Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பாவிகளுக்காகச் செய்யும் பிரார்த்தனை
 
பக்தி கதைகள்
பாவிகளுக்காகச் செய்யும் பிரார்த்தனை


 “அந்த முக்குவீட்டுல ஒரு கந்துவட்டிக்காரன் இருக்கான். பண்ணாத அட்டூழியம் இல்லை.  கடன் கொடுக்கறேன்னு ஆசைகாட்டி எத்தன பேரச் சீரழிச்சிருக்கான் தெரியுமா? ஒரு காலேஜ் ப்ரொபசர் வீடு கட்டினாரு. முப்பது லட்ச ரூபாய் பட்ஜெட். முடிக்கற சமயத்துல  லட்ச  ரூபா துண்டு விழுந்தது. பேங்க்ல லோன் தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. பக்கத்துவீட்டுக்காரனாச்சேன்னு கந்துவட்டிக்காரன்கிட்ட கடன் வாங்கினாரு. அவன் அதுக்கு ரன் வட்டி போட்டு முப்பது  லட்ச ரூபா வீட்டையே எழுதி வாங்கிட்டான். கந்துவட்டிக்காரனுக்கு சாவு வராதான்னு நாங்க  பிரார்த்தனை பண்ணிக்கிட்டேயிருந்தோம் இப்போதான் அதுக்குப் பலன் கெடைச்சிருக்கு.”
நெருங்கிய நண்பன் வீட்டு வாசலில் நின்று பேசியபோது அவன் புலம்பினான்.
‘என்னாச்சு?”
“காலையில நெஞ்சு வலின்னு படுத்துட்டானாம். டாக்டர் பாத்தாரு. ஆஸ்பத்திரிக்குத் துாக்கிட்டுப் போகப் போறாங்க.”
அந்தச் சமயத்தில் ஆம்புலன்ஸ் தெரு வழியே போனது. என் நெஞ்சில் கைவைத்தபடி பச்சைப்புடவைக்காரியிடம் பிரார்த்தித்தேன்.
ஆம்புலன்சைப் பார்த்தால் நோயாளிக்காக பிரார்த்தனை செய்வேன் என்று நண்பனுக்கும் தெரியும். என் நெஞ்சில் இருந்த  கையை மூர்க்கத்தனமாகத் தட்டிவிட்டு, ‘‘அந்த ஆம்புலன்ஸ்ல போறது அந்தக் கந்துவட்டிக்காரன். அவனக் காப்பாத்துன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறயாக்கும்? அவன் துடிதுடிச்சிச் சாகணும்டா.’’
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
“ரொம்ப அன்பா இருக்கற மாதிரி பிலிம் காட்டாத. அந்த மகமாயியே அவன் உயிர எடுக்கணும்னு முடிவு பண்ணிட்டா, நீ யாரு தடுக்க?”
 அதன்பின் நான் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கவில்லை.
மனம் போன போக்கில் காரில் சென்றேன். ஆம்புலன்சின் உள்ளேயிருப்பவர்களுக்காகப் பிரார்த்திக்கும் வழக்கம்  இருபது ஆண்டுகளாக இருக்கிறது. அதில் எத்தனைபேர் கெட்டவர்களோ? அவர்கள் உடல் நலம் தேறி வந்து மீண்டும் பாவம் செய்தால் அது என்னைத்தானே சேரும்?
வழியில் ஒரு போலீஸ்காரர் வண்டியை நிறுத்தினார்.
 “சார், இந்த அம்மாக்குத் திடீர்னு நெஞ்சு வலி வந்திருச்சி.  ஹாஸ்பிட்டல்ல சொல்லி வச்சிட்டேன். கொஞ்சம் கொண்டுபோய் விட்டுடறீங்களா?”
தயங்கினேன்.
 “அவசரத்துக்கு மாத்திரை கொடுத்தாச்சு. இன்னும் அரை மணி நேரத்துக்குக் கவலையில்ல.”
