|
கைலாயத்தில் ஒருநாள் சிவபெருமானும்,
பார்வதிதேவியும் தேவ கணங்கள் புடைசூழ சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர்.
ஆட்டம் முடியும் நேரத்தில் பார்வதி வெற்றி பெறும் நிலையில் இருந்தாள்.
அப்போது திடீரென சிவன் ‘நான் தான் வெற்றி பெற்றனே்’ என எழுந்து நின்றார். “நான் தானே ஜெயிக்கப் போகிறேன்... ஆட்டம் முடியாத நிலையில் எழுந்து விட்டால் எப்படி?” எனக் கோபித்தாள் பார்வதி. உடனே சிவன் அருகில் இருந்த சித்ரநேமி என்ற கணதேவனிடம், “நீயே சொல்லப்பா! எங்களில் யார் வெற்றியாளர்?” எனக் கேட்டார். சிவனுக்கு
பாதகமாக சொல்லி, அவரது கோபத்திற்கு ஆளாகிவிட்டால் என்னாவது? அம்மாவைக்
கூட சமாளித்து விடலாம்,” என்ற எண்ணினார் சித்ரநேமி. “நீங்கள் தான்
ஜெயித்தீர்கள் சுவாமி” என்று உண்மையை மறைத்தான். வந்ததே பார்வதிக்கு கோபம்.
‘‘நடுநிலை தவறியவர்களுக்கு தொழுநோய் தானே வரும். இதோ நீயும் நோயால்
அவதிப்படு’’ என சபித்தாள் பார்வதி. அவளை சமாதானம் செய்த சிவன்,
‘‘பார்வதி! ஆட்டத்தில் நீ தான் வெற்றி பெற்றாய். விளையாட்டுக்காக சொன்னதை
பெரிதுபடுத்தி விட்டாயே! நான் நெற்றிக் கண்ணால் எரித்து விடுவேனோ என்ற
பயத்தில் சித்ரநேமி பொய் சொல்லி விட்டான், சாபத்தை திரும்பப் பெறு”
என்றார். மனம் இரங்கினாள் பார்வதி.
‘‘சித்ரநேமி! கடவுளாகவே
இருந்தாலும் நீதி தவறக் கூடாது என்பதற்காகவே இந்த திருவிளையாடலை
நிகழ்த்தினேன். இருப்பினும் எல்லாம் நன்மைக்கே. பூலோகத்தில் மனிதனாகப்
பிறப்பெடுப்பாய். புனித நதிகளான கங்கையும், யமுனையும் ஒன்று சேரும்
நன்னாளான ஆவணி மாத பவுர்ணமிக்கு முந்திய வெள்ளிக்கிழமைக்காக காத்திரு. அந்த
நாளில் துங்கபத்திரை நதிக்கரைக்கு தேவலோகப் பெண்கள் வருவார்கள். அவர்கள்
ஸ்ரீதேவியான மகாலட்சுமிக்கு விசேஷ பூஜை நடத்துவர். அதில் நீயும் கலந்து
கொண்டு அவளைத் தரிசிக்க வேண்டும். அவளருளால் தொழுநோய் நீங்கப் பெறுவாய்’’
என விமோசனம் தந்தாள். சித்ரநேமியும் துங்கபத்ரா நதிக்கரையில் ஆவலுடன்
காத்திருந்தான். பார்வதிதேவி குறிப்பிட்ட நல்லநாளில், தேவலோக பெண்கள்
லட்சுமி தாயாரைப் பூஜித்த காட்சியைக் கண்குளிரக் கண்டான். விரதத்தில்
பங்கேற்றான். முடிவில் சுமங்கலி, பத்து வயதுக்குட்பட்ட கன்னிப்பெண்,
அந்தணர், துறவி. பிரம்மச்சாரிகளுக்கு தாம்பூலம் கொடுத்து வழியனுப்பினான்.
அப்போது அவனை விட்டு தொழுநோய் மறைந்தது. தொழுநோய் நீக்க வரம் அளித்ததால்
மகாலட்சுமி ‘வரலட்சுமி’ எனப் பெயர் பெற்றாள்.
|
|
|
|