|
தர்ம சிந்தனை கொண்ட அரசர் ஒருவர் இருந்தார். அவரே தன் கையால் ஏழைகளுக்கு உணவு வழங்குவார். ஒருநாள் உணவு தயாரிக்கப்பட்டு அண்டாவில் வைக்கப்பட்டது. அப்போது ஆகாயத்தில் கருடன் அலகில் கொத்தியபடி பாம்பைத் துாக்கிச் சென்றது. அதனிடமிருந்து தப்பிக்க முயற்சித்த பாம்பின் வாயிலிருந்து விஷம் வெளிப்பட்டு உணவில் விழுந்தது. இது யாருக்கும் தெரியாது. அரசர் அந்த விஷ உணவை அந்தணர் ஒருவருக்குக் கொடுத்தார். அதை சாப்பிட்ட அந்தணர் மயங்கி விழுந்து இறந்தார். அந்தணர் இறந்ததை அறிந்த அரசர் ‘நான் தான் காரணம்’ என வருந்தினார். ஆனால் ‘அந்தணர் இறந்ததற்கான பாவத்தை யார் தலையில் சுமத்துவது?’ என்ற சங்கடம் தர்மதேவதைக்கு ஏற்பட்டது. ‘நல்ல எண்ணத்தில்தான் அரசர் அன்னதானம் செய்தார். அதனால் பாவத்தை அவர் மீது சுமத்துவது நியாயமில்லை. இந்தப் பாவத்தை வேறு யார் தலையிலாவது சுமத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் கிடைக்கும் வரையில் காத்திருப்போம்’ என்ற முடிவுக்கு வந்தது. சில நாட்களுக்குப் பிறகு, வெளியூரிலிருந்து அந்தணர்கள் சிலர் அரசரிடம் தானம் பெற வந்தனர். அவர்களுக்கு அரசர் இருப்பிடம் செல்வதற்கு வழி தெரியவில்லை. அவர்கள் வழியில் ஓரிடத்தில் சுள்ளி பொறுக்கிய மூதாட்டியைக் கண்டனர். ‘‘பாட்டி! நாங்கள் வெளியூரில் இருந்து வருகிறோம். அரசரிடம் தானம் பெற விரும்புகிறோம். அரசரின் இருப்பிடத்திற்கு எப்படி செல்வது?” எனக் கேட்டனர். ஆர்வமுடன் வழிகாட்டிய அந்த மூதாட்டி, அத்துடன் நிறுத்தாமல் அரசரிடம் உணவு பெற்ற அந்தணர் இறந்து போனதை வைத்துக் கொண்டு, ‘‘அரசர் மிகவும் நல்லவர்தான். ஆனால் தன்னிடம் தானம் பெற்றவரைக் கொல்லவும் செய்வார்’’ என்றாள். அதைக் கேட்டு அந்தணர்கள் அதிர்ச்சியடைந்தனர். அரசரிடம் செல்வதைத் தவிர்த்துவிட்டு ஊருக்குத் திரும்பினர். அப்போது தர்மதேவதை, ‘அதிகமாகப் பேசி அரசர் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திய மூதாட்டியின் மீது விஷ உணவு சாப்பிட்டு இறந்த அந்தணரின் கொலைப் பாவத்தைச் சுமத்துவது’ என்று முடிவு செய்தது. பாவச்சுமை அதிகரித்ததால் மூதாட்டி பெரும் துன்பத்திற்கு ஆளானாள். ஒருவரைப் பற்றி அரைகுறையாக ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்ட நிலையில் அபாண்டமாக பழி சுமத்தினால் அந்த பாவம் நம்மை வந்து சேரும். ஒருவர் தவறு செய்தவராக இருந்தாலும் அதைப் பற்றி புறம் பேசினால் ஐம்பது சதவிகித பாவம் நம்மை வந்தடையும். எனவே மற்றவரை விமர்சிப்பதால் நம்மை அறியாமலேயே பாவம் செய்தவராகிறோம். பாவம் செய்யாவிட்டாலும், நம்மை பாவம் வந்து சேருகிறது என்ற உண்மையை உணர வேண்டும்.
|
|
|
|