அந்தப் பெண்ணைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து முன் இருக்கையில் அமர வைத்தார் போலீஸ்காரர். வண்டி வேகம் பிடித்தவுடன்  அருகில் இருந்த பெண்ணைப் பார்த்தேன். இள வயதிலேயே  இதய நோயா? என்னையும் அறியாமல் கை என் நெஞ்சிற்குச் சென்றது. “தாயே! இவளுக்கு.. “
சட்டென பிரார்த்தனையை நிறுத்தினேன். யார் கண்டது? இவள் கந்துவட்டிக்காரியாக இருந்தால்? என் பாவக்கணக்கைக் கூட்டிக்கொள்ள மனம் வரவில்லை.
“நான் கந்துவட்டிக்காரியா? எனக்காக வேண்டிக்கொள்வது பாவமா? “
அவள் நிமிர்ந்து உட்கார்ந்த தோரணை, குரலில் இருந்த கம்பீரம், கண்களில் இருந்த கருணை அவளை யார் என காட்டிவிட்டது.
வண்டியை ஓரம் கட்டினேன்.  வெளியே வந்து அன்னையின் காலடியில்  அமர்ந்தேன்.
“நண்பன் அப்படிச் சொல்லிட்டானே என கவலைப்படுகிறாயா?”
“கண்டவர்களுக்காகக் கண்மூடித்தனமாகப் பிரார்த்தித்து பாவ மூட்டைகளைச் சுமக்கும் பரிதாப நிலைக்காகக் கவலைப்படுகிறேன், தாயே!”
“இதைப் பற்றி ஏற்கனவே  சொல்லியிருக்கிறேன். மறந்துவிட்டாய். செய்முறை விளக்கமே தருகிறேன். கண்ணை மூடிக்கொள்.” நகரத்தின் பரபரப்பான சாலையைக் கடக்கக் காத்திருந்தேன். அருகில்  பார்வையில்லாத  ஒரு பெண் இருந்தாள். இவள் எப்படி சாலையைக் கடக்கப் போகிறாள் என்று கவலையுடன்  அருகில் சென்று  அவள் கையைப் பிடித்தேன்.
“கவலைப் படாதீங்க.  உங்கள பத்திரமா அந்தப் பக்கம் கொண்டுபோய் விட்டுடறேன்.”
சட்டென காலம் உறைந்தது. கண்ணில் கண்ட காட்சி உறைந்தது.  வாகனங்களும், மனிதர்களும் இருந்த இடத்திலேயே உறைந்து போனார்கள். உலகம் அழியும் நேரம் வந்துவிட்டதோ என அஞ்சினேன்.
என் முன்னர் பச்சைப்புடவைக்காரி மாகாளியாகத் தோன்றினாள். மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பரந்து நின்ற நெடிதுயர்ந்த திருவுருவம்.
 “உனக்காகக் காலத்தைச் சில நொடிகள் உறைய வைத்திருக்கிறேன். நீ ஒரு வரம் கேட்கலாம். ஒரே ஒரு நிபந்தனை. அந்த  வரத்தை உனக்காகவோ உன்னைச் சார்ந்தவர்களுக்காகவோ கேட்கக் கூடாது. உன் நண்பர்கள், உன் வாடிக்கையாளர்கள், உன் ஊழியர்கள் யாருக்காகவும் கேட்கக் கூடாது. இந்த நிபந்தனைக்கு உட்பட்டு கேட்கும் வரத்தை உடனே தருவேன்.”
யாருக்காக கேட்கலாம்? சட்டென திரும்பிப் பார்த்தேன். என் அருகில் பார்வையற்ற பெண் உறைந்து போயிருந்தாள்.
இவள் ஆபத்தில்லாமல் இந்தச் சாலையைக் கடக்கவேண்டும் என்று வரம் கேட்கலாமா? சே, வரம் கொடுக்க அந்தக் காளியே வந்திருக்கிறாள். சின்ன வரத்தையா  கேட்பது?
இவள் பத்திரமாக வீட்டுக்குப் போய்ச் சேர வேண்டும் என கேட்கலாமா?  அதுவும் சின்ன வரம்தான்.
அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தேன்.  அழகாக இருந்தாள். பிறவியிலிருந்தே பார்வை இல்லாததால் இவள் அழகை இவளாலேயே பார்க்கமுடியாதே! என்ன கொடுமை! பார்வையில்லாத காரணத்தால் திருமணம் நடந்திருக்காது. அப்படியே நடந்தாலும் அதில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கும். அழகும், இளமையும் இருக்கும் இவளுக்குப் பார்வை கிடைத்தால் தக்க வாழ்க்கைத்துணையுடன்  வாழ்வாள் அல்லவா?
“தாயே! என்னுடன் இருக்கும் இந்தப் பெண்ணிற்கு பார்வை கொடுங்கள்.”
அன்னை மறைந்தாள். உலகம் மீண்டும் இயங்கியது.
“எனக்கு பார்வை வந்திருச்சி” என்று அந்தப் பெண் கூத்தாட ஆரம்பித்தாள்.
காட்சி கலைந்தது.
மீண்டும் அன்னையின் திருவடிகளுக்கு அருகில் இருந்தேன்.
“ஒரே ஒரு வரம் கேட்கலாம் என்றபோது அந்தப் பெண் சாலையைக் கடக்கவேண்டும் என வேண்டிக்கொள்ளாமல் அவளுக்கு பார்வை வேண்டும் என கேட்டாயல்லவா? அதுபோல் பிரார்த்தனை அமைந்தால் உனக்குப் பாவம் சேராது.”
“புரியவில்லையே, தாயே!”
“அந்தக் கந்துவட்டிக்காரனின் அன்புக் கண்கள் குருடாக இருக்கின்றன அதனால்தான் துன்புறுத்துகிறான். துன்பப்படுகிறான். அவன் நோய் குணமாக வேண்டும் என்பதற்குப் பதிலாக அவனது அன்புக்கண் திறக்க வேண்டும் என வேண்டிக்கொள். அவன் மனம் அன்பால் நிறைய வேண்டும் என வேண்டிக்கொள். அவன் நோயும் குணமாகும். அவனும் திருந்துவான்.”
“அப்படி வரம் கேட்டால்  தருவீர்களா?”.
“தன்னலமற்ற பிரார்த்தனைக்கு எப்போதுமே முன்னுரிமை கொடுப்பேன். அதைவிட முக்கியம் - உன் நண்பன் சொன்னதுபோல் உனக்குப் பாவம் சேராது.”
அந்த நொடியில் ஒரு ஆம்புலன்ஸ் என்னைக் கடந்து  சென்றது. நான் நெஞ்சில் கைவைத்து வேண்டிக்கொண்டேன்.
“நான் சொன்னமாதிரிதானே வேண்டிக்கொண்டாய்?”
“இல்லை, தாயே.”
“அடப்பாவி! பின்?”
“காலம் உள்ளவரை கையில் கிளிதாங்கிய கோலக்கிளிக்கு நான் கொத்தடிமையாக இருக்கவேண்டும் என்று மட்டும் வேண்டிக்கொண்டேன். அந்த ஒரு வேண்டுதலிலேயே அவன் மனதில் அன்பு நிறையட்டும், இவன் வேதனை குறையட்டும், அவள் நிம்மதியாக இருக்கட்டும் என்ற எல்லா வேண்டுதல்களும் அடங்கிவிட்டனவே! மக்களைக் காப்பாற்றுவதும், கைவிடுவதும் உங்கள் பாடு. எனக்கென்ன வந்தது? இனிமேல் இது ஒன்றுமட்டும்தான் என் பிரார்த்தனையாக இருக்கப் போகிறது, தாயே!”
அன்னை சிரித்து விட்டு மறைந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar