|
முதல் மாமனிதர்: 150 ஆண்டுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு வண்டியில் சிறுவன் ஒருவன் பள்ளிக்குச் செல்வது வழக்கம். ஒருநாள் மாணவர்களிடம், ‘‘ நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள்?’’ என்று கேட்டார் ஆசிரியர். அதற்கு மாணவர்கள் அவரவருக்கு விருப்பமானதாக வழக்கறிஞர், ஆசிரியர், மருத்துவர், மாவட்ட ஆட்சியர் என சொல்லி கொண்டே வந்தனர், அப்போது குறிப்பிட்ட சிறுவன், ‘‘நான் குதிரை வண்டிக்காரன் ஆவேன்’’ என்றான். மாணவர்கள் சிரித்தனர், ஆசிரியரும் கேலி செய்தார். சிறுவன் வீட்டிற்கு சோகமாக வருவதைக் கண்டாள் அவனது தாய். பள்ளி நடந்ததை விவரித்தான். தாய் அவன் மீது வருத்தப்படவில்லை,. ‘‘நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்’’ எனக் கேட்டாள்.
‘‘ தினமும் பள்ளிக்கு செல்லும் போது வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன். எனக்கும் அது போல் வண்டி ஓட்ட வேண்டும் என ஆசை எழுந்தது.’’ என்றான். இதை கேட்ட தாய் மகாபாரத படம் ஒன்றை எடுத்துக் காட்டி, ‘‘குதிரை வண்டிக்காரனாக வேண்டும் என்று சொன்னது தவறில்லை, ஆனால் எப்படிப்பட்ட குதிரை வண்டி ஓட்டுபவனாக இருக்க வேண்டும் தெரியுமா – மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு தேர் ஓட்டினானே கிருஷ்ணன், அவனைப் போல நீயும் சிறந்த தேரோட்டியாக இருக்க வேண்டும்’’ என்றார். அந்த சிறுவனே உலகெங்கும் ராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தர்.
இரண்டாம் மாமனிதர்: சிறுவன் ஒருவன் வீட்டில் படித்து கொண்டு இருந்தான். அப்போது வேலைக்கு சென்ற அவனது பெற்றோர் இரவில் வீடு திரும்பினர். வீட்டிற்கு வந்த அவனது தாய் உணவு சமைத்தார். மூவரும் சாப்பிட அமர்ந்தனர். தந்தைக்கு கருகிய ரொட்டியை பரிமாறினார் தாய். ஆனால் அவனது தந்தை பொருட்படுத்தாமல் சாப்பிடத் தொடங்கினார். ஆனால் ரொட்டி கருகி விட்டதை சொல்லி வருந்தினார் அந்த தாய், அதற்கு அவன் தந்தை,‘‘எனக்கு கருகிய ரொட்டி தான் ரொம்ப பிடிக்கும்’’ என்று பதிலளித்தார். இரவு துாங்கும் முன் தந்தையிடம் ஆசி பெற்ற சிறுவன் தயக்கமுடன், !!அப்பா உங்களுக்கு உண்மையில் கருகிய ரொட்டிதான் பிடிக்குமா?’’ எனக் கேட்டான். சற்று நேரம் மவுனமாக இருந்த தந்தை, ‘‘மகனே! உன் அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு, நமக்கு பணிவிடையும் செய்கிறார். பாவம் களைத்து போயிருப்பாள். ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்த போவதில்லை. ஆனால் கடும் வார்த்தைகள் ஒருவர் மனதை காயப்படுத்தும். நான் ஒன்றும் உயர்ந்த மனிதன் அல்ல. ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்’’ என்றார். இந்த பதில் சிறுவனின் மனதில் பதிந்தது. வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த அச்சிறுவன் தான் முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம். மூன்றாம் மாமனிதர்: ஒரு சிறுவன் பள்ளிக்குச் சென்றான். அவனிடம் ஒரு கடிதத்தை கொடுத்த ஆசிரியர், ‘ இதை உன் தாயிடம் கொடு’ என்றார். அந்த சிறுவன் மாலை வீடு சென்றதும் தாயிடம் கொடுத்தான். அதில் ‘‘உங்கள் மகனின் அறிவு வளர்ச்சி குறைவாக உள்ளது. அவன் பள்ளியில் தேர்ச்சி அடைய வாய்ப்பில்லை. அவன் தேர்வில் தோல்வி அடைந்தால் எங்கள் பள்ளியின் பெயர் கெடும். அதனால் அவனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்’’ என குறிப்பிட்டிருந்தது. இதை படித்த தாய்க்கு கண்ணீர் பெருகியது. அதை பார்த்த சிறுவன், ‘‘ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார்?’’ எனக் கேட்டான். கண்ணீரை துடைத்தபடியே, ‘‘இந்த கடிதத்தில் உன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? நீ மிகுந்த அறிவு திறன் கொண்டவன். பள்ளி உனக்கு தேவை இல்லை. நீ வீட்டிலிருந்தே படிக்கும் அளவுக்கு தகுதி உடையவன்’’ என்றார். அதன்பின் சிறுவன் வீட்டிலேயே தாயிடம் பாடம் கற்றார். அவ்வப்போது அவனை ஊக்கப்படுத்தும் வகையில் அறிவுரைகள் வழங்கினார். ‘எதற்கும் அச்சப்படாதே, தொடர்ந்து முயற்சி செய். கற்றுக்கொள்வதை நிறுத்திக் கொள்ளாதே. தொடர்ந்து உன்னை மேம்படுத்திக் கொள்’ என்றார். அந்த சிறுவன் தான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்த தாமஸ் ஆல்வா எடிசன். ...................... உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள் – உயர்ந்த எண்ணங்களால் என்ன பயன்? உயர்ந்த எண்ணங்களால் என்ன கிடைக்கும்? ஊரார் என்ன நினைப்பார்கள்? இவற்றை எல்லாம் கருதி உயர்ந்த எண்ணங்களை (அறம்) சமரசம் செய்து கொள்கிறோம். ஆனால் நம் எண்ணங்கள் நம்மோடு முடிவதில்லை. நம் எண்ணங்கள் தான் நாளைய தலைமுறைக்கான விதைகள். நம் எண்ணங்கள் மீதான நம்முடைய நம்பிக்கையின் உயரம் தான் .நாளை மரமாக வளரக்கூடிய தலைமுறையின் உயரம். *புவனேஸ்வரி தேவியின் உயர்ந்த எண்ணம் விவேகானந்தர்* என்னும் ஞானமாய் மலர்ந்தது. *ஜைனுலாப்தீனின் உயர்ந்த எண்ணம் அப்துல்கலாம்* என்னும் விஞ்ஞானமாய் மலர்ந்தது. *நான்ஸியின் உயர்ந்த எண்ணம் தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் ஆயிரம் கண்டுபிடிப்புகளாக மலர்ந்தது. இவர்கள் எல்லாம் மாமனிதர்கள், இவர்களைப் போல நம்மால் இருக்க முடியுமா என்று தோன்றலாம். இவர்கள் போல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மனிதர் போல் நம்மால் இருக்க முடியும். ஒரு மனிதர் தன் 8 வயது மகனுடன் சர்க்கஸ் பார்க்கச் சென்றார். டிக்கெட் கொடுப்பவர், ‘‘7வயது மற்றும் 7வயதுக்கும் குறைவானவர்களுக்கு அரை டிக்கெட்’’ என்றார். அந்த தந்தை இரண்டு முழு டிக்கெட் கேட்டார். டிக்கெட் கொடுப்பவர் கேட்டார் ‘‘உங்கள் மகனுக்கு எத்தனை வயது, அதற்கு தந்தை, ‘‘8 வயது.’’ என்றார். உடனே டிக்கெட் கொடுப்பவர், ‘‘உங்கள் பையன் பார்க்க 8 வயது போல் தெரியவில்லை, 7 வயது என்று சொல்லியிருந்தாலும் எனக்கு தெரிய போவதில்லை நான் அரை டிக்கெட் கொடுத்திருப்பேன்’’ என்றார். அதற்கு அந்த தந்தை, ‘‘நான் 7 வயது என்று பொய் சொன்னால் உங்களுக்கு தெரியாது. ஆனால் ‘ஒரு டிக்கெட்டுக்காக நான் பொய் சொல்கிறேன் என்று என் மகனுக்கு தெரியும்’’ என பதிலளித்தார். ‘‘நம்மால் மாமனிதர்களாக இருக்க முடியுமா என்பது தெரியவில்லை - ஆனால் ஒரு டிக்கெட்டுக்காக பொய் சொல்லாத மனிதராக இருக்க முடியும் அல்லவா?’’ உயர்ந்த எண்ணங்கள் தான் உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது. |
|
|
|