Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சனிப்பெயர்ச்சியும் பரிகாரமும்!
 
பக்தி கதைகள்
சனிப்பெயர்ச்சியும் பரிகாரமும்!

“யார் பேச்சையோ கேட்டு அந்த ஜோசியர்கிட்ட குடும்பத்தோட போனது தப்பாயிருச்சி சார்.”  என்றார் என்னுடைய நண்பர் மருத்துவர்.
“ஏன் என்னாச்சு?
“அடுத்த மாசம் ஏதோ சனிப்பெயர்ச்சி நடக்கப் போகுதாமே! அதனால என் மூத்த மகனுக்கு படிப்புல பிரச்னை வருமாம். பெரிய வியாதி வருமாம். பரிகாரம் செய்யணும்னா அம்பதாயிரம் ரூபாய் செலவாகுமாம்..
 “நான் பச்சைப்புடவைக்காரிய நம்பறவன். கிரகங்கள் மேல நம்பிக்கையில்லாம இல்ல. தள்ளி நின்னு கும்பிடு போட்டுட்டுப் போயிருவேன்.  நவக்கிரக சன்னிதிய 108 தரம் சுத்தறது,  பரிகாரம் செய்யறது .. இதுலல்லாம் ஈடுபாடு கெடையாது. எல்லாக் கிரகங்களும் மீனாட்சிக்குக் கட்டுப்பட்டது தானே!”
என் கொள்கையும் ஏறக்குறைய அதுதான்.
“பரிகாரம் செஞ்சேயாகணும்னு என் பொண்டாட்டி ஒத்தக்கால்ல நிக்கறா. பணத்துக்காகப் பாக்கல, சார். பரிகாரத்துக்குச் செலவழிக்கற காச வச்சிக்கிட்டு நாலு ஏழைக்கு நல்லது செய்யலாமேன்னு எனக்குத் தோணுது. நீங்க என்ன நெனக்கறீங்க?”
“இப்போதைக்கு ஒண்ணும் புரியல. பச்சைப்புடவைக்காரி வழி காட்டினா உடனே உங்களக் கூப்பிடறேன்.”
அன்று காலை உழவர் சந்தைக்குச் சென்றிருந்தேன். காரை நிறுத்திய இடத்தில் ஜோசியக்காரி உட்கார்ந்திருந்தாள். கருப்பாக, அழகாக, கம்பீரமாக இருந்தாள்.
“சாமி சோசியம் பாருங்க.”
“எனக்கு அதில நம்பிக்கை இல்லம்மா.”
“சாப்பிட்டு ரெண்டு நாளாச்சுங்க.”
உடனே ஐம்பது ரூபாயை நீட்டினேன்.
“உலகத்திற்கே அளப்பவளுக்கு நீ படியளக்கறயாக்கும்?”
“தாயே” என அலறியபடி அவளை விழுந்து வணங்கினேன்.
“அந்த மருத்துவனுக்கு என்ன சொல்லப் போகிறாய்?”
“எனக்கென்ன தெரியும்? நீங்கள் சொன்னால் சொல்கிறேன்..”
“அவன் எங்கிருக்கிறான் என அறிந்துகொண்டு அங்கே ஓடு. உன் மூலம் அவனுக்கு வழிகாட்டமுடியுமா என்று பார்க்கிறேன்.”
அன்னையை  வணங்கிவிட்டு ஓடினேன்.
மருத்துவர் அவர் பணிபுரியும்  மருத்துவமனையில்தான் இருந்தார். வெளியே இருக்கும் அவருடைய பெண் உதவியாளரைக் காணவில்லை. மருத்துவரின் அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்தேன்.
“வெளியே நில்லுங்க....ஓ நீங்களா... உக்காருங்க சார். ஒரு நிமிஷம்.. ”
மருத்துவர் முன் நடுங்கியபடி அவரது பெண் உதவியாளர் நின்றிருந்தார்.
“ஆயிரம் விளக்கம் கொடுத்தாலும் நீ செஞ்சது தப்பு...ராணி. ஒரு மாசத்துக்கு முன்னால அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினவரக் காக்க வச்சிட்டு ரெண்டு நாளைக்கு முன்னால வந்தவருக்கு முன்னுரிமை கொடுத்திருக்க.  ஏன் அப்படி செஞ்ச? ஏதாவது காசு வாங்கினியா?”
