|
கோகுலத்தில் இருந்த கிருஷ்ணர், அவரது அண்ணன் பலராமரை மதுரா நகரத்திற்கு அழைத்து வந்தார் பக்தரான அக்ரூரர். இவர்களைக் கண்ட மக்கள் அவர்களின் பேரழகு கண்டு மெய் மறந்தனர். அப்போது அந்த வழியாக முதுகு வளைந்த வயதான பெண் ஒருத்தி சந்தனப் பேழையுடன் சென்று கொண்டிருந்தாள். அவளிடம் கிருஷ்ணர், “குணத்தால் உயர்ந்த பெண்ணே! நறுமணம் மிக்க சந்தனத்தை யாருக்கு எடுத்துச் செல்கிறாய்?” என்றார். கம்ச ராஜாவுக்கு சந்தனம் அரைக்கும் பணிப்பெண் நான். ஒரு அசுரனுக்கு பணி செய்தே என் வாழ்நாள் வீணாகி விட்டது. இன்றாவது இந்த சந்தனத்தை நல்லவர்களுக்கு அளித்து என் வாழ்வை பயனுள்ளதாக்கிக் கொள்கிறேன்” என்று சொல்லி கிருஷ்ணருக்கும், பலராமருக்கும் சந்தனம் பூசினாள். கிருஷ்ணர் தன் விரலால் அவளின் முக வாயையும், கால்களால் அவளின் பாதங்களையும் வேகமாக அழுத்தினார். கணப் பொழுதில் கூன் நிமிர்ந்த அவள் அழகிய பெண்ணாக மாறினாள். கடவுளுக்கு சேவை செய்ததற்கு பலன் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தாள். இவள் யார் தெரியுமா? முந்தைய ராமாவதாரத்தில் கூனியாகப் பிறந்து ராமனைக் காட்டுக்கு அனுப்பிய மந்தரை. இன்னொரு பிறவியில், கிருஷ்ணருக்கு பணிவிடை செய்து பாவம் நீங்கப் பெற்றாள்.
|
|
|
|