|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » அவள் நிகழ்த்திய அற்புதங்கள்! |
|
பக்தி கதைகள்
|
|
சென்னையில் உள்ள பிரமாண்டமான அரங்கத்தில் அந்த ஆன்மிகக் கூட்டம் நடந்தது. பிரபல துறவி உரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் யாரோ ஒருவர் என்னைப் பற்றி அவரிடம் சொல்லிவிட்டார். “சாமி, உங்களைப் போல இவரும் அம்மன் அருள் பெற்றவர்தான்.” என்னை மேடைக்கு அழைத்துச் சென்றனர். ‘‘நான் பல லட்சம் முறை அன்னையின் நாமங்களைச் சொல்லி அருள் பெற்றவன்’’ துறவி முழங்கினார். நான் அப்படியெல்லாம் செய்ததில்லையே! அவளை நினைத்து அழத் தெரிந்த அளவிற்கு சகஸ்ரநாமம், சங்கீர்த்தனம் ஏதும் தெரியாதே! “அம்மன் அருள் பூரணமாக இருந்தால் உங்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும்’’ என்ற துறவி அமர்ந்த நிலையிலேயே அப்படியே மேலே எழும்பினார். சில நிமிடம் அந்தரத்தில் மிதந்தபடி இருந்துவிட்டுப் பின் கீழே வந்து அமர்ந்துகொண்டார். அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. ‘இதுபோல் உன்னால் முடியுமா?’ என்பது போலப் பார்த்தார். நான் அவரைப் பார்த்துக் கைகூப்பினேன். என் கண்கள் நிறைந்தன. “நீங்கள் வாய் திறந்து பேச மாட்டீர்களா?” “ஐயா நான் உங்களைப் போல் பச்சைப்புடவைக்காரியின் பக்தன் இல்லை. அவளின் கொத்தடிமை. அற்புதம் நிகழ்த்துவது அம்பிகையின் வேலை. அடிமையின் வேலையில்லை.” ஒரு பூச்சியைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்தார் அந்தத் துறவி. கூட்டத்திலிருந்து எப்படி மீண்டுவந்தேன் என்று எனக்குத் தெரியாது. அன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். “ஒரு ஸ்பெஷல் தரிசன டிக்கட் கொடுங்க.” அங்கிருந்த பெண் விநோதமாகப் பார்த்தாள். “இங்கே இருக்கும் என்னைப் பார்க்காமல் உள்ளிருக்கும் என் சிலையைப் பார்க்ச் சீட்டு வாங்குகிறாயே!” அவள் காலில் விழுந்து வணங்கினேன். அவள் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். நான் கீழே அமர்ந்துகொண்டேன். “அந்தத் துறவி அமர்ந்தபடியே மேலே மிதந்ததை அற்புதம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாயா? இயற்கை விதியை மீறுவது அற்புதமா என்ன?” “புரியவில்லை, தாயே!” “அமர்ந்திருப்பவன் மேலே எழ முடியாது என்பது புவியீர்ப்பு விதி. அந்தத் துறவி அதை மீறியது அற்புதமல்ல. புவியீர்ப்பு விதியே ஒரு அற்புதம்தானே! புவியீர்ப்பு சக்தி அரை சதவிகிதம் கூட இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பூமியில் யாரும் வாழ முடியாது.. மேலே எழுவதும் தண்ணீரின்மேல் நடப்பதும் அற்புதம் அல்ல.” “பின் எது தாயே, அற்புதம்?” “செய்முறை விளக்கம் தருகிறேன். பொற்றாமரைக் குளத்தின் படிகளில் அமர்ந்துகொள்.” இருள் கவியும் மாலை நேரம். பிரகாரத்தைத் திரும்பிப் பார்த்தவன் அசந்துவிட்டேன். அப்படி ஒரு அழகிய பெண்ணை நான் பார்த்ததில்லை. பெரிய கண்கள், கூரிய விழி, வளைந்த புருவங்கள். சிவந்த நிறம். ஆனால் பாவம் நடக்கமுடியாத நிலை. அந்த முப்பது வயதுப் பெண் தவழ்ந்து வந்தாள். என்ன கொடுமை! இவளால் இயல்பான வாழ்க்கை வாழ முடியாது. திருமணம் என்ற பேச்சுகே இடமில்லை. இப்போது பெற்றோர் இவளைப் பார்த்துக்கொள்ளலாம். அவர்களின் காலத்திற்குப் பின்... வாழ்வில் எல்லாம் பெற்றவர்களே ஒரு சமயத்தில், கேட்டது கிடைக்கவில்லையென்றால் தெய்வ நம்பிக்கையை இழக்கிறார்கள். தன் காலைப் பறித்துக் கொண்டவளின் காலில் விழ இவள் கோயிலுக்கு வருகிறாள் என்றால்.. என்னையும் அறியாமல் அந்தப் பெண்ணைப் பார்த்து கைகூப்பினேன். அவள் திடுக்கிட்ட மாதிரி தெரிந்தது. என்னை நோக்கி தவழ்ந்து வந்தாள். நான் எழுந்து நின்றேன். “கொஞ்சம் உங்ககிட்டப் பேசலாமா?” தன்னைப் பற்றிச்சொல்ல ஆரம்பித்தாள். பெயர் பவானி. தமிழ் இலக்கியத்தில் பி.