“ஐயையோ! அதெல்லாம் இல்ல, டாக்டர்.”
“அப்பறம்?”
“தெரிஞ்சவங்க.. . அதான்.. “
“ தப்பும்மா. நாம உருவாக்கின நெறிமுறைய நம்பளே மீறலாமா?  நல்ல வேளையா பாதிக்கப்பட்ட ஆளு என்கிட்ட புகார் கொடுத்ததால  மேட்டர் ஈசியா முடிஞ்சிருச்சி. மேலிடத்துக்கு எழுதினா உன் வேலை போயிருக்கும்.  செஞ்ச தப்புக்குத் தண்டனையா ஒரு நாள்  சஸ்பெண்ட் பண்றேன்.”
உதவியாளர் கண்ணீருடன் வெளியேறினாள்.
பச்சைப்புடவைக்காரி என்ன பேச வேண்டும் என சொல்லிவிட்டாள்.
“டாக்டர்...நோயாளிங்க உங்கள தெய்வமாப் பாக்கறாங்க. உங்களுக்காக மாசக்கணக்குல காத்துக்கிட்டிருக்கவும் தயாரா இருக்காங்க. நடுவுல சில குறுக்குப் புத்திக்காரங்க உங்க அசிஸ்டெண்ட கையில போட்டுக்கிட்டு உங்களைச் சீக்கிரம் பார்க்க முயற்சி செய்யறாங்க.”
“உங்களுக்கு என்னாச்சு? எங்க ஆஸ்பத்திரில என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியாதாக்கும்? அத ஏன் நீங்க.. “
“ஷ்.. பேசாதீங்க. நான் நானாப் பேசல. அவ கொத்தடிமையாப் பேசறேன்.”
அடங்கினார் மருத்துவர்.
“நோயாளிங்களுக்கு நீங்க தெய்வம்னா உங்க உதவியாளர்தான் சனி, குரு, சுக்ரன் எல்லாம்.  உங்ககிட்ட நல்ல பேர் வாங்கணும்னு சிலர் உங்க உதவியாளரத்  தாஜா பண்ணலாம். அவங்களுக்குச்  சின்னச் சின்ன பரிசுகள் கொடுக்கலாம். அதுமாதிரிதான் நவக்கிரக வழிபாடு. உங்க உதவியாளருக்குக் குல்லா போட்டு உங்கள ஏமாத்த முடியாது.  அதுகூட ஒரு சமயம் நடக்கலாம்.  என்னதான் டாக்டராயிருந்தாலும் நீங்க சாதாரண மனுஷர்தானே! இதோ இப்போ இந்தப் பொண்ணு செஞ்ச மாதிரி முன்னுரிமைய மாத்தலாம். ஆனா என் எஜமானி பச்சைப்புடவைக்காரிகிட்ட இதெல்லாம் நடக்காது.  தொலச்சிருவா!”
மருத்துவர் முழித்தார். நான் தொடர்ந்தேன்.
“உங்க அசிஸ்டண்ட்  நோயாளிய ஏமாத்தின மாதிரி என்ன ஏமாத்த முடியாது. காரணம், நான் உங்களோட நேரடித் தொடர்புல இருக்கேன்.  எனக்கு உங்கள நல்லாத் தெரியும். அதனால தேவையில்லாம உங்ககிட்ட நான் முன்னுரிமை கேக்கமாட்டேன். ஆனா என் முன்னுரிமைய யாராவது தட்டிப் பறிச்சா உங்க சட்டையப் பிடிச்சிக் கேள்வி கேப்பேன் அது மாதிரி. பச்சைபுடவைக்காரிய பூரணமா நம்பவறவரு நீங்க. அவள மீறி எந்தக் கிரகமும் உங்கள எதுவும் செய்ய முடியாது. அதனால பரிகாரம் செய்ய அவசியம் இல்ல.
