|
நண்பரின் வற்புறுத்தலின்பேரில் ஒரு ஆன்மிகக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அதில் பேசியவர் ஒரு பிரபலமான இளம் துறவி. முகத்தில் அபரிமிதமான தேஜஸ். கண்களில் விவரிக்க முடியாத ஒளி. முன் வரிசையில் அமர்ந்த என்னை அவர் வார்த்தைகள் வசியம் செய்ததில் வியப்பே இல்லை. “நமக்கு வாழத்தான் தெரியாமல் போய்விட்டது. சாகவாவது தெரிய வேண்டாமா?” திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். “உங்களுக்கெல்லாம் எப்படி வாழவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க ஆசைதான். ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது. இங்கிருப்பவர்களில் பலர் ஏறக்குறைய வாழ்ந்து முடித்துவிட்டீர்கள். சாவை எதிர்நோக்கி இருக்கிறீர்கள். இந்தப் பிறவி முடிந்தபின் நீங்கள் அடுத்தகட்ட ஆன்மிக வளர்ச்சிக்குச் செல்ல வேண்டாமா? சாகும்போது தவறான எண்ணம் ஏதாவது வந்தால் ஆவியாக அலைந்துகொண்டிருப்பீர்கள். இல்லை, நாயாக, நரியாகப் பிறப்பீர்கள்” அதன்பின் ஒரு மணி நேரம் மூச்சுவிடாமல் பேசினார் அந்தத் துறவி. எந்த மாதிரியான தியானப் பயிற்சிகள் செய்ய வேண்டும், எந்த மாதிரியான வழிபாடுகள் செய்யவேண்டும் என விளக்கினார். “இது ஒரு முன்னோடி மட்டுமே. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் என் ஆஸ்ரமத்துக்கு வந்து என்னுடன் பத்து நாள் தங்குங்கள். சாகும் பயிற்சியை முழுமையாகக் கற்றுத் தருகிறேன்.” அன்று மீனாட்சியம்மன் கோயிலுக்கு நடந்தே போனேன். வழியெல்லாம் ஒரே அழுகை. அந்தத் துறவியின் வார்த்தைகள் குத்தீட்டிகளாக இதயத்தைத் துளைத்தன. நான் ஒன்றும் துாய வாழ்வு வாழவில்லையே! தவறான எண்ணங்கள் வரத்தானே செய்கின்றன. ஒரு வேளை சாகும் தருவாயில் அப்படி ஒரு எண்ணம் வந்து அதனால் பேயாக அலைவேனோ! பூஜை, புனஸ்காரம் எதுவும் தெரியாதே! பச்சைப்புடவைக்காரியின் அன்பை நினைத்துக் கண்ணீர் சிந்த மட்டும்தானே தெரியும்! அது போதாது போலிருக்கிறதே! வாழ்வின் முன்னிரவுப் பருவத்தில் இருக்கும் நான் எப்படி தியானம், நியமங்களைக் கற்கப் போகிறேன்? கோயிலுக்குள் செல்ல மனமின்றி பொற்றாமரைக் குளத்தின் படிகளில் அமர்ந்தேன். “எந்திரிங்க. இங்கல்லாம் உக்காரக்கூடாது. ம்...” கையில் பிரம்புடன் ஒரு பெண் வந்தாள். பார்க்க கம்பீரமாக இருந்தாள். இருக்கட்டுமே! இவள் யார் என்னை நாட்டமை செய்ய? “ஆளுங்க உக்காரணும்னுதான் படிக்கட்டு வச்சிருக்காங்க. உக்காரக்கூடாதுன்னா என்ன அர்த்தம்?” “இது என் வீடு. யார் வாசல் படியில் உட்கார வேண்டும், யார் உள்ளே வந்து அறையில் உட்காரவேண்டும் என்று