|
‘இது என்ன மாயம்?’ என்ற கேள்வியிலும் வியப்பிலும் எல்லோரும் திகைத்து நிற்க, தேசிகன் கைகளைக் குவித்து வணங்கியபடியே பரவசமானார். அவர் வணங்கவும் எல்லோரும் வணங்கினர். அப்படியே சென்று அனந்த சரஸ் என்னும் குளத்து நீரை கைகளில் அள்ளி தலையில் தெளித்தார். ‘‘சுவாமி... தங்கள் வணக்கத்திற்கும், இந்த தெளிப்பிற்குமான காரணம் அறியலாமா?’’ எனக் கேட்டார் ஒருவர். ‘‘சொல்கிறேன். நான் பார்த்த அந்த அன்னம் ஒரு கந்தர்வன்! அனந்த சரசில் மூழ்கி எழுந்த பயனாக சாப விமோசனம் அவனுக்கு கிடைத்துள்ளது. இக்குளம் நம் போன்ற மனிதர்களுக்கானது மட்டுமல்ல, தேவர்களுக்குமானது. சர்வ பாவ நிவாரணி என்று கூறலாம்’’ ‘‘அதனால் தான் என் கனவில் இக்குளத்தில் இருந்து எழுந்து ஈரம் சொட்ட எம்பெருமான் வந்தாரா?’’ ‘‘ இதுவும் நான் உறைகின்ற ஒரு இடம் என அவன் கூறுவதாக பொருள் கொள்ள வேண்டும்’’ ‘‘எம்பெருமானின் இருப்பிடமாக கருதும் அளவுக்கு இது அத்தனை உயர்வானதா?’’ ‘‘பஞ்சபூதங்களில் நீரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பூமிப்பிராட்டியை நாரம் எனப்படும் நீரால், நான்கில் மூன்று பங்காக அணைந்து கிடப்பவன் என்னும் பொருளிலேயே நாரணன் என்ற பெயர் உருவானது. இங்கு மட்டுமல்ல...பாற்கடலிலும் இதுவே அவன் நிலை! ஏனைய பூதங்களிலும் நீரே முதன்மையானது. பிறப்பு முதல் இறப்பு வரை நீர் தொடர்கிறது. தாயின் கருப்பையில் நீர்க்குடத்தினுள் தான் பாதுகாப்பாக வடிவாகிறோம். வாழ்வின் முடிவில் அஸ்தியாகி நீரில் கரைந்து மறைகிறோம். இடைக்காலத்தில் நீரே சகல புனிதங்களுக்கும் காரணமாக இருக்கிறது. தேகம் குளிர்வதும் நீரால் தான். தாகம் குளிர்வதும் நீரால் தான்... இந்த நீர் குளமாக இருக்கையில் மூழ்கி அருள் பெறுகிறோம். இதே நீர் ஆறாகும் போது அதில் மூழ்கி நம் பாவங்களை நினைத்து வருந்திட, அது ஆற்றோடு போகிறது. ஒன்றில் பெறுகிறோம், இன்னொன்றில் விடுகிறோம். கடலில் மூழ்கும் போது கடலோடு சேரும் நதிகள் போல, நாமும் அந்த நாரணனுடன் சேர்ந்தவர்களாகிறோம். இதனால் தான் புனித நீராடல் எனும் சடங்கு நம் சமயத்தில் பிரதானமானது. கடல் நீராட்டில் நாம் அருளை அடைகிறோம். நமக்கெல்லாம் வழிகாட்டிட மகாபாரதத்தில் அர்ஜூனனும், கிருஷ்ணனும் நதிகள், குளங்களில் நீராடி தீர்த்த யாத்திரை செய்து அதை சமயக்கடமை என உணர்த்தினர். பூதங்களில் ஒன்றான நீருக்கு மேலான ஆற்றல் உண்டு. அது சப்தத்தை கிரகித்து அதற்கேற்ப தன்னை ஆக்கிக் கொள்ளும். நீரை விரலால் தொட்டுக் கொண்டு மந்திரம் சொல்லும் போது மந்திர சப்தம் விரல்வழி நீரில் சேர்ந்து அதன் அணுக்களில் மாற்றங்கள் நிகழும். நீரை அமிர்தமாக்கி உயிரைக் காக்கலாம். நீரை விஷமாக்கி உயிரை