“அதே சமயம்  நவக்கிரகங்களுக்கு மரியாதை கொடுக்கணும். அவங்க பச்சைப்புடவைக்காரிகிட்ட வேல பாக்கறவங்க இல்லையா?  எனக்கு உங்கள நல்லாத் தெரியும்ங்கறதுக்காக உங்க உதவியாளர மரியாதைக்குறைவா நடத்தக்கூடாது இல்லையா?”
“அதெல்லாம் சரி, சார். பையனுக்கு வியாதி வரும். படிப்பு வராதுன்னு பயமுறுத்தறாரே! உண்மையா?”
“சத்தியமா எனக்குத் தெரியாது. ஆனா நீங்களோ உங்க பையனோ அவதிப்படணும்னு கர்மக்கணக்கு இருந்தா பரிகாரம் பண்ணி அத மாத்த முடியாது.”
“வேற வழியே இல்லையா?”
“இருக்கு. உங்க மகன் வயசுல இருக்கற ஏழைப் பசங்க ரெண்டு பேரோட படிப்புச் செலவ ஏத்துக்கங்க.  இதய நோயால துடிக்கற ரெண்டு ஏழை நோயாளிங்களுக்கு இலவசமா சிகிச்சை செய்யுங்க.”
“அப்படிச் செஞ்சா என் பையன் தப்பிச்சிருவானா?”
“உத்தரவாதம் கொடுக்க அந்த உமா மகேஸ்வரியாலதான் முடியும், டாக்டர். ஆனா மனசுல அன்பு குறையறதுனாலதான் துன்பம் வருதுன்னு என்கிட்ட பச்சைப்புடவைக்காரி படிச்சிப் படிச்சிச் சொல்லியிருக்கா.  நாலு பேருக்கு நல்லது செய்யும்போது உங்க மனசுல அன்பு கொழுந்துவிட்டு எரியும். அதுல துன்பங்கள் எல்லாம் சாம்பலாயிரும்.”
அதன்பின் நான் அங்கே அதிக நேரம் இருக்கவில்லை.
மருத்துவமனை வாசல் அருகே நடந்து கொண்டிருந்த போது என் தலையை யாரோ கம்பால் தட்டியது போல் தோன்ற, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். அதே ஜோசியக்காரி.
“நீ பேசியதில் தவறு இருக்கிறது.  இந்தச் சனிப்பெயர்ச்சியில் உனக்கும் பிரச்னை வரும். நீயும் பரிகாரம் செய்ய வேண்டும்.”
“தாயே உங்களை மீறி சனீஸ்வரனால் எனக்குத் துன்பம் கொடுக்க முடியாது என எனக்குத் தெரியும்.”
“நாந்தான் சனீஸ்வரனிடம் உனக்குத் துன்பம் கொடுக்கச் சொல்லி ஆணையிட்டிருக்கிறேன்.”
“நல்லதாகப் போயிற்று, தாயே! நான் துன்பப்படவேண்டும் என நீங்களே விரும்பினால் மவுனமாக அதை ஏற்று வலியால் துடிப்பதுதானே உத்தமமான வழிபாடு?  நானும் உங்களுடன் வக்கணையாகப் பேசுகிறேனேயொழிய வழிபாடு என எதுவும் செய்ததில்லையே! அதற்கு வாய்ப்புக் கொடுத்தற்கு நன்றி.”
அன்னை கலகலவென சிரித்தாள்.
“பயந்துவிட்டாயா? உன்னைச் சீண்டிப் பார்த்தேன். இப்போது சொல் உனக்கு என்ன வேண்டும்”.
“எனக்கு இரு வரங்கள் வேண்டும், தாயே!”
“என்ன வரங்கள்?
“நீங்கள் என்னை எந்தச் சமயத்திலும் கைவிடக்கூடாது என்பது முதல் வரம். நீங்களே என்னைக் கைவிட்டால்  நான் வேறு எந்தச் சக்தியாலும் காப்பாற்றப்படக்கூடாது என்பது அதைவிட முக்கியமான இரண்டாவது வரம்.”
“முட்டாளே! என்னைத் தவிர இன்னொரு சக்தி இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிறது என இன்னுமா நம்புகிறாய்?”
மீண்டும் ஒருமுறை  தன் கையில் இருந்த கம்பால் என் தலையில் தட்டிவிட்டு மறைந்தாள் அந்த மகேஸ்வரி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar