|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » போலிச் சாமியார் |
|
பக்தி கதைகள்
|
|
“மோசம் போயிட்டேன்யா” என்று கதறியபடி என் அறைக்குள் நுழைந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் பதறினேன். அந்தப் பெண்ணிற்கு நாற்பது வயதிருக்கும். ஆடைகள் கசங்கியிருந்தன. தலை கலைந்திருந்தது. “யாரும்மா நீ? என்ன வேணும்?” “என்னப்பத்தி ராமமூர்த்தி ஐயா சொல்லிருப்பாங்களே” இப்போது ஞாபகம் வந்தது. ராமமூர்த்தி என் வாடிக்கையாளர். “என்னம்மா பிரச்னை? ஏன் இந்தப் பதட்டம்? ஆசுவாசப்படுத்திக்கிட்டு மெதுவாச் சொல்லுங்க.” அவளது கணவன் அரசு வங்கியில் குமாஸ்தா வேலை செய்கிறான். இரு குழந்தைகள். கணவன் மிக நல்லவன். கெட்ட வழக்கம் ஏதும் கிடையாது. பெரிய சம்பளம் இல்லையென்றாலும் செலவுகளைக் கட்டுப்படுத்திச் சிக்கனமான வாழ்க்கை வாழ்கிறார்கள். பிரபல சாமியார் ஒருவரின் உரையைக் கேட்டதிலிருந்து அவளது கணவன் அடியோடு மாறிவிட்டான். திடீரென அதீத ஆன்மிக நாட்டம் வந்துவிட்டது. பூஜை அறையிலேயே பொழுதைக் கழிக்கிறான். தொலைக்காட்சி பார்ப்பதில்லை. காவி வேட்டிதான் கட்டுகிறான். மனைவிக்குக் கணவனாகவும் இல்லை. குழந்தைகளுக்கு நல்ல தந்தையாகவும் இல்லை. வங்கிப்பணியில் நாட்டம் இல்லை. . வெளியூர் கோயில்களுக்கு அடிக்கடி செல்கிறான். வங்கியில் அவனைக் கடுமையாக எச்சரித்துவிட்டார்கள். இதே நிலை தொடர்ந்தால் ஒரு நாள் வேலை போய்விடும் என்று சொல்லிவிட்டார்கள். “நல்ல விஷயம்தானேம்மா!” “என்னய்யா சொல்றீங்க?” “புருஷன் தண்ணியடிச்சான், சீட்டாடினான்னா கவலைப்படணும். ஆன்மிக நாட்டம் வந்தா சந்தோஷப்படணும்மா. உன் புருஷனுக்கு உலக வாழ்க்கை வெறுத்துப் போச்சி. இன்னும் சில வருஷங்கள்ல உன் புருஷன் பெரிய சாமியாராயிடுவாம்மா. அப்பறம் எல்லோரும் அவன் கால்ல விழுந்து கும்பிடணும்.” “என்ன சாமியாரோ? பொண்டாட்டி, பிள்ளைகளை தவிக்கவிட்டுட்டு எதுக்குய்யா சாமியார் வேஷம் போடணும்?” “உன் புருஷனால உலகத்துக்கே நன்மை கெடைக்கப்போகுதும்மா. அதுக்கு நீ கொடுக்க வேண்டிய சின்ன விலைதான் இது.” “பெரிய விலைய்யா. எங்க வாழ்க்கையையே காவு வாங்கிரும் போலருக்கு. என்னமோ போங்க. நீங்க ஆச்சு, உங்க பச்சைப்புடவைக்காரியாச்சு. நான் வரேன்.” அதன்பின் அவள் அதிக நேரம் இருக்கவில்லை. சென்னையில் ஒரு பிரபல துறவியின் உரையைக் கேட்கச் சென்றிருந்தேன். படிப்படியாக எப்படிப் பற்றைத் துறப்பது என அழகாக உரையாற்றினார் துறவி. நிறைவுடன் வெளியேறிய போது காவி உடுத்த ஒரு பெண் ஓடிவந்து கையைப் பிடித்தாள். “சுவாமிஜி உங்களப் பாக்கணும்னு சொல்றாரு.” அவள் பின்னால் ஓடினேன். மேடைக்குப் பின்னால் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றாள். “சுவாமிஜியக் காணோமே!” “நானே உன்னைத் தேடி வந்திருக்கும்போது உனக்கு சுவாமிஜி கேட்கிறதோ?” தாயே எனக் கதறியபடி பச்சைப்புடவைக்காரியின் கால்களில் விழுந்து வணங்கினேன். “அந்தப் பெண்ணின் கணவன் ஒரு போலி. அவனால் நிச்சயம் துறவியாக முடியாது. உன் கணிப்பு தவறு.” “உலகப் பற்றைப் படிப்படியாகத் துறந்து கொண்டிருக்கிறான் என்று நன்றாகத் தெரிகிறதே, தாயே!” “துறவு என்பது உள்ளே நிகழும் ஆன்மிகப் புரட்சி. அதை வெளி அடையாளங்களால் இனம் காண முடியாது. அவன் வேஷம் போடுகிறான். சலிப்பூட்டும் சாதாரண வேலை. சராசரி வாழ்க்கை. எப்படியாவது தன்னை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்ட வேண்டும் என்ற