நான்தான் முடிவு செய்வேன். உனக்கு இடம் உள்ளே இருக்கிறது.” “தாயே நீங்களா?” “என்ன செய்வது? என்னைப் பார்க்க உள்ளே வரவில்லை. அதனால் உன்னைப் பார்க்க வெளியே வந்துவிட்டேன்.” பச்சைப்புடவைக்காரியை விழுந்து வணங்கினேன். “வா, பிரகாரத்தில் அமர்ந்தபடி பேசலாம்.” முக்குறுணி விநாயகர் சன்னதிக்குச் சற்றுத் தள்ளி அன்னை படியில் அமர்ந்தாள். நான் தரையில் அவள் திருவடிக்கு அருகில் அமர்ந்தேன். “உன் கண்கள் கலங்கியிருக்கிறதே!” “நானே கலங்கிப் போயிருக்கிறேன், தாயே! வாழத்தான் தெரியவில்லை என நினைத்தேன். சாகவும் தெரியாது போலிருக்கிறதே. கடைசி நேரத்தில் என்னையும் அறியாமல் ஒரு தவறான எண்ணம் வந்து அதனால் நான் ஆவியாகி..’’ “நிறுத்து.” “உங்களுக்கு எப்படி பூஜை செய்வது என்றுகூடத் தெரியாத பாவியாகிவிட்டேனே, தாயே! பிராணாயாமம், தியானம், யோகப்பயிற்சி – இவை எதுவுமே தெரியாது, தாயே!” “உனக்குச் சாவைப் பற்றி உபதேசம் செய்தவன் ஏற்கனவே செத்திருக்கிறானா? செத்த அனுபவம் இல்லாத ஒருவன் உனக்கு எப்படிச் சாவைப் பற்றிச் சொல்லித் தர முடியும்?” “இருந்தாலும் அந்தக் கடைசி நிமிடங்களில்....” “அங்கே தெரியும் காட்சியைப் பார்.” சத்யா...25 வயது இளைஞன். ஆட்டோ ஓட்டிப் பிழைக்கிறான். திருமணமாகி இரண்டு வயதுப் பெண் குழந்தை இருக்கிறாள். சத்யாவிற்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே சர்க்கரை நோய் இருந்தது. மருத்துவர்கள் அதைக் கண்டுபிடித்துச் சரியான சிகிச்சை செய்யத் தவறிவிட்டனர். இதனால் சத்யாவிற்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. கடவுள் நம்பிக்கை சுத்தமாகக் கிடையாது. கோயில் வழியாக ஆட்டோ போனால் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொள்வான். தன்னை வஞ்சித்த கடவுளின் மீது அத்தனை வெறுப்பு. எல்லோருடனும் சண்டையிடுவான். தொட்டதற்கெல்லாம் கோபம் வரும். “உங்க மனசுல கொஞ்சம் கூட அன்பு இல்லயா?” என அவன் மனைவி பலமுறை கேட்டுவிட்டாள். ஒரு கட்டத்தில் சத்யாவின் சிறுநீரகங்கள் செயலிழந்தன. அவனது தாய் தன் சிறுநீரகங்களில் ஒன்றைக் கொடுத்தாள். சத்யாவின் உடல் அந்தச் சிறுநீரகத்தை நிராகரித்துவிட்டது. அப்போது இருந்த ஒரே வழி. வேறொரு மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதுதான். ஆனால் அந்தளவிற்குச் சத்யாவிடம் பணம் இல்லை. பரம்பரை வீட்டை விற்று மருத்துவச் செலவு செய்தனர். அந்தப் பணமும் தீர்ந்த பின் விற்க வேறு சொத்தும் இல்லை. உதவ ஆளும் இல்லை. சத்யாவிற்கு வாழ வேண்டுமென்ற ஆசை மறைந்தது. சோகமே