|
கங்கைக்கரையில் முனிவர்களின் விவாதம் நடந்து கொண்டிருந்தது. வசிஷ்டர் தன் ஏழுவயது பேரனான பராசரருடன் அங்கு வந்திருந்தார். வசிஷ்டர் இருப்பதை அறிந்த மார்க்கண்டேய முனிவர் அங்கு வந்தார். அவரைக் கண்ட முனிவர்கள் அனைவரும் எழுந்து வரவேற்று ஆசனம் அளித்தனர். அதில் அமர்ந்த மார்க்கண்டேயர், வசிஷ்டரின் அருகில் இருந்த பராசரைக் கண்டார். ஏழுவயது சிறுவரான அவரருகில் சென்று வணங்கினார். இதைக் கண்ட பராசரர் திகைத்தார். அப்போது மார்க்கண்டேயர், “ எனக்கு வாழ்த்த வயதில்லை. ஏனென்றால் என்னை விட நீங்கள் வயதில் மூத்தவர். அதனால் வணங்குகிறேன்” என்றார். இதைக் கேட்ட பராசரர்,“நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறதே.... நான் ஏழு வயது சிறுவன். பிரம்மாவால் உலகம் சிருஷ்டிக்கப்பட்டு, பிரளய காலம் வரும் வரையுள்ள காலத்தை ஒரு கல்பம் என்று சொல்வார்கள். இப்படி ஏழு கல்ப காலமாக வாழ்பவர் நீங்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியிருக்க என்னை மூத்தவர் என்கிறீர்களே எப்படி?’’ எனக் கேட்டார். “வாழ்ந்த காலத்தை மட்டும் வைத்து ஒருவரின் வயதைக் கணக்கிடக் கூடாது. கடவுளைச் சிந்திக்கும் நேரமே நம்முடைய நேரம். மற்ற நேரமெல்லாம் வீணாகக் கழிந்தவையே. வசிஷ்டரின் பேரனான தாங்களோ எப்போதும் தெய்வீக சிந்தனையுடன் வாழ்பவர். அந்த வகையில், எனக்கு வயது ஐந்து தான் ஆகிறது. தங்களுக்கோ வயது ஏழாகி விட்டது” என்று சொல்லி அமர்ந்தார். இதைக் கேட்ட வசிஷ்டர் உள்ளிட்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
|
|
|
|