|
“உருவ வழிபாடு உங்கள் ஆன்மிக வளர்ச்சிக்கு நல்லதில்லை.” ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் அந்தத் துறவி. அவருக்கு முப்பது வயது இருக்கும். விசாரித்த போது அவர் ஐநுாறு கோடி ரூபாய் சொத்துக்குச் சொந்தக்காரர் என்பது தெரிந்தது. ஆயிரக்கணக்கில் சீடர்கள் இருந்தனர். அவர்களில் பலர் கோடீஸ்வரர்கள். யாரோ ஒரு நண்பர் என்னை வற்புறுத்தி துறவியிடம் அழைத்து வந்துவிட்டார். “நீங்கள் சொல்லும் பச்சைப்புடவைக்காரி கடவுள் இல்லை. பக்திவழி சரியானதல்ல. நீங்கள் கெட்டது போதாது என்று ஊரையும் கெடுக்கிறீர்கள். எல்லாவற்றையும் உதறி விட்டு என்னிடம் வாருங்கள். ஞானத்தின் மூலம் கடவுள் நிலையை அடையும் வழியை சொல்லித் தருகிறேன். தனிப்பட்ட முறையில் சில சாதனைகளையும் உங்களுக்கு கற்பிக்கிறேன். ஆறே மாதங்களில் கூடுவிட்டுக் கூடுபாயும் அளவிற்கு சக்தி பெற்றுவிடுவீர்கள். அதன் பின் நீங்கள் நினைத்தது நடக்கும். நம் சொந்த அறிவாலும் கடுமையான உழைப்பாலும்தான் நாம் விடுதலை பெற முடியும். எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார் என்பது ஆன்மிக வளர்ச்சிக்கு ஆபத்தானது. சொன்னால் கேளுங்கள், பச்சைப்புடவைக்காரி நிஜமில்லை. உங்கள் கற்பனை. அவளை விட்டுவிட்டு என் ஆஸ்ரமத்தைப் பற்றி என் யோக சக்திகளைப் பற்றி எழுதுங்கள். உங்களைப் பொன்னால் அபிஷேகம் செய்கிறேன். எத்தனை நாளைக்குத்தான் பச்சைப்புடவைக்காரியின் புடவைத் தலைப்பைப் பற்றியபடி சுற்றப் போகிறீர்கள், சொல்லுங்கள்.” என்றார். “என்னைப் பொறுத்தமட்டில் இந்த உலகம், சூரியன் சந்திரன் கூட நிஜமில்லை. பச்சைப்புடவைக்காரியின் அன்பு மட்டுமே நிஜம். அந்த அன்பரசியை, என்னைக் காலமெல்லாம் கொத்தடிமையாகக் கொண்டவளைப் பற்றி எழுதி கல்லடி பட்டாலும் படுவேனே ஒழிய ஒரு செப்படி வித்தைக்காரனைப் பற்றி எழுதிப் பாவத்தைச் சேர்க்க மாட்டேன்’’ “இருந்தாலும் ஒரு அடிமைக்கு இவ்வளவு அகங்காரம் கூடாது.” “நான் அடிமைதான். ஆனால் யாருக்கு? உலகேழும் பெற்ற உமையவளுக்கு. எங்கள் மதுரையின் அரசிக்கு. மரகதவல்லிக்கு. சாதாரண மனித அறிவுக்கு அடிமையான நீங்களே இவ்வளவு ஆடும்போது அந்த அன்பரசிக்கு அடிமையாக இருக்கும் நான் இன்னும் அதிகமாகத் தான் ஆடுவேன். பச்சைப்புடவைக்காரியின் பாத கமலங்களே சரணம்.” கோபத்துடன் வெளியே ஓடி வந்தேன். கூடவே ஓடி வந்தார் நண்பர். “தப்பு பண்ணிட்டீங்க...