|
பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன் இருந்தான். புத்திசாலியான அவன், குருநாதர் கூறும் கடின தத்துவத்தையும் எளிதில் புரிந்து கொள்வான். சாமான்ய மனிதர்கள் செய்யும் கட்டிட வேலை, தச்சு வேலை, படகோட்டுதல் போன்ற வேலைகளிலும் ஆர்வமுடன் ஈடுபடுவான். புதிய விஷயங்களை கற்பதில் தனக்கு நிகர் யாருமில்லை என கர்வம் கொண்டான். அவனைத் திருத்த விரும்பினார் குருநாதர். ஒருநாள் காலையில் ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன், வழியில் முதியவர் ஒருவரைக் கண்டான். அவரின் கனிந்த முகம் இளைஞனைக் கவர்ந்தது. “சுவாமி... தாங்கள் யார்?” எனக் கேட்டான். “ஆத்ம வித்தையைத் தேடி அலையும் வழிப்போக்கன் ”என்றார் முதியவர். வித்தை என்றதும் இளைஞன் வேகமாக, “இது வரை கேள்விப்படாததாக இருக்கிறதே அது பற்றி சொல்லுங்கள்” எனக் கேட்டான். “மற்ற வித்தை போல இதை பிறர் உதவியுடன் கற்க முடியாது. எளிதில் யாருக்கும் கைகூடாது” என்றார். “எனக்கு கைகூடாதது என்று ஏதுமில்லை ” என்றான் கர்வத்துடன். “அலை பாயும் மனதை அடக்குவதே ஆத்ம வித்தை. நான் என்னும் கர்வம், தற்பெருமை, உடல்பலம், பணபலம் எல்லாம் மாயை என்பதை உணர்ந்தால் மட்டுமே இது கைகூடும். ஒருவரைப் பார்த்துக் கற்கும் எளிய விஷயம் அல்ல இது’’ என்றார் முதியவர். அதைக் கேட்ட இளைஞனின் கர்வம் மறைந்தது. முதியவர் வடிவில் இருந்த குருநாதர் சுயவடிவம் காட்டி சீடனுக்கு ஆசியளித்தார்.
|
|
|
|