|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » பிச்சையல்ல ... பிட்சை |
|
பக்தி கதைகள்
|
|
திருவரங்கத்து சுதர்சன சூரியின் இரு பிள்ளைகளும் அவரின் சீடராகி வேதாந்த தேசிகருக்கு உறுதுணையாக இருந்ததோடு மனித வாழ்வின் தாத்பரியங்களை அறிந்து கொள்ளவும் செய்தனர். தேசிகனின் தர்மபத்னியான திருமங்கையும், தேசிகனின் மனம் கோணாமல் அவர் காட்டும் வழியில் நடப்பவளாகத் திகழ்ந்தாள். தேசிகன் விசேஷ நாட்களில் உஞ்சவிருத்தி செய்வது வழக்கம். கடவுளின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டும், சப்பள இசை எழுப்பிக் கொண்டும் மக்களிடம் உஞ்சவிருத்தி பெற்று அமுது செய்து அதைப் பிறர் உண்ணச் செய்து பின் தானும் உண்டு அந்த விசேஷ நாளை சான்னித்யம் மிகுந்ததாக ஆக்குவதே இதன் நோக்கம். உஞ்ச விருத்தி என்பதற்குள் நுட்பமான பொருள் உண்டு. களத்து மேட்டில் நெல் போரடித்து முடித்த நிலையில், அங்கு சிறிது நெல்லை விட்டுச் செல்வர். அவ்வாறு செய்வது என்பது லட்சுமியின் அகலாத தன்மையைக் குறிக்கும். அங்கே விடப்படும் நெல்லை விருத்தி நெல் என்பர். அதை தானமாக பெற்று உஞ்ச விருத்தி செய்பவர் உண்ண வேண்டும் என்பது விதி. அவ்வாறு அவர் பசியாறினால் அந்த ஊர் செழிப்போடு இருக்கும் என்பது இதன் அடிப்படை. உஞ்சவிருத்தி செய்பவர் என்பவர் தெய்வத்தின் பிரதிநிதி. கோடி கோடி சொத்துக்கள் இருப்பினும் அதை எல்லாம் துறந்து, கடவுளின் நாமம் சொல்லிச் சென்று உஞ்ச விருத்தியால் அரிசியைப் பெற்று அதைக் கொண்டு தன் உடல்பசியை தணித்துக் கொள்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவைகள் குறித்து ஒருமுறை சுதர்சன சூரியின் புதல்வர்கள் கேள்வி எழுப்பினர். ‘‘சுவாமி... நமக்கென நிலபுலம் இருக்கும் போது எதற்காக இப்படி பிச்சை எடுக்க வேண்டும்?’’ எனக் கேட்டனர். தேசிகன் அதற்கு விளக்கம் அளித்தார். ‘‘சீடப்பிள்ளைகளே! முதலில் ஒரு திருத்தம் செய்து கொள்ளுங்கள். உஞ்சவிருத்தி பிராமணன் பெறுவது பிச்சையல்ல... பிட்சை! பிச்சை என்பது நிர்கதிக்கு ஆளானவர் பெறுவது! பிட்சை என்பது நற்கதிக்கு ஆளானவர் பெறுவது! எல்லாவற்றையும் இழந்து பாவ கர்மங்களாலே வறுமை அடைந்து உயிர் வாழ வேண்டி ஒருவன் பெற்றிடுவதே பிச்சை. ஆனால் எல்லா செல்வங்களும் இருந்திட, அருட்செல்வமே பெரிது என எண்ணி கடவுளின் நாமம் சொல்லிச் சென்றபடி ஒருவர் பெறுவது பிட்சையாகும்! பிச்சை இடுபவருக்கு புண்ணியம் சேரும். ஆனால் பெறுபவருக்கு ஒரு பயனும் இல்லை. அன்றைய பசி அடங்குவதோடு சரி... ஆனால் பிட்சை இடுபவர், பெறுபவர் என இருவரும் மேன்மை அடைகின்றனர். குறிப்பாக இடுபவரின் பாவ கர்மங்கள் நீங்குகின்றன. பெறுபவரும் நான் என்னும் அகந்தை இல்லாமல் பற்றில்லாத நிலையில் வாழ்பவராகிறார். கடவுளின் நாமம் சொன்ன பயன் இருவருக்கும் ஏற்படுகிறது. ஆக உஞ்சவிருத்தி பெறுபவர், அளிப்பவர் என இருவரையும் நற்கதிக்கு ஆளாக்குகிறது. எல்லோராலும் உஞ்சவிருத்தி பெற முடியாது. தன்னை வென்ற ஒருவனாலேயே உஞ்ச விருத்தி பெற்றிட முடியும். தன் செல்வங்கள் மேலானதல்ல. அருட்செல்வமே மேல் என்று உணர தெளிவும், ஞானமும் வேண்டும்’’ என