சார். சுவாமிஜிக்கு பில்லி, சூனியம், ஏவல் எல்லாம் தெரியும். அவர் நெனைச்சா உங்கள ரத்த வாந்தி எடுக்க வைக்கலாம்’’ ‘‘செய்யட்டுமே! பச்சைப்புடவைக்காரிக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது. அப்படியே செய்வினையால ரத்தம் கக்கினா அது அவளுக்குத் தெரிந்தே நடக்கிறது என்று தான் பொருள். நான் துன்பப்படவேண்டும் என அவள் நினைத்தால் அப்படி துன்பப்படுவதுதான் நான் செய்யும் உத்தமமான வழிபாடு. வெளியே அந்தத் துறவியைத் தரிசனம் செய்ய ஆயிரம் பேர் காத்திருந்தனர். கூட்டத்தில் முண்டியடித்தபடி வெளியேறியபோது ஒரு நடுத்தர வயதுப் பெண் கையைப் பிடித்தாள். “என்னப்பா பயந்து விட்டாயா?” அவளது முகத்தில் இருந்த அருளும், கம்பீரமும் யார் என அடையாளம் காட்டியது. “இல்லை, தாயே. எனக்கென்று நீங்கள் இருக்கும் போது எதற்கு பயமும் பரங்கிக்காயும்? ஆனால் என் மனதில் ஒரு கேள்வி எழுகிறது.” “என்னப்பா?” “அந்தத் துறவி போல ஒருவன் தன் சொந்த அறிவு, முயற்சியால் தன் கர்மக்கணக்கைச் சரி செய்ய முடியுமா?அவன் கூடுவிட்டுக் கூடு பாய்வானாமே! இதையெல்லாம் கடவுளின் அருள் இல்லாமல் செய்ய முடியுமா?” “அவனுக்கு அருள் நிறைய இருக்கிறது. அதனால் தான் பலரையும் ஈர்க்க முடிகிறது. அவனிடம் பணம் சேர்கிறது. ஆனால் எல்லாம் தன் அறிவால்தான் நடக்கிறது என்று நினைக்கிறான். முட்டாள். கர்வம் பிடித்தவன்” “ஆன்மிகத்தில் நல்ல நிலையை அடைந்தவர் கூட இப்படி இருப்பார்களா என்ன?” “அங்கே நடக்கும் காட்சியைப் பார். அவர் ஒரு கோடீஸ்வரர். சாதாரண பலகாரக்கடை நடத்தியவருக்கு இன்று நாடெல்லாம் கடைகள் இருக்கின்றன. அவருடைய இனிப்பு வகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஆண்டு வர்த்தகம் செய்கிறார். சென்னையின் முக்கிய இடத்தில் அவருக்கு கிளை இருந்தது. எப்போதும் கூட்டம் அலைமோதும். வருபவர்கள் அனைவரும் அவர் கடையில் இனிப்பு, காரம் சாப்பிட்டு விட்டு அருகிலுள்ள சின்னக் கடையில் போய் தேநீர் குடிப்பர். அந்தக் கடையிலும் நல்ல கூட்டம் காணப்பட்டது. இது கோடீஸ்வரருக்குப் பிடிக்கவில்லை. தன் கடையிலேயே தேநீர் விற்க ஏற்பாடு செய்தார். என்றாலும் அவருடைய வாடிக்கையாளர்கள் பக்கத்துக்கடைக்குத் தான் சென்றனர். கோடீஸ்வரர் அந்தக் கடையை விலைக்கு பேச முயன்றார். ஆனால் அந்த கடைக்காரன் விற்க மாட்டேன் என பிடிவாதமாகச் மறுத்தான். அவன் அங்கு வாடகைக்கு இருப்பதை அறிந்த பின்னர், அதிக விலைகொடுத்து அந்த இடத்தை வாங்கினார். இடத்தின் சொந்தக்காரர் என்ற முறையில் காலி செய்யச் சொன்னார். அப்போதும் வன் மறுத்தான். அவன் மீது அவர் தொடுத்த வழக்கு நிலுவையில் இருந்தது. வழக்கில் ஜெயித்துவிடலாம். ஆனால் தீர்ப்பு வர ஐந்தாறு வருடமாகும் என்றார் அவரது வழக்கறிஞர். அதன்பின் அவன் மேல் முறையீடு செய்ய வாய்ப்புண்டு என்றும் தெரிவித்தார். அந்தக் கடையில் கூட்டம் இன்னும் அலைமோதிக்கொண்டுதான் இருந்தது. தனக்கு பணம், செல்வாக்கு இருந்தும் இந்த அவனைக் காலி செய்ய முடியவில்லையே என வருந்தினார் கோடீஸ்வர தொழிலதிபர். “இதெல்லாம் ஜுஜுபி. ஒரு லட்ச ரூபாய் செலவாகும். அடுத்த வாரமே காலி பண்ண வச்சிடறேன்.” என்று ரவுடி ஒருவன் சொன்னதைக் கேட்டு அவனுக்கு பணம் கொடுத்தார். ரவுடியும் கடைக்காரனை மிரட்டினார். அவன் கொஞ்சம் தெனாவட்டாகப் பேசவே இரண்டு தட்டு தட்டினார். அடி எசகு பிசகாக பட்டதில் அவன் இறந்தான். கொலை என்றானதும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ரவுடியின் ஆட்களில் ஒருவன் கோடீஸ்வரர் சொல்லித்தான் கொலை நடந்தது என தெரிவித்ததால் கோடீஸ்வரர் கைது செய்யப்பட்டார். முன்பகை இருந்ததால் கொலை செய்யும் நோக்கம் உறுதியானது. பத்தாண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. சரி, இதற்கும் இளம் துறவிக்கும் என்ன தொடர்பு?” “இருக்கிறதப்பா. அந்தக் கோடீஸ்வரன் முயற்சியால் எதையும் சாதிக்கலாம் என நினைத்தான். விதி இடையில் விளையாடியதால் வாழ்வே கேள்விக்குறியானது. “பிரச்னையை அன்போடும், பணிவோடும் அணுகியிருந்தால் கடை மலிவான விலைக்கே கிடைத்திருக்கும். அந்தக் கடைக்காரனுக்குப் புற்று நோய் வந்து விட்டதால் கடையை விட்டு விட நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். கோடீஸ்வரர் ஒழுங்காக வியாபாரம் பேசியிருந்தால் அவருக்கே கிடைத்திருக்கும். மீறிப் பேசியதால் கோபம் வந்துவிட்டது. கொடுக்க மறுத்துவிட்டான் அந்த கடைக்காரன். “சாதாரண இடப்பிரச்னை தீரவே அன்பு, பணிவும் தேவைப்படும்போது இந்த சம்சார சாகரத்திலிருந்து தப்பிக்க எவ்வளவு அன்பு தேவைப்படும்? “வாழ்விலும் சரி, ஆன்மிகத்திலும் சரி கடவுளின் பங்கு முக்கியமானது. சொல்லப்போனால் அருள் இருந்தால்தான் உன்னால் முயற்சிக்கவே முடியும். இந்த உண்மையை உணர்ந்தவன் உற்சாகமாக உழைப்பான். அந்தத் துறவிக்கு அந்த உணர்வு இல்லை. அவன் இன்று அசுரநிலைக்கு ஆளாகி விட்டான். விரைவில் அவனை சம்ஹாரம் செய்யப் போகிறேன்.” “எப்படி தாயே?” “ஒரு பெண் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு சீரழிவான். மீதமுள்ள வாழ்நாள் சிறையில் கழியும். அங்கு தனிமையில் அவன் மனதில் ஞானம் பிறக்கும். பக்தியால் சரணடைந்து உரிய காலத்தில் என்னை அடைவான். அன்புதான் அனைத்தும் என்ற உன் கோட்பாடே சிறந்தது. அதை எந்தக் காலத்திலும் யாருக்காகவும் விட்டு விடாதே.” “கொத்தடிமைக்கு ஏது தாயே கோட்பாடும் கொத்தவரைக்காயும்? என் இலக்கு, கோட்பாடு, வாழ்க்கை, முக்தி நிலை என்று எல்லாமே நீங்கள்தான், தாயே.” “நான் என்றால் என்ன அன்பு என்றால் என்ன?” அழுதபடி தாயின் கால்களில் விழுந்தேன். எழுந்தபோது அவள் அங்கு இல்லை.
|
|
|
|