ஏ., வேலை பார்க்கவில்லை. தாய் உயிருடன் இல்லை. வயதான தந்தையுடன் மதுரையில் வசிக்கிறாள். தந்தை அவளைத் திருமணம் நடத்தி வைக்கப் படாத பாடு படுகிறாராம். அன்று தான் ஒருவன் பெண் பார்த்துவிட்டுப் போனானாம். நாற்பது வயதுக்காரனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படவேண்டிய சூழ்நிலை. ஐம்பது பவுன் நகையும், இரண்டு லட்சமும் கேட்கிறானாம். அவளுடைய தந்தை பூர்வீக வீட்டை விற்றாவது திருமணத்தை நடத்த வேண்டும் என துடிக்கிறாராம். “எங்கப்பாவ ஓட்டாண்டியாக்கிட்டு பணத்தாசை பிடிச்சவனோட போலியா வாழறதுல கொஞ்சம்கூட இஷ்டம் இல்லய்யா.” என்ன சொல்வது? பச்சைப்புடவைக்காரி மனது வைத்தால் எண்ணங்களாக, வார்த்தைகளாக வந்து இறங்குவாள். பவானியின் கைவிரல்கள் நீளமாக அழகாக இருந்தன. அதில் நகச்சாயம் நேர்த்தியாக இருந்தது. “உன் இடது கையக் காட்டும்மா.” “உங்களுக்கு ஜோசியம் தெரியுமா?” என்றபடி கையைக் காட்டினாள். இடது கையில் அழகாக இருந்தது மெஹந்தி. “உனக்குக் கலைகள்ல ஆர்வம்’’ “கையக் கொடுங்கய்யா. எனக்கு வாழ்க்கையில இருக்கற ஒரே ஆறுதல் படம் வரையறதுதான்யா. சந்தோஷமா இருந்தாலும் படம் வரைவேன். கோபம் வந்தாலும் படம் வரைவேன். இதோ இப்போமாதிரி சோகமா இருந்தாலும் படம் வரைவேன்யா.” “சபாஷ். கையப் பாத்தவுடனேயே நெனச்சேம்மா. கால்ல குறையக் கொடுத்தாலும் உன் கையில கலையக் கொடுத்திருக்காளே அந்தக் கைகாரி! இந்தக் கல்யாணம் வேண்டாம்னு அப்பாகிட்ட கண்டிப்பாச் சொல்லிரும்மா. தேவைப்பட்டா என்னக் கூப்பிடு. போன் நம்பர் வெச்சிக்கோ... நானே வந்து உங்கப்பாகிட்டப் பேசறேன். தொடர்ந்து படம் வரைஞ்சிக்கிட்டே இரும்மா. எனக்கு அந்தத் துறையில நெறையப் பேரத் தெரியும். பத்திரிகைகள்ல, விளம்பரக் கம்பெனிகள்ல ஏதாவது வாய்ப்புக் கெடைக்குதான்னு பாப்போம். உன் ஓவியங்கள வச்சி கண்காட்சி நடத்தலாம். கலையுலகத்துகுள்ள போயிட்டா உன்ன உண்மையா விரும்பற ஒருத்தன நீ பாக்கறதுக்கு நெறைய வாய்ப்பிருக்கு. உனக்கு நிறைவான வாழ்க்கை காத்துக்கிட்டிருக்குங்கறதுல எனக்கு நம்பிக்கை இருக்கும்மா. எங்காத்தா பச்சைப்புடவைக்காரி உன்ன கைவிட மாட்டாம்மா.” சிறிது நேரம் பேசி விட்டுஅவள் கிளம்பினாள். தொலைவில் வெறித்துப் பார்த்தபடி அங்கேயே அமர்ந்திருந்தேன். செல்போனில் செய்தி வந்திருப்பதற்கான ஒலி கேட்டது. பவானி தான் அனுப்பியிருந்தாள். “வாழ்வு வெறுத்துப்போய் தற்கொலை செய்வது என்று முடிவு செய்திருந்தேன். உங்களைப் பார்த்திருக்காவிட்டால் இன்றிரவு என் கதை முடிந்திருக்கும். நல்ல நேரத்தில் நம்பிக்கை ஒளியைக் காட்டி வாழ வைத்தீர்கள்’’ எழுந்து சிறப்புத் தரிசன டிக்கட் விற்கும் இடத்திற்கு ஓடினேன். பச்சைப்புடவைக்காரி இன்னும் அங்கு தான் இருந்தாள். “நீ செய்ததுதான் உண்மையிலேயே அற்புதம். சாவுதான் முடிவு என இருந்தவளை வாழ வைத்தாயே! இதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அந்தத் துறவி செய்தது வெறும் செப்படி வித்தைதான்.” “தப்புத் தப்பாகப் பேசாதீர்கள், தாயே! அமாவாசையைப் பவுர்ணமி என தப்பாகச் சொல்லிவிட்டார் அபிராமி பட்டர். அவர் சொன்னதை உண்மையாக்க உங்கள் தோட்டை விட்டெறிந்து நிலவாக ஒளிரச் செய்தீர்கள். அதற்காக அந்தத் தோடு அற்புதம் செய்தது என்றாகிவிடுமா? பவானிக்கு வாழ்வு கொடுக்கவேண்டும் என தீர்மானித்து என்னைச் சரியான நேரத்தில் அந்த இடத்துக்கு அனுப்பி எனக்குச் சரியான எண்ணங்களைக் கொடுத்துச் சரியான வார்த்தைகளைப் பேச வைத்தீர்கள். செய்வதையெல்லாம் செய்துவிட்டு அற்புதம் செய்தேன் என்று என்னையே கேலி செய்கிறீர்களே? ஏனம்மா?” கலகல என சிரித்தபடி அன்னை மறைந்தாள். நான் கோயிலில் தனியாக அழுது கொண்டிருந்தேன்.
|
|
|
|
|