உருவாகத் தன் கட்டிலின் அருகே நின்ற மனைவியையும், நடப்பதை அறியாமல் அவனைப் பார்த்துச் சிரித்த தன் மூன்று வயது மகளையும் பார்த்தான் சத்யா. மனைவியையும் குழந்தையையும் வெளியே அனுப்பிவிட்டு, சிகிச்சையளித்த மருத்துவரைப் பார்க்கவேண்டும் என் தெரிவித்தான். மருத்துவர் ஓடி வந்தார். “சாகப்போறேன் டாக்டர். மனசுல ஒரு கடைசி ஆசை..” “சொல்லு சத்யா. உன் பொண்ணப் படிக்க வைக்கறேன். உன் குடும்பம் கஷ்டப்படாம வாழ ஏற்பாடு செய்யறேன்.” “அதெல்லாம் சொந்தக்காரங்க பாத்துக்குவாங்க, டாக்டர். கையில காசு இல்லாம, சரியான சிகிச்சை இல்லாம இனிமே என்ன மாதிரி ஏழைங்க சாகாமப் பாத்துக்கங்க. அறியாமைக்கும் வறுமைக்கும் பலியான கடைசி ஆள் நானாத்தான் இருக்கணும். ஏதாவது செய்யுங்க, டாக்டர். நிதி திரட்டுங்க. விழிப்புணர்வு இயக்கம் ஆரம்பிங்க. என்ன மாதிரி ஏழைங்க காசு இல்லாம சாகற கொடுமையத் தடுத்து நிறுத்துங்க.” “சத்யாவின் வார்த்தைகள் ஒரு பெரிய இயக்கம் தோன்றத் தூண்டுகோலாக இருந்தது. அந்த இயக்கம் பல சத்யாக்களை நோயின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறது. வாழ்ந்தவரை சத்யா வெளிக்காட்டாத அன்பு கடைசி நிமிடத்தில் வெடித்துக் கிளம்பியது. பலரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது“ “ஒரு வேளை அப்படி கிளம்பாவிட்டால்.... அப்படி சத்யா பேசுவதற்கு முன்பே அவன் இறந்திருந்தால்… “ “அவன் மனதின் ஓரத்தில் சிந்தனை இருந்தாலும் போதும். அவன் ஆன்மா நற்கதிக்குச் செல்லும்’’ “அப்படி ஒரு சிந்தனையே தோன்றவில்லையென்றால்..’’ “ஜனனம் உன் தொடக்கமும் இல்லை. மரணம் உன் முடிவும் இல்லை. கடைசிவரை அன்பு வரவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது இன்னொரு பிறவி. பல ஆண்டுகள் சம்சாரத்தில் உழன்றால் ஒரு கட்டத்தில் மனதில் நிச்சயம் அன்பு தோன்றிவிடும். நற்கதி கிடைத்துவிடும்.” மனம் நீவி விட்டதுபோல் சுத்தமாகிவிட்டது. “என்ன வரம் வேண்டுமோ, கேள். சாகா வரம் வேண்டுமா? செத்தபின் சிவலோகம் வேண்டுமா? இல்லை , அடுத்த பிறவியில் உலகாளும் மன்னன் பதவி வேண்டுமா?” “சாகா வரமும் வேண்டாம், சிவலோகமும் வேண்டாம். செத்தபின் ஆவியாக அலைந்தாலும் நீங்கள் என் மனதில் நிலைத்திருக்க வேண்டும். மன்னனாகப் பிறக்க வேண்டாம். ஒரு புழுவாகப் பிறந்தாலும் நான் உங்களுடைய கொத்தடிமை என்ற நிலை மாறக்கூடாது. அந்தப் புழுவின் பிறவி முடியும்போது உள்ளன்போடு உங்கள் கோவிலை நாடி வருபவர்கள் காலில் மிதிபட்டுச் சாகும் பேறு வேண்டும்.” அன்னை பதில் ஒன்றும் சொல்லாமல் கலகலவென்று சிரித்தபடி மறைந்தாள்.
|
|
|
|