|
ஒளிந்து பார்த்தபடி இருந்த அவனொரு மாயாவி என்பது அவன் தோற்றத்தில் புலனாயிற்று. அவன் பார்க்க திருப்புட்குழி மக்கள் சகஜமாக நடமாட ஆரம்பித்தனர். இறந்து விடுவார் என நாட்டு வைத்தியர் கைவிட்ட ஒருவர் எழுந்து அமர்ந்து கஞ்சி குடித்துக் கொண்டிருந்தார். சொல்லப்போனால் திருப்புட்குழிக்குள் விஷக்கிருமி பரவ அவனும் ஒரு காரணம்! ஏவல் என்னும் தந்திரத்தால் அவன் தீவிரப்படுத்திய செயலே அந்த விஷ ஜுரம்! அதை ஒழிக்க தன்னாலேயே முடியும் என்ற அகங்காரம் அவனிடம் இருந்தது. ஊர்க்காரர்கள் இறுதியாக தவித்து நிற்கும் போது உள்ளே புகுந்து, ஏவலை அடக்கி மக்களிடம் பொன்னும் பொருளையும் பெறுவதே அவன் நோக்கம். ஆனால் ஊரார் அவனை நாடாமல் காஞ்சிபுரம் போய் தேசிகரை அழைத்ததைக் கண்டு அதிர்ந்து போனான். தேசிகர் இருக்கும் வரை தன்னால் தலையெடுக்க முடியாது எனக் கருதினான். பொறாமையும், சுயநலமும் அவனைப் பிசைந்து கொண்டிருந்தது. அற்பமான மந்திர தந்திரங்களை பலிகளைக் கொடுத்து கற்றிருந்த அவனுக்குள் உண்மையான பக்தியோ, கருணையோ துளியும் இல்லை. நாம் எவ்வழியில் செல்கிறோமா அதற்கேற்பவே எண்ணங்களும், வாழ்வும் அமையும் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அதனாலேயே வேதாந்த தேசிகர் மீது அவன் பொறாமை கொண்டான். அவரை கொன்றால் மட்டுமே தன்னால் இந்த பல்லவ மண்டலத்தில் தான் பேரெடுக்க முடியும் என நினைத்தான். எனவே அவரைக் கொல்லும் எண்ணத்துடன் அவரைப் பின் தொடரத் தீர்மானித்தான். தேசிகரும் திருப்புட்குழிக்கு வந்த பணி நல்ல விதமாக முடிந்ததும், சகாக்களுடன் காஞ்சி திரும்பத் தொடங்கினார். அவனும் அவரை பின்தொடர்ந்தான். இடையில் விஜய நகரத்து கோவிந்த சர்மன் விடைபெற்றார். தேசிகரிடம் பலரும் பல ஐயப்பாடுகளை கேட்கத் தொடங்கினர். குறிப்பாக காஞ்சி பற்றி அவர்கள் நிறையவே கேட்டனர். ‘‘சுவாமி.. காஞ்சியில் வரபிரசாதியாக எம்பெருமான் கோயில் கொண்டிருந்தும் அவரை இன்னும் சிலர் அறியாமல் இருப்பது எதனால்?’’ என்பது அதில் ஒரு கேள்வி. ‘‘பாவிகளே அவனை அறியாமல் போவர். ஆறு ஓடும் போதும் ஒருவர் அழுக்குடன் இருந்தால் அது ஆற்றின் குற்றமா இல்லை அழுக்குடன் இருப்பவர் குற்றமா? அது போல் தான் இதுவும்...’’ அப்படியானால் நாம் பாவிகளாக இருந்தால் எம்பெருமானை அறியாமல் போய் விடுவோமா?’’ ‘‘அப்படி அல்ல... சொல்ல வந்ததை சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும். எம்பெருமானை நெஞ்சத்தில் இருத்தி விட்டால் பாவச்செயல் புரிய மாட்டோம். அடுத்து நற்செயல்கள் புரிபவர்களாய் ஆவோம். இதனால் நல்வினை உருவாகி வாழ்வு நலம் மிக்கதாக அமையும். அவன் நெஞ்சத்தில் இல்லாமல் போகும் போது தான் வாழ்வின் மாயை தவறு செய்ய வைக்கும். அதனால் பாவம் சேரும். அந்த பாவத்திற்கான தண்டனையை அனுபவிக்கும் வரை நமக்கு நற்கதியும் கிடைக்காது’’ ‘‘தங்கள் பதில் மேலும் கேள்வி கேட்கத் துாண்டுகிறது. ஒருவன் பாவியாகி விட்டால் அந்த பாவமே அவனை பெருமானிடம் செல்ல விடாமல் தடுத்து விடும் எனில் அவன் எப்படி எம்பெருமானை அடைய முடியும்?’’ ‘‘நல்ல கேள்வி... இப்படி தவிப்பவர்களை எல்லாம் ஆட்கொள்ளத்தான் குரு என்னும் ஸ்தானம் நம்மில் உண்டாகியுள்ளது. அப்படிப்பட்ட குருநாதரே கடைத்தேற்றுவார். இன்னும் சொன்னால் ஆச்சார்ய பக்தி மிக எளிதாக அவனிடம் நம்மை சேர்த்து விடும். வாழ்வெனும் கடலில் ஆச்சார்யனே படகு. அந்த படகை பற்றிக் கொண்டால் நீந்தும் சிரமம் இன்றி எம்பெருமானின் திருவடிகளை அடையலாம்’’ இப்படி பேசிக் கொண்டே வந்ததில் அரிய கருத்துக்கள் அனைவருக்கும் தெளிவாகின. என் கருத்துக்களை பாடலாக்கி பதிவு செய்தால் சமுதாயம் நன்கு அறிந்திட .உதவும்’’ என்ற தேசிகர் எம்பெருமானின் பன்னிரு நாமங்களை அனைவரும் அறிய வேண்டி துவாதச நாம பஞ்சர ஸ்தோத்திரத்தை இயற்றியுள்ளேன். இது நம் மனதில் அழியாது இருந்திட வேண்டும். ‘கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேஷன், பத்மநாபன், தாமோதரன்’’ என்ற இந்த பன்னிரு பெயர்கள் வெறும் பெயர்கள் அல்ல. தீய கர்மங்களை பெயர்த்து எடுத்து நம்மை நற்கதியில் தோயச் செய்பவை’’ என்றும் விளக்கம் அளித்தார். களஞ்சியம் வந்த தேசிகர் இல்லத்திற்குச் சென்றார். கணவரைக் கண்ட திருமங்கை தீர்த்தம் தந்து, அவர் குடித்ததும், காலில் விழுந்து எழுந்து கண்ணீருடன் நின்றாள். தேசிகனுக்கு பத்தினியின் செயல் வியப்பை தந்தது. ‘‘மங்கை என்னாயிற்று உனக்கு?’’ ‘‘ஒன்றும் ஆகவில்லையே’’ ‘‘பின் எதற்கு கண்ணீர்?’’ ‘‘தாங்கள் நலமுடன் திரும்பிட வேண்டி எம்பெருமாட்டி முன் விளக்கேற்றி அணையாது நெய்விட்டபடியே இருந்தேன்’’ ‘‘எனக்கு எம்பெருமான் உனக்கு பெருமாட்டியா?’’ ‘‘இது பூவுலக மானுடர்களின் பாச பந்தம் மிகுந்த வாழ்வில் உண்டான எண்ணம். பெருமாட்டியிடம் மனம் லயிப்பதும் நல்லதற்கே! ஆனால் எம்பெருமானுக்கு உன் உள்ளம் புரியாமல் போய் விடும் என பயந்ததன் மூலம் அவனைச் சற்றே குறைவு படுத்தி விட்டாய். அவன் புருஷ வடிவம் கொண்ட போதிலும் பால் கடந்தவன் – பரிபூரணன்! இதனாலேயே திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்றில், ‘பெற்ற தாயினும் ஆயின செய்யும்’ என்று அவனை உயர்த்திப் பிடிக்கிறார். எனவே நீ இதனை உணர்தல் அவசியம்’’ என திருமங்கையை நெறிப்படுத்தினார். திருமங்கையும் அது கேட்டு நெகிழ்ந்து ‘‘என்னவோ தெரியவில்லை. என் மனதில் இனம் புரியாத கலக்கம். நான் தலையில் சூடிய பூ இது நாள் வரையில் தவறு விழுந்ததில்லை. அதுபோல் என் கைப்பொருளும் நழுவி உடைந்ததுமில்லை’’ என்றாள் திருமங்கை. ‘‘மங்கை...நீ சுயநலமாக சிந்திக்கிறாய். சுயநல உணர்வு வந்தாலே இது போல சாதாரணமாக நடப்பதெல்லாம் நிமித்தமாய் தோன்றும்’’ ‘‘நான் சுயநலமாய் சிந்திக்கின்றேனா?’’ அதிர்ந்தாள் திருமங்கை. ‘‘நான் நலமுடன் விளங்க வேண்டும். எனக்கு எதுவும் ஆகி விடக் கூடாது போன்ற எண்ணங்கள் எப்படிபட்டதாம்?’’ ‘‘இது இந்த மண்ணில் பிறந்த பெண்களுக்கே உண்டான ஒன்றல்லவா? நெற்றி வகிட்டில் இடும் பொட்டே கூட மணாளரின் நலம் விளங்கிடத் தானே?’’ ‘‘நான் குறை கூறவில்லை. ஆயினும் தன்னலம், நம் நலம் என்பதெல்லாம் சுயநலச் சிந்தையே. ஒரு வைணவ ஆணோ, பெண்ணோ பிறர் நலனை முன் வைத்து தன் நலனை பின்வைத்தே சிந்திக்க வேண்டும்’’ என திருமங்கைக்கு சொல்லும் விதமாக வைணவர் அனைவருக்கும் தேசிகர் சொன்னதாக பொருள் கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலையே கண் விழித்த தேசிகர் நெடுநேரம் படுக்கையில் அமர்ந்தபடி இருந்தார். அதை ஆச்சரியமுடன் பார்த்தவளாக, ‘‘தாங்கள் எழவில்லையா’’ எனக் கேட்டாள் திருமங்கை. ‘‘எழுவதற்கு மனம் இல்லாமல் நான் கண்ட கனவில் லயித்துள்ளேன் திருமங்கை’’ என்றார் தேசிகன். ‘‘அப்படி என்ன கனவு?’’ ‘‘அப்படி கேள். ஆச்சரியமான கனவு! விண்ணில் இருந்து ஒரு வெள்ளை குதிரை பறந்து வந்து நம் இல்லம் முன் நிற்கிறது. நான் செல்லும் இடமெங்கும் அது என்னுடன் வருகிறது. நான் வேத கூடத்தில் வேதம் சொல்லும் போதும், சீடர்களுக்கு போதிக்கும் போதும் அதுவும் அவர்களில் ஒருவராக நிற்கிறது’’ ‘‘ஆகா... கேட்கவே தித்திக்கிறதே! தங்களுக்கு கருணை புரிந்த திருவந்திபுரத்து ஹயக்ரீவம் தானே அது?’’ ‘‘அப்படித்தான் கருதுகிறேன். எங்கே என்னை மறந்து விட்டாயா... உடனே புறப்பட்டு வா’’ என்று அழைப்பது போல் நான் உணர்கிறேன்’’ ‘‘அப்படித்தான் எனக்கும் படுகிறது. நானும் உங்களோடு வரலாமல்லவா?’’ ‘‘தாராளமாக... இன்றே திருவஹீந்திரபுரம் செல்வோம்’’ என்ற வேதாந்த தேசிகன் அதற்கான ஏற்பாடுடன் பயணம் மேற்கொண்டார். இடையில் திருவெஃகா சென்று சொன்ன வண்ணம் செய்த பெருமாளிடம் சொல்லிக் கொள்ளச் சென்றவரை வெளியே காத்திருந்த மாயாவியும் பின்தொடர்ந்தான். திருக்கோயிலில் நுழையும் முன் குளத்தில் இறங்கி குளித்து பின் சந்தியாவந்தன கடமையை நிறைவேற்றியவராய் உள்சொல்ல கால் எடுத்தவர் முன் அந்த மாயாவி வைணவ பிராமணர் வடிவில் கையில் ஒரு ஜலப்பாத்திரமுடன் வந்து நின்று வணங்கினான். தேசிகரும் வணங்கினார். ‘‘இது எம்பெருமானின் புண்ய தீர்த்தம்’’ ‘‘அப்படியா... மகிழ்ச்சி’’ ‘‘பெற்றுக் கொள்ளுங்கள்’’ என்று அவன் கூறியதோடு பெரிய உத்ருணியால் மூன்று முறை வழங்கினான். தேசிகனும் பணிவுடன் அருந்தியதோடு ஈரக்கைகளை உபய வஸ்திரத்தில் துடைத்தார். பின் சன்னதி நோக்கி நடக்கத் தொடங்கியவருக்குள் பெரும் வயிற்று உபாதை ஆரம்பமானது. வயிறு பானை போல் வீங்கத் தொடங்கியது. அவன் பெருமாள் தீர்த்தம் என்று தந்தது விஷதீர்த்தம்! அந்த மாயாவி பின் தொடர்ந்தபடியே இருக்க தேசிகன் வலி தாளாமல் ஒரு கல் மண்டபத்தில் அமர்ந்தார். மூச்சு முட்ட உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கியது. |
|
|
|