விளக்கம் அளித்தார். சீடர்களிடம் பிரமிப்பு! அந்த விளக்கம் பெற்ற நிலையில் அன்றைய உஞ்ச விருத்திக்கும் அவரோடு சென்றனர். காஞ்சி மாநகர வீதிகள் அன்று புனிதம் அடைந்தன. தேசிகர் எழுப்பிய கடவுள் நாமக்குரல் வீடுகளில் இருப்போர் காதுகளில் விழுந்து அவர்களையும் துதிக்கச் செய்தது. பல பெண்கள் தேசிகரின் கால்களை நீ்ர் விட்டு அலம்பி, அந்த நீரைத் தங்களின் தலையில் தெளித்து புனிதம் அடைந்தனர். சிலர் வேதாந்த தேசிகனை எம்பெருமானாகவே தரிசித்தனர். தேசிகர் இப்படி தெருவில் வருவதை விஜயநகர அரசாங்க பட்டயக்காரர் ஒருவரும் கண்டார். அவர் பெயர் கோவிந்த சர்மன்! தேசிகர் பாடிய படி வருவதைக் கண்டவர் பல்லக்கை விட்டு இறங்கி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். ‘‘சுவாமி... நான் விஜய நகரிலிருந்து வருகிறேன்! என் பெயர் கோவிந்த சர்மன். வித்யாரண்ய மகாகுருவின் மாணவர்களின் நானும் ஒருவன்’’ ‘‘மகிழ்ச்சி.... உங்கள் குருநாதர் நலமாக இருக்கிறாரா?’’ ‘‘நலமுடன் இருக்கிறார். நான் வந்திருப்பது உங்களைக் காணவே’’ ‘‘ அப்படியானால் வீட்டில் சந்தித்து பேசலாமே...’’ ‘‘தங்கள் சித்தம்’’ என ஒதுங்க முற்பட்டவர் சட்டென்று திரும்பி, ‘‘தாங்கள் இது போல் உஞ்சவிருத்தி பெற்றுத் தான் வாழ வேண்டுமா?’’ எனக் கேட்டார். ‘‘இதைக் கேட்கத்தான் விஜய நகரத்தில் இருந்து வந்தீர்களோ?’’ என்றார். ‘‘இல்லை. தங்களை பல்லக்கில் ஏற்றி விஜயநகருக்கு அழைத்து வரும்படி அரசு உத்தரவு. எங்கள் குருநாதர் வித்யாரண்யரின் விருப்பத்தை நிறைவேற்ற வந்துள்ளேன்’’ ‘‘தங்கள் குருநாதருக்குத் தான் என் மீது எத்தனை பரிவு? நாம் மற்ற விஷயங்களை வீட்டில் பேசுவோம்’’ என தேசிகர் உஞ்சவிருத்தியைத் தொடர்ந்தார். தேசிகரின் பக்தியுணர்வைக் கண்ட கோவிந்த சர்மன் வியப்பில் ஆழ்ந்தார். உச்சி வெயிலில் வீடு திரும்பினார் தேசிகர். அவரது மனைவி திருமங்கை வரவேற்றாள். பாதங்களை தண்ணீர் விட்டு வணங்கியவள் அரிசிப்பையை தோளில் இருந்து இறக்கி எடுத்துச் சென்றாள். தேசிகரைப் பின்தொடர்ந்த பட்டயக்காரரான கோவிந்த சர்மர், பல்லக்கில் அமர்ந்து வராமல் நடந்தே வரலானார். அவருடன் வந்தவர்கள் விஜயநகர இலச்சினை பொறித்த பதாகைகளை பிடித்தபடி நின்றனர். தன் வீட்டிற்குள் சென்ற தேசிகர் உஞ்சவிருத்தி வழிபாட்டை நிறைவு செய்த நிலையில் சந்தியாவந்தனம் செய்தார். திருமங்கை அரிசியை தாம்பாளத்தில் கொட்டி பாத்திரத்தில் அளந்தாள். அப்போது அதில் ஐந்தாறு தங்க நாணயங்கள் கிடந்தன. அதைக் கண்டதும் இன்ப அதிர்ச்சி. தேசிகரும் சந்தியாவந்தனம் முடித்து வந்ததும் நாணயங்களைக் காட்டினாள். ‘‘அரிசியை அட்சதையாகக் கருதி பெறுவதே உஞ்ச விருத்தி! இதில் பொன்னைப் பெறுவது கூடாது. அது யாசகம் என்றாகி விடும்’’ என்றார். ‘‘இதை அளித்தவர்கள் தங்களுக்கு உதவி செய்ய எண்ணியிருக்கலாம் அல்லவா?’’ ‘‘ஆம்... அதுவே உண்மை. ஆனால் இதை நான் ஏற்பது சரியல்ல. உதவி பெறும் நிலையிலா வரதன் நம்மை வைத்திருக்கிறான்?’’ ‘‘நமக்கென்ன குறை? குறைக்கு தானே இந்த காஞ்சியில் குறை?’’ இருபொருள்பட தேசிகன் கேட்ட கேள்வி வெளியே காத்திருந்த கோவிந்த சர்மனின் காதுகளில் விழுந்து அவரையும் ஆச்சரியப்படுத்தியது! |
|
|
|
|