துடிப்பில் வந்தது தான் சாமியார் நாடகம்.” “ஆனால் இயல்பான வாழ்வை விட்டு விலகுவதைப் பார்த்தால்’’ “உன் மரமண்டைக்குப் புரியுமாறு சொல்கிறேன். அங்கே பார்.” அன்னை காட்டிய காட்சி சிலிர்க்க வைத்தது. ஆதி சங்கரரின் வாழ்வில் நடந்த நிகழ்வு. சங்கரரின் அன்னை இறந்துவிட்டாள். துறவியான சங்கரர் தாய்க்கு ஈமச்சடங்கு செய்யக்கூடாது என ஊரார் தடுக்கிறார்கள். சங்கரர் கெஞ்சியும் ஏற்க மறுத்தனர். தாயின் சடலத்தைத் துாக்கிக்கொண்டு மயானத்திற்கு செல்கிறார் சங்கரர். தனியாளாக ஈமச்சடங்குகளை முடிக்கிறார். “அடுத்து இந்தக் காட்சியையும் பார்.” அதிர்ந்தேன். சங்கரராக நடித்த நடிகர் இப்போது நடிகைகளுடன் சிரித்துப் பேசி புகை பிடிக்கிறார். “எவ்வளவு உருக்கமாக நடித்தார்? காட்சி முடிந்த அடுத்த கணமே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டான். இதேபோல் அந்தப் பெண்ணின் கணவன் நடிக்கிறான்.” “அடுத்து என்ன ஆகும், தாயே?” “ஆன்மிகமும் வாழ்க்கையும் பெரிய பள்ளிக்கூடங்கள். அதில் ஒவ்வொரு வகுப்பாகத்தான் கடக்க வேண்டும். ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றவர்கள் கண்களில் மண்ணைத் துாவி விட்டு பத்தாம் வகுப்பில் நுழைந்துவிட்டான். பத்தாம் வகுப்பிற்குரிய தேர்வை எழுதும் போது கையும் களவுமாகப் பிடிபடுவான்.” “பயமாக இருக்கிறது, தாயே! இவனது வேஷத்தால் மனைவி வேதனைப்படுகிறாள். அதுதான்..’’ “இவன் கர்மக்கணக்குப்படி இன்னும் ஒரு மாதத்தில் இதய நோய் வரும். மரணத்தின் விளிம்பில் வலியால் துடிக்கும்போது வேஷம் கலையும். அப்போது தாயைப் போல மனைவி பார்த்துக்கொள்வாள். அப்போதுதான் அவளது அன்பை அறிந்து மனம் திருந்துவான். இதுபோல் இருபது பிறவிகள் எடுத்த பின் பற்றற்ற நிலை உண்டாகி என்னை வந்தடைவான்.” “உண்மை நிலை தெரியாமல் தவறான அறிவுரை கொடுத்துவிட்டேனே தாயே!” “அவன் மனைவி இன்னும் துடித்துக்கொண்டிருக்கிறாள். சில நாட்களில் உன்னைத் தேடி வருவாள்.” “அவளிடம் நீங்கள் சொன்னதைச் சொல்லட்டுமா?” “வேண்டாம். அவளிடம் இன்னும் அதிகமாக அன்பு காட்டச் சொல். கணவனின் நடவடிக்கைகளை எதிர்க்கவேண்டாம் என்று சொல். பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு மாதம் பொறுத்திருக்கச் சொல். அதன்பின் அவனுக்கு இதய நோய் வரும்போது நிலைமை மாறிவிடும்.” “என் வயிற்றில் பால் வார்த்தீர்கள் தாயே.” “அது சரி, சாதாரண வேலையில் இருப்பவனுக்கே பற்றற்ற வாழ்வின் மீது ஆசை வந்துவிட்டது. அந்த நாட்டம் உனக்கு எப்போது வரப் போகிறது?” “எனக்கு வரவே வராது, தாயே!” “என்ன உளறுகிறாய்?” “அவன் இருப்பது சாதாரணப் பதவி. அதை தியாகம் செய்வது எளிது. ஆனால் நானோ உயர்பதவியில் இருக்கிறேன். எனக்கு இந்திரபதவியையே கொடுப்பதாக இருந்தாலும் என் பதவியைத் தியாகம் செய்ய மாட்டேன். பதவியைப் பற்றிக் கொண்டிருப்பவனுக்கு பற்றற்ற நிலை வர வாய்ப்பேயில்லை, தாயே!” “அப்படி என்னப்பா பெரிய பதவி?” “காலமெல்லாம் கொத்தடிமையாக இருக்கும் உன்னத பதவி, தாயே! அதன் மீது எனக்கு அதீதப் பற்று இருக்கிறது. அதனால் எனக்கு சாமியார் பதவியும் வேண்டாம், சாத்துக்குடியும் வேண்டாம்.” அன்னை சிரித்தபடியே மறைந்தாள். கண்ணீரைத் துடைத்தபடி வெளியே வந்தேன். பற்றற்ற நிலையை அடைவது எப்படி என்று அழகாகப் பேசிய சாமியார், பெண் சீடர்களுடன் பென்ஸ் காரில் ஏறுவதைப் பார்த்தேன். சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வந்தது.
|
|
|
|
|