அழிக்கலாம்! நீரை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் எல்லாம் உள்ளது. சன்னதிக்குள் அர்ச்சிக்கப்படும் போது சொல்லும் மந்திரங்களை, எம்பெருமான் முன் உள்ள பாத்திர நீர், கிரகித்துக் கொள்கிறது. அதை பிரசாதமாக பக்தர்களைச் சேர்கிறது. தலையில் தெளித்துக் கொள்ள உடலே சுத்தியாகிறது. நீர் இப்படி நமக்கு எல்லா வகையிலும் பயன்படுகிறது. அமுதமேயானாலும் அது உணவானால் மலமாகி தீர வேண்டும். அதே போல் பெரும்பூதமான நீரும், நம் அழுக்கை தனதாக்கிக் கொண்டு சாக்கடையாவும் ஆகிறது. நீரின் அருமை பெருமைகளை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதன் அருமையை உணர்த்த தாயைக் கூட பழிக்கலாம். தண்ணீரை பழிக்கக் கூடாது எனப்பட்டது. தாயினும் மேலானது என்ற பொருளையே இங்கே கொள்ள வேண்டும்.’’ வேதாந்த தேசிகன் பேச்சால் அங்கிருந்தோர் சிலிர்ப்பு அடைந்தனர். அவரும் தொடர்ந்தார். கோயில் குளங்கள் இருப்பதன் நோக்கத்தை அனைவரும் உணர வேண்டும். அதிலும் அனந்த சரசின், அதாவது அமைதிப் பொய்கையின் சிறப்பை காஞ்சிவாழ் மக்கள் கட்டாயம் உணர வேண்டும். இது வடிவத்தில் குளமாக தோன்றலாம். ஆனால் இதற்கு பாற்கடலின் குணம் உண்டு. கூடுதலாக நாம் சொல்லும் பிரபந்தம், பாசுரம், மந்திரங்களின் சப்த அலைகளை இது கிரகித்து தனக்குள் கொள்கிறது. இதில் ஒருவர் பக்தியுடன் நீராடும் போது தோஷங்கள் நீங்கும். தோஷம் நீங்கிய பிறகு சன்னதியில் வணங்கும் போது பெருமாள் அருளால் நல்லெண்ணம், கருணை, உதவும் தன்மை போன்ற நற்குணங்கள் உண்டாகும். ஒரு ஊரின் கோயிலும், அதன் குளமும் அந்த ஊருக்கே பெரும் பொக்கிஷமாகும். எனவே இரண்டையும் துாய்மையாகவும், எம்பெருமானின் மாற்று சொரூபமாகவும் கருதி பக்தியோடு பாதுகாக்க வேண்டும். அதிலும் இந்த அனந்த சரஸ் சாதாரண புகழ் கொண்டதல்ல. உலகிலுள்ள குளங்களுக்கு எல்லாம் தாய் போன்றது’’ என்றார். எல்லோரும் பிரமிப்புடன் பார்த்தனர். ஒருவர் மட்டும் செருமியபடி, ‘‘சுவாமி...’’ என்றார். ‘‘சொல்லுங்கள்’’ ‘‘குளங்களுக்கு எல்லாம் தாயாக விளங்குகிறது என்றால் இப்போது அப்படி இல்லை என்று பொருளா?’’ அவரைப் பார்த்த தேசிகன், ‘‘நுட்பமாய் கேட்டுள்ளீர்...பலே!’’ என்றார். பின் குளத்தைப் பார்த்தவர், ‘‘ஒரு வகையில் அதுவே உண்மை. இனி தான் இக்குளம் உலகத்தவரால் பார்க்கப்படப் போகிறது’’ என்றார். ‘‘எப்படி என்று முடியுமா?’’ ‘‘அதை காலமே கூறிடும். நான் கூறக் கூடாது. ஒன்று மட்டும் உறுதி. இக்குளமும், இதில் நீரும் உள்ளவரை இக்கலியில் பெரும் தீமை ஏற்படாது. இக்குளம் கொண்டாடப்படும் போது உலகும் இன்பமுறும் நலங்கள் விளையும்’’ ‘‘சுவாமி...திருவரங்கம் போல் சன்னதியை மூடும் நிலை இங்கு வராது தானே?’’ ‘‘வரக் கூடாது... அதுவே வரதனிடம் நான் கோரியுள்ள வரம்’’ ‘‘என்றால் எம்பெருமான் கல்கியாக அவதாரம் எடுத்து வந்து எதிரிகளை வெல்வான் எனக் கொள்ளலாமா?’’ ‘‘அப்படியானால் நம்மால் எதுவும் இயலாது என்பது உங்கள் எண்ணமா?’’ தேசிகன் கேள்வி கேட்டவரையே மடக்கினார். ‘‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’’ ‘‘எதிரியும் ஒரு மனிதன் – நாமும் மனிதர்கள் தானே?’’ முட்டவரும் மாட்டை பிடித்துக் கட்டினால் அது அடங்கிடாதா?’’ ‘‘பதிலுக்கு போர் செய்யச் சொல்கிறீர்களா?’’ ‘‘ஆம்...ஆனால் இது ரத்தம் சிந்தாத அகிம்சைப் போர். புத்திப்போர்’’ ‘‘சற்று விளக்கமாக சொல்லுங்களேன்’’ ‘‘பொதுவாக போர் என்பது நாட்டுக்கானதாக இருக்கும். உலகை ஒரு குடையின் கீழ் ஆள்வதே விருப்பமாக இருக்கும். இப்போதைய நமக்கானது நாடு பிடிக்கும் போர் மட்டுமல்ல, நாட்டையே மாற்றப் பார்க்கும் போரும் கூட அதாவது கலாசார யுத்தம்...!’’ ‘‘உண்மை’’ ‘‘இதில் நம் கலாசாரம் மாறிவிட அனுமதிக்க கூடாது. இது நமக்கான சோதனை. நம் கலாசாரம் அன்பு, கருணை, விடாமுயற்சி, பக்தி, தியாகம் போன்ற அருங்குணங்களால் ஆனது. இவைகளில் இருந்து விலகிடக் கூடாது.’’ ‘‘இன்னமும் விளக்கமாக கூறுங்கள்’’ ‘‘ஈ எறும்புக்கு கூட துரோகம் இழைக்க கூடாது என்பது நம் தர்மம். அதே சமயம் உயிர் போவதாயினும் தர்மத்தை நாம் விட்டு விடலாகாது. எனவே நமக்கு எது நேர்ந்தாலும் எம்பெருமானின் திருவடிகளை விட்டு விடக் கூடாது. நம் வாழ்வு என்பது நாம் ேக்ஷமமாக வாழ்வதில் மட்டுமில்லை. பிறர் ேக்ஷமத்துக்காக வாழ்வதிலும் உள்ளது. அப்படி வாழும்போது உயிர் பிரிய நேரலாம். அந்த உயிர் அவன் திருவடிகளைத் தான் சென்று சேரும். கலியில் இதுவே நியதி! கலியில் தெய்வம் மனித வடிவில் தான் வரும். இதிகாச சான்னித்யங்களை இப்போது எதிர்பார்க்கக் கூடாது.’’ ‘‘அப்படியானால் அவன் வர மாட்டான். நாமே நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா?’’ ‘‘தவறு... நம் ஆன்ம சக்தியே அவன் தந்தது தானே? அதை வலிமைப்படுத்துங்கள். அசைக்க முடியாதது நம் சுதர்மம் என்பதை நிரூபியுங்கள். பிரகலாதனை மனதில் கொள்ளுங்கள். அணுத்துகள் அளவு கூட அவனிடம் அவநம்பிக்கை இல்லை. அந்த நம்பிக்கை நம்மிடம் இருந்தால் போதும். எதிரி தோற்று தன் வழிக்கு சென்று விடுவான். வெற்றி கொண்ட வரலாறு நமக்கு மிஞ்சும். அது தான் வரும் தலைமுறைக்கும் தேவை’’ தேசிகனின் உபதேசம் அங்குள்ளோரை தெளியச் செய்தது. அப்படியே அந்த குளம் எந்த வகையில் உலகப் பிரசித்தயடையப் போகிறது என்ற கேள்வியும் அவர்களுக்குள் எழும்பியது. காலச் சக்கரமும் அதை நோக்கிச் சுழன்றது. அவர்களுக்கு தெரியாது உள்ளே எம்பெருமான் ஒரு மோன உறக்க நிலையில் துயில் கொண்டிருப்பது....! |
|
|
|