தன்னிடம் சீதை திரும்பி வரும்வரை இலங்கைக்குள் நுழைய விரும்பாத ராமன், வெளியிலேயே முகாமிட்டிருந்தான். அங்கு பட்டாபிேஷக கோலத்தில் நேரில் வந்து வணங்கிய விபீஷணனை தட்டிக் கொடுத்த ராமன், ‘‘ ராவணன் ஆட்சியில் வாழ்வுக்குத் தேவையான வசதிகள் கிடைத்தாலும், முழு திருப்தியுடன் மக்கள் வாழ்ந்ததாகச் சொல்ல முடியாது. காரணம், ராவணனின் ஒழுக்கக்கேடான தன்மை, மக்களை நல்வாழ்வு நடத்த முடியாதபடி தடுத்தது. இப்போது செங்கோல் பிடித்திருக்கும் உன்னால் எங்கும் அன்பும், அமைதியும் நிலவும். உன் ஆட்சி ஓங்கி வளரும்’’ என ஆசியளித்தான் ராமன். இந்நிலையில் ராமன், ‘‘ இலங்கைக்குள் சீதையைக் கண்டவன் நீ தானே அனுமா.. அவளிடம் நம் வெற்றியைத் தெரிவிப்பாயாக,’’ என்றான். அவனும் ஆயத்தமானான். ‘‘கொஞ்சம் நில்’’ என தடுத்த ராமன், ‘‘நான் சொன்னேன் என்பதற்காக நீ போக கூடாது. இப்போது இலங்கையின் அரசன் விபீஷணனின் அனுமதி இன்றி யாரும் அங்கு நுழைய கூடாது’’ என்றான். ‘‘ராவணனை வீழ்த்திவிட்டோம், விபீஷணன் தன்னை அடிபணிகிறான் என்ற ஆணவம் கொள்ளாமல், எதையும் மரபுப்படியே நிறைவேற்ற வேண்டும்’ என விரும்பும் ராமனின் உயர்ந்த பண்பைக் கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். கைகளை கூப்பியபடி நின்ற அனுமனும், இலங்கை அரசன் விபீஷணனிடம் அனுமதி கேட்ட பின்னரே சென்றான். சீதையிடம் வெற்றி பெற்ற செய்தியைத் தெரிவித்து விட்டு புறப்பட்டான். சீதையும் அனுமனுடன் வருவாள் என எதிர்பார்த்த அனைவருக்கும் ஏக்கம் உண்டானது. அதையறிந்த ராமன் புன்னகைத்தபடி, . ‘‘அனுமன் பின்பற்றிய மரபையே சீதை வருவதற்கும் பொருந்தும். ஆமாம், இலங்கை மன்னன் விபீஷணனே அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும். ராவணன் செய்த குற்றத்திற்கு அவனது தம்பி பிராயச்சித்தம் தேடுவது தான் முறை. அந்தவகையில் சீதையை அலங்கரித்து அழைத்து வரவேண்டியது விபீஷணனின் பொறுப்பு’’ எனத் தெரிவித்தான். விபீஷணனும் உடனடியாக ராமனிடம் ஆசி பெற்று புறப்பட்டான். ராமன் ஆணையிட்டதாகச் சொல்லிய விபீஷணன், சேடிப்பெண்களை வரவழைத்து சீதையை அலங்கரித்து அழைத்து வரும்படி தெரிவித்தான். அலங்காரம் செய்ய சீதை மறுத்தாலும், அது ராமனின் விருப்பம் என்பதை அறிந்து அவள் உடன்பட்டாள். ராமனை நோக்கி விபீஷணன் முன்னே வர, சேடிப் பெண்கள் புடைசூழ வந்தாள் சீதை. அவளைப் பார்த்தவர்களுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது.
|
|
|
|