|
தனக்கு மூச்சு முட்டுவதை சற்று ஒளிந்திருந்து பார்த்தபடி இருந்த அவனை தேசிகரும் பார்த்தார். அந்த நொடியே அவருக்கு ஏதோ தப்பு நடந்திருப்பது புரியத் தொடங்கியது. வயிற்று உபாதை அதிகமாகிக் கொண்டே போனது. ‘ஜலஸ்தம்பனம்’ என்னும் தாந்த்ரீகத்தால் அந்த மாயாவி அவரை உபாதைக்கு ஆட்படுத்தி வயிறு வெடிக்கச் செய்வது என்பது அதன் முடிவாகும். தான் அதற்கு ஆட்பட்டதை உணர்ந்த தேசிகர், தன்வந்திரிக்கான பீஜாட்சரத்தை சொல்லத் தொடங்கினார். அந்த மாயாவி பார்த்துக் கொண்டே இருந்தான். ஸ்ரீதேசிகரும் பீஜாட்சரத்தை சொன்னதோடு நிமிர்ந்து உட்கார்ந்தார். அப்படியே எதிரில் இருந்த கம்பம் ஒன்றை உற்று நோக்கியவர், எழுந்து சென்று விரல் நகத்தால் அதை கீறினார். அந்த இடத்தில் தண்ணீர் கசியத் தொடங்கி தரையில் ஓடியது. அதைப்பார்த்த மாயாவியிடம் பெரும் திகைப்பு! சில நொடிகளில் தேசிகர் உடல் பழைய நிலையை அடைந்தது. அவரும் எதுவும் நடக்காதது போல் எம்பெருமானை வணங்கச் சென்றார். அந்த மாயாவி அவரின் அந்த போக்கை எண்ணி ஆச்சரியப்பட்டதோடு, தன் மீது கோபம் கொள்ளாத அவரை நினைத்து குழம்பவும் செய்தான். ஜலஸ்தம்பனத்தை கம்பத்துக்கு இடம் மாற்றி, அந்த நீரை வெளியேற்றி, பஞ்சபூதங்களை ஆட்டி வைக்கும் வலிமை தனக்குள் இருப்பதை நிரூபித்துவிட்ட அவரை, ஒரு சாமான்யராக கருத அந்த மாயாவியால் முடியவில்லை. பதிலுக்கு அவர் தனக்கு ஏதும் செய்வாரோ என பயந்தான். தேசிகர் நினைத்திருந்தால் தனக்குள் தன்னை ஸ்தம்பிக்க வைக்கப் பார்த்த நீரை மாயாவிக்கே திருப்பியிருக்க முடியும். ஆனால் அவர் அதை கம்பத்திற்கு செய்து தன்னை விட்டுவிட்டது எதனால் என்றும் புரியவில்லை. அவனுக்குள் பெரும் மன உளைச்சல்! அப்போது உள்ளே தரிசனம் முடித்து தேசிகரும் சீடர்களுடன் வெளியில் வந்த வந்தார். எம்பெருமானுக்கு சாற்றிய துளசிமாலை அவர் கழுத்தில் இருந்தது. மாயாவி ஒளிந்திருக்கும் கம்பத்தருகே நின்று, ‘‘அப்பனே...எதற்காக மறைந்திருந்து பார்க்கிறாய்... நேரில் பார்க்கலாம் வா...’’ என்றார். அந்த அழைப்பு அவனை உலுக்கி விட்டது. வைணவ கோலத்தில் இருந்த அவனும் தயக்கமுடன் வெளிப்பட்டான். தேசிகரை மிரட்சியுடன் பார்த்தான், தேசிகரோ சிரித்தார். துளியும் அச்சமில்லாத இணக்கத்தை உருவாக்கிடும் சிரிப்பு. ‘‘சுவாமி...’’ அவன் குரலில் நடுக்கம். ‘‘அச்சம் வேண்டாம். உனக்காகவே எம்பெருமானிடம் பிரார்த்தனை செய்து கொண்டேன் இனி இது போன்ற செயல்களல் ஈடுபடாதே..’’ ‘‘சுவாமி... மன்னித்து விடுங்கள், நான் பொறாமை வயப்பட்டு விட்டேன்..’’ ‘‘உன்னை வைத்தே ஆமை புகுந்த வீடு உருப்படாது என்றனர். வீடு உன் உடல்..! பொறாமை அதில் புகுந்த ஆமை..! எப்போதும் ஒப்பிட்டாலே பொறாமை தோன்றும். ஒப்பிடாமல் தன் பலம் அறிந்து நடப்பதே நலம் தரும். மிக உயரமாய் வளர்வதால் தென்னை உயர்ந்தது என்றோ, சிறு அளவே வளர்ந்ததால் புற்கள் தாழ்ந்தவை என்றோ யாரும் சொல்வதில்லை. புற்கள் அந்த அளவுக்கு வளர்ந்தாலே மாடுகளால் உண்ண முடியும். தென்னை உயர்ந்தாலே இளநீர் உருவாக இயலும். ஆட்டிற்கும் வால் அளந்தே வைக்கப்பட்டுள்ளது. இதில் பெரிது சிறிது எனும் பாகுபாடுகள் எதற்கு?’’ என்று தேசிகர் அளித்த விளக்கம் அவனை சிந்திக்க வைத்து கண்ணீர் விட வைத்தது. ‘‘அழாதே...மனம் திருந்தி நட. அல்ப மாயாவித்தைகளில் காலத்தை செலவிடாமல், இவ்வேளையில் அவனை நினைத்து அவன் திருவடியை அடைவற்கு முயற்சி செய். அதுவே போகும் வழிக்கும் புண்ணியம்’’என்று சொல்லிவிட்டு நடந்தார். அந்த நொடி தேசிகர், மாயாவி மனதில் மிகவே உயர்ந்து விட்டார் அவர் போவதையே பார்க்கலானான்! வீடு திரும்பினார் தேசிகர். அங்கு திருமங்கை திருவஹீந்திரபுரம் செல்ல தயாராக இருந்தாள். சாரட் வண்டியும் கிருஷ்ண பாண்டனோடு தயாராக இருந்தது. திருமங்கை முகத்தில் அலாதி சந்தோஷம்! மடிசார் புடவையிலும், மலர்ந்த முகத்தோடும் அவளைக் காண இரு கண்கள் போதாது. தேசிகனும் மனைவியை ரசித்துப் பார்த்தார். அப்படியே ‘‘பயணம் செல்லப் போகிறோம் என்றதும் மனம் ஏகாந்தத்தில் மூழ்கி விட்டதா உனக்கு?’’ என்றும் கேட்டார். ‘‘ஆம்...திருவஹீந்திரப் பெருமானை தரிசிக்கப்போவதை நினைக்கும் போதே என்னுள் பரவசம். அதிலும் தம்பதி சமேதராக வணங்குவது பாக்கியம் அல்லவா?’’ ‘‘சரியாகச் சொன்னாய்...நம் வைஷ்ணவ தர்மத்தில் ஒரு கிரகஸ்தன் மணவாட்டியோடு கூடியே எம்பெருமானை தரிசிக்க வேண்டும். அவன் அதற்காகவே எம்பெருமான் மார்பிலும் மடியிலுமாக பெருமாட்டியை வைத்திருக்கிறான்.’’ என்று அதற்கு விளக்கமளித்தவர், அதன் பின் உரிய ஆயத்தங்களுடன் வேத பாடசாலையை பிரதான சீடர்கள் வசம் ஒப்புவித்து தான் வரும் வரை பாராயணம், சத்சங்கம் நடந்திட வகை செய்து விட்டே புறப்பட்டார். அன்றைய பயணத்தில் திருக்கோவிலுாரை அடைந்தவர், திருக்குளத்தில் நீராடி சந்தி முடித்து, திருவிக்கிரமப் பெருமாளையும் வணங்கி முடித்தவராக திருவஹீந்திரபுரம் நோக்கிச் செல்லும் போது இருட்டத் தொடங்கியது. ஒரு கிராமம் குறுக்கிட்டது. குதிரைகளும் களைத்து விட்டன. அந்த கிராமத்து தலையாரி வீட்டுத் திண்ணை பெரிதாக தங்குவதற்கு வசதியாக இருந்தது. அங்கேயே தங்கிய தேசிகரும், அவர் பத்னியும் கைவசம் பிரம்புக் கூடையில் வைத்துக் இருந்த ஹயக்ரீவ சாளக்ராமங்களுக்கு, தீர்த்தத்தை நிவேதனமாக வைத்து பூஜித்து விட்டு, அதையே தங்களுக்கான இரவு உணவு என்று அருந்தி உறங்கச் சென்றனர். அன்றிரவு அற்புதம் நிகழ இருப்பதை தேசிகர் அறியவில்லை. எம்பெருமானும் அவர் அறியாத வண்ணம் ஒரு திருவிளையாடல் புரியலானான். தேசிகரின் சாரட் குதிரைகள் அருகில் புல் மேய்ந்தபடி இருக்க, கிருஷ்ண பாண்டன் வேறு ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் குதிரையானது கனைக்கும் சப்தம் கேட்டு வெளிவந்து பார்த்தவனுக்கு திகைப்பாகி விட்டது. ஒரு வெண்ணிறக்குதிரை அவனது வயலில் விளைந்த கடலைப் பயிரை மேய்ந்து கொண்டிருந்தது. அதை விரட்டவும் தோன்றவில்லை. அது வயலில் மேய்ந்ததோடு அவன் வீட்டைச் சுற்றிவந்து வேலியில் படர்ந்திருந்த கொடிகளையும் உண்டது. அந்தக் குதிரையை தேசிகரின் குதிரை என்றே கருதி விட்டார் அந்த தலையாரி. மறுநாள் பொழுது விடிந்து தேசிகர் புறப்படத் தயாராகி நன்றி கூறலானார். ‘‘சுவாமி...தாங்கள் என் திண்ணையில் படுத்து உறங்கியதால் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஆனால் குதிரைகள் தான் சும்மா இல்லாமல் இரவில் கடலைப் பயிர்களையும், வேலிப் பயிர்களையும் தின்று தீர்த்தன. அவைகளுக்கு உணவு தேவை எனில் கேட்டிருந்தால் புற்களை கொண்டு வந்து போட்டிருப்பேனே’’ என்றான். திகைத்தார் தேசிகர், கிருஷ்ண பாண்டனே ‘‘நம் குதிரைகள் அவ்வாறு நடக்கவில்லை. அவை கட்டப்பட்ட இடத்தில் தான் இருந்தன.’’ என்றான். உடனேயே தலையாரி கடலை வயலுக்கும், வேலியோரமாகவும் சென்று தேசிகருக்கு காட்டினார். அங்கெல்லாம் குதிரைக் காலடித் தடயங்களும் கண்களில் பட்டன. ‘‘இப்பொழுது என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்கவும், தேசிகர் கண்களை மூடி தியானித்தவராக தலையாரிடம் ஒரு சொம்பில் பால் கொண்டு வரச் சொன்னார். அதைக் கொண்டு மீண்டும் திண்ணையில் அமர்ந்து ஹயக்ரீவ சாளக்ராமங்களுக்கு பால் நிவேதனம் செய்தார். செய்து அந்த பிரசாதத்தை அனைவருக்கும் சாப்பிடக் கொடுத்தார். இவ்வேளை அங்கொரு அதிசயம் அந்த காலை வேளையில் நிகழ்ந்தது. குதிரை கனைக்கும் சப்தமும் கடலை வயலில் பக்கம் கேட்டது. எட்டிப் பார்க்கவும் வெண்குதிரை தோன்றி மீண்டும் கடலைப் பயிரை உண்ணத் தொடங்கியிருந்தது. அப்படியே அது வேலிப் பயிர்களில் மீதமிருந்ததை உண்டது. அதன் ஒளியும், கனைப்பும் அனைவரையும் கட்டிப்போட்டு விட்டிருந்த நிலையில் அது வாய் வைத்த இடமெல்லாம் தங்கமாய் மாறி ஜொலிக்கத் தொடங்கியது!
|
|
|
|