|
மழைக்கு அதிபதியான இந்திரன் யாதவர்களால் பிரத்யேகமாக வணங்கப்படும் தெய்வமாக இருந்தான். இவனுக்காக யாகம் வளர்த்து ஆஹுதி அளிப்பர். மழை பெய்யாத நேரத்தில் இந்திரன் தங்களின் மீது கோபத்துடன் இருப்பதாக கருதி வழிபடும் வழக்கமும் அவர்களிடம் இருந்தது. இந்திர வழிபாட்டால் மழை பொழியும் என்ற யாதவர்களின் எண்ணத்தை கிருஷ்ணன் மாற்ற விரும்பினான். ‘‘தந்தையே! இந்த யாகம் தவறானது. இந்திரன் தேவர்களின் தலைவனாக நியமிக்கப்பட்டவன். மனிதன் செய்த கர்மவினைப்படி பலனளிக்கவே அவனால் முடியும். நீங்களோ அவன் மழையை உருவாக்கி உயிர்கள் வாழ உறுதுணையாக நிற்பவன் போலக் கருதுகிறீர்கள். உலகில் உயிர்களின் வளர்ச்சிக்கும், அழிவுக்கும் சத்வ, ரஜோ, தாமசம் என்னும் முக்குணங்களே அடிப்படையானவை. இதில் மழை ரஜோ குணத்துடன் தொடர்புடையது. இதைப் புரிந்து கொள்ளுங்கள். நம் பகுதியை ஒட்டியுள்ள கோவர்த்தனமலை ரஜோகுணத்தைக் கொண்டது. இதனாலேயே பசுக்கள் உயிர் வாழ முடிகிறது. நமக்கும் நதியில் நீர் கிடைக்கிறது. இந்த மலை அசையாமல் நின்று செய்யும் கடமையின் முன்னால் இந்திரன் மிகச் சிறியவன். எனவே வழிபடுவதாக இருந்தால் இந்த மலையை வழிபடுங்கள்” என்று விளக்கம் அளித்தான். இதன் மூலம் ‛தான்’ என்ற எண்ணம் இல்லாத இயற்கையே சிறந்தது. பரம்பொருளான கடவுள் அதில் நிறைந்திருக்கிறார் என்பதை கிருஷ்ணன் உணர்த்தினான். அதன்பின் அவர்கள் அந்த கோவர்த்தன கிரிக்கு பூஜை நடத்தினர். இதை அறிந்த இந்திரன் கோபத்துடன் பூலோகம் வந்தான். “என்னை அலட்சியப்படுத்திய உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள். என் கோபம் தான் பெருமழை. என் கொந்தளிப்பே இடிமுழக்கம். என் சக்தி தான் இடிச்சத்தம் என்று எக்காளமிட்டு பெரும் மழையை உருவாக்கினான். வருணன், வாயு, எமன், அக்னி என்று சகலரையும் தன் ஆணைப்படி ஆட்டுவித்தான். அவர்களையும் தவறு செய்யத் துாண்டினான். சுற்றியுள்ள மலைப்பகுதி மூழ்கும் அளவுக்கு மழை பெய்ததால் யாதவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். எந்த கோவர்த்தன கிரியை வணங்கச் சொன்னானோ, அதை கிருஷ்ணன் குடை போல விரல்களால் துாக்கினான். அதன் நடுவில் விரல் வைத்து அதாவது ஆள்காட்டி விரலால் சக்கரம் போல ஏந்தத் தொடங்கினான். சுட்டுவிரலால் மலையைத் துாக்கிப் பிடித்தபடி நிற்கும் அதிசயம் கண்டனர். ‘உண்மையில் யார் இந்த கருப்பன்?’ இவனால் மட்டும் எப்படி முடிகிறது? இதைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அதிசயம் ஆயிற்றே! உயிர்களின் சக்திக்கெல்லாம் அப்பாற்பட்ட சக்தி படைத்த இவனோ பரம்பொருள்?” இப்படி அந்த வேளையில் இந்த அதிசயக் காட்சியை பார்த்தபடி நிற்பவர் மனங்களில் எல்லாம் பல கேள்விகள் பிறந்தன. கிருஷ்ணன் கோவர்த்தனகிரியைத் தன் சுண்டுவிரலால் துாக்கிப் பிடித்த கோலத்தில் நிமிடம், மணி, நாள் என்பதை எல்லாம் கடந்து, வாரம் என்ற கணக்கையும் கடந்து விட்டான். இந்த நேரத்தில் வாயுவுக்கும், வருணனுக்கும் சலிப்பு உண்டானது. பெய்யும் மழை பாதாளத்தில் இறங்கி விட, பொட்டு தண்ணீர் கூட யார் மீதும் படவில்லை. பசுக்கள், கோபர்கள், கோபியர், மலர்கள், தாவரங்கள் என்று அனைவரும் கிருஷ்ண லீலையில் தங்களை மறந்து நிற்பதை வாயுவும், வருணனும் கண்டனர். இந்திரனிடம் சென்ற அவர்கள், “இனி எங்களால் இயலாது” எனத் தெரிவித்தனர். இதன் பிறகே இந்திரன் விஷ்ணுவின் அவதாரமாக கிருஷ்ணனைக் கண்டு வணங்கினான். கிருஷ்ணனும் மன்னித்து அருள்புரிந்தான். இக்காட்சியை கண்ட யசோதை, நந்தகோபர், கோபர், கோபியர்கள் என அனைவரும் கிரிதர கோபாலனைக் கண்டு சிலையாகிப் போனார்கள்.
|
|
|
|