|
அந்த வெள்ளைக் குதிரை வாய் வைத்த இடம் எல்லாம் தங்கமாய் ஜொலிக்கவும் அதைக் கண்ட தலையாரி திகைத்துப் போனான். அது இன்பத் திகைப்பு அது ஆச்சரியத் திகைப்பு... வேதாந்த தேசிகரோ புளகாங்கிதம் அடைந்தார். கண்களில் ஆனந்தக் கண்ணீர். மனைவி திருமங்கையும் சிலிர்த்துப் போனாள். அந்த வெள்ளைக் குதிரையும் மேய்ந்த நிலையில் மறைந்தும் போனது. தலையாரி ஓடி வந்து காலில் விழுந்தான். ‘‘சுவாமி... என்ன அதிசயம் – அது தேவலோக குதிரையா? பச்சைத் தாவரம் பசும் தங்கமாகி விட்டதே... இது என்ன மாயம்?’’ என்றான். ‘‘மாயமில்லை. கருணை! எனக்காக அந்த ஹயக்ரீவர் உன் மீது காட்டிய கருணை. அவன் எல்லை இல்லாத பேரருளாளன். அவதாரங்கள் பல எடுத்தவன். இப்போது ஹயக்ரீவமாக வந்து சேவை சாதித்ததோடு உனக்கேற்பட்ட நஷ்டத்தையும் ஈடு செய்து விட்டான்’’ என்று பரவசத்தோடு பதிலைச் சொன்னார். அதைக் கேட்ட தலையாரி, ‘ஹயக்ரீவம்’ என்ற சொல்லே புதிது. தாங்கள் விளக்கம் தர இயலுமா?’’ என்றும் கேட்டான். ‘‘ஹயக்ரீவம் எனில் வெள்ளைப் பரிமுகன் என தமிழல் பொருள் கொள்ள வேண்டும். இப்பரிமுகன் இல்லாவிட்டால் நால்வகை வேதமோ, அதன் கிளைகளான ஸ்மிருதி முதலானவைகளோ இல்லை. இவை இல்லாவிட்டால் உலகில் மொழியோ, எழுத்தோ அதனால் ஆன கல்வி, கேள்விகளோ எதுவும் இல்லை. மனிதன் மிருகத்தை விட சற்று மேலானவனாக ஆனால் சற்றும் ஞானமின்றி மூடனாக வாழ்ந்திருப்பான். மனித இனம் கடைத்தேற வேண்டும் என்றே எம்பெருமான் மனிதர்களைப் படைக்கும் முன் வேதங்களைப் படைத்தான். படைத்ததன் மதிப்பை உலகிற்கு உணர்த்த, அவனே அசுரர்களான மது, கைடபர்களைப் படைத்தான். அவர்களே வேதத்தை குதிரை வடிவில் வந்து அபகரித்துச் செல்ல வைத்தான். பின் இவனே ஒரு வெள்ளை பரிமுகனாக மோதி அசுரர்களை அழித்து வேதங்களையும் காப்பாற்றி பிரம்மாவிடம் ஒப்படைத்தான். இந்தச் சம்பவம் வாயிலாக வேதங்களின் மதிப்பை மட்டுமல்ல அதன் விளைவான கல்வி, கேள்வி, ஞானம் ஆகியவற்றின் மதிப்பை உலகிற்கு உணர்த்தியவன் என்றானான். இந்த ஹயக்ரீவன் கடலுாரில் திருவஹீந்திரபுரத்தில் எழுந்தருளி அருள்புரிகிறான். எனக்குள் ஞானத்துாண்டல் ஏற்படவும், வித்தைகள் வசப்படவும் இவனே முழுமுதல் காரணம். இப்போது கூட இவனை துதித்தபடியே நாங்கள் பயணம் செல்கிறோம். வழியிலேயே குதிரைத் தோற்றத்தால் தரிசனம் அளித்து பொன்னும், பொருளும் அளித்து விட்டான்’’ என்றதும் தேசிகர் சிலிர்த்துப் போய் கூறினார். கல்விக்கும், கேள்விக்குமானவன் பொன்னையும் தந்தது தான் ஆச்சர்யம். மகாலட்சுமி போல் தன்னை வணங்குபவர்க்கு இவன் ஐஸ்வர்யங்கள் தருபவனா?’’ தலையாரியின் இந்தக் கேள்வியை தேசிகர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ‘‘அது பார்ப்பவர் கோணத்தை பொறுத்தது. என்னைப் பொறுத்த வரையில் ஹயக்ரீவத்தின் திருவாய்பட்ட இடம் பொன்னாகி விட்டது என்பது, ஹயக்ரீவத்தை உபாசித்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குபவர் சொல்வதெல்லாம் பொன் போன்றது என்றாகும். இன்று அவன் நிகழ்த்திய அற்புதத்தை நான் இப்படித்தான் பொருள் கொள்கிறேன்’’ ‘‘சுவாமி... இது நான் சற்றும் எதிர்பார்த்திராத அரிய விளக்கம். தாங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என அறியலாமா?’’ ‘‘நான் திருக்கச்சி என்னும் காஞ்சிபுரத்தில் இருந்து வருகிறேன்’’ ‘‘காஞ்சி என்றவுடனேயே வரதன் என்ற பெயரே நினைவுக்கு வரும். அந்த வரதனை தரிசித்துள்ளீரா?’’ ‘‘பரவாயில்லையே... காஞ்சியை சொன்னவுடன் எம்பெருமான் நினைவு உனக்கும் வந்து விட்டதே, இத்தனை தொலைவில் இருக்கும் உனக்குள்ளேயே அவன் இருக்கும் போது அங்கே வாழும் நான் அறியாமல் போவேனா?’’ ‘‘என்றால் அந்த வரதனின் பெருமையை கூறுங்களேன்’’ ‘‘வரதன்... வரங்கள் தருபவன். ஒரு விந்தை தெரியுமா? அவன் முன் நாம் எதையும் கேட்கவே தேவையில்லை. அவனைப் பார்த்த மாத்திரத்தில் ஒரு வரத்தை நாம் கேளாமலே அளித்து விடுபவன் அவன்!’’ ‘‘அப்படி என்றால் காஞ்சியில் வசிப்பவர்கள் எல்லோரும் பாக்கியசாலிகளா?’’ ‘‘அதில் என்ன சந்தேகம்? காஞ்சியில் பிறப்பதென்பதே ஒரு வரம் தான்! பின் அவனை தரிசித்தல் இன்னொரு வரம்!’’ ‘‘என்றால் காஞ்சியில் வாழ்பவர்கள் துன்பம் இல்லாத இன்ப வாழ்வு வாழ்பவர்களா?’’ ‘‘இன்ப வாழ்வு வாழ்பவர்களே இல்லையோ, வாழ முடிந்தவர்கள் என்பேன்’’ ‘‘இப்படி ஒரு பதிலா?’’ ‘‘ஆமப்பா... வாழத் தெரிவது என்பது எத்தனை பெரிய விஷயம் தெரியுமா?’’ ‘‘வாழத் தெரிவதா.... அப்படியானால் வாழத் தெரியாமலா எல்லோரும் வாழ்கிறார்கள்?’’ ‘‘எல்லோரும் என மாட்டேன். ஆயினும் வாழத் தெரியாமல் வாழ்பவர்களால் ஆனதே இந்த உலகமாய் உள்ளது. இவர்கள் வாழ வேண்டுமெனில் எதற்கு ஆசைப்பட வேண்டும் என்பதில் தெளிவு முக்கியம். அடுத்து எது நிரந்தரமானது என்பதை அறியும் அறிவு. மூன்றாவது தன் கடமைகளை தொய்வின்றி செய்வது...’’ ‘‘அடேயப்பா... என்ன அரிய விளக்கம். தாங்கள் கூறியபடி யோசித்து பார்த்தால் நான் கூட வாழத் தெரியாதவனே! தினமும் பொழுதுகள் விடிகின்றன. அதனால் எழுகிறேன். பசிப்பதால் உண்கிறேன். உண்ண உணவு தேவை. அதற்காக உழைக்கிறேன். உடல் களைப்பதால் உறங்குகிறேன். திரும்பவும் பொழுது விடிகிறது. விழிக்கிறேன். திரும்பவும் பசிக்கிறது. உண்கிறேன். இடையே மனைவி, பிள்ளைகள் என்னும் பந்தங்கள்! அவர்களால் சிலநேரம் இன்பம் – சில நேரம் துன்பம்! இதுதான் மனித வாழ்வா? என்று நானும் எனக்குள் கேட்பதுண்டு’’ ‘‘அழகாகச் சொன்னாய்! இந்த திரும்பத் திரும்பச் செய்யும் செயல்கள் நடுவே காலம் கரைவதையும், உடல் மூப்படைந்து போவதையும், பின் ஒருநாள் மரணிக்கப் போவதையும் சேர்த்துக் கொள். அப்படியே இதனுள் எதைச் சாதித்தேன் என்றும் கேட்டுக் கொள். இந்த மட்டில் சிலர் பொன், பொருள் சேர்த்திருப்பர். இன்னும் சிலர் வீரம் விளங்க வாழ்த்திருப்பர். இன்னும் சிலரோ பெரும் பேச்செல்லாம் பேசியிருப்பர். ஆனால் இவை எதுவும் உயிர் பிரிந்த நிலையில் உடன் வராது. மிஞ்சும் சாம்பல் கூட ஓடும் ஆற்றில் கரைந்து போகும். இதுவா வாழ்வு?’’ ‘‘புரிகிறது சுவாமி... எது வாழ்வு என்று தாங்களே கூற வேண்டும்’’ ‘‘நான் முன்பே கூறியது போல் ஆசைப்படுவதில் தெளிவு, கடமைகளைச் செய்வதில் குறைவின்மை, எது நிரந்தரமானது என்பதில் நல்ல ஞானம் இந்த மூன்றுமே முக்கியம். தெளிவுள்ள மனம் நிலையில்லாதவற்றில் ஆசை வைக்காது. கடமைகளைச் சரியாகச் செய்திட பாவம் ஏற்படாது. நிரந்தரமானது வரதனின் திருவடி சரணாகதியே என்னும் ஞானம் அவனிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும். அவனை அடையவே இந்த வாழ்வு! அதற்கே இந்த பிறப்பு. இதை உணர்ந்து வாழ்பவருக்கு கேடு இல்லை. இதுவே வெற்றிகரமான வாழ்வு!’’ வேதாந்த தேசிகனின் விளக்கம் கேட்ட தலையாரி தெளிவு