|
ஒரு செல்வந்தரின் மகன் தீய பழக்கத்திற்கு ஆளாகி கொண்டிருந்தான். அவனை திருத்த முயற்சித்து பயனில்லை. காட்டில் வாழ்ந்த துறவி ஒருவரின் உதவியை நாடினார். செல்வந்தரின் மகனை அழைத்து வரச் சொன்னார் துறவி. இளைஞனுடன் காட்டிற்குள் சிறிது நேரம் துறவி காலாற நடந்தார். ஒரு சிறு செடியைக் காட்டி, ‘‘ இதை உன்னால் பிடுங்க முடியுமா?” எனக் கேட்டார். இளைஞனும் பிடுங்கினான். பின்னர் துறவி பெரிய செடியைக் காட்டி, “இதை பிடுங்கி எறி பார்க்கலாம்?” என்றார். உடனே செய்தான். சற்று துாரம் நடந்ததும் ஒரு முள் புதரைக் காட்டி பிடுங்க முடியுமா என்று கேட்க இளைஞனும் தனது முழுசக்தியைப பயன்படுத்தி பிடுங்கினான். ஆனால் கையில் முள் குத்தியதால் வலி ஏற்பட்டது. பின்னர் ஞானி சிறிய மரத்தைக் காட்டினார். ‘‘சுவாமி...இதற்கு பெரும் முயற்சி தேவைப்படுமே’’ என மறுத்தான். துறவி பெரிய மரத்தைக் காட்டியபடி, ‘‘இதை உன்னால் பிடுங்க முடியாது. கோடரியால் வெட்டத் தான் வேண்டும்’’ என்றார். இளைஞன் மவுனமாக நின்றான். அப்போது இளைஞனிடம், ‘‘தீய பழக்கங்களும் இதைப் போலத்தான்! முளையில் எளிதாக கிள்ளி எறியலாம். ஆனால் வளர விட்டால் மீள்வது கடினம். இதைத்தான் திருவள்ளுவர், ‘இளைதாக முள்மரம் கொல்க’ என கூறியுள்ளார்’’ என விளக்கினார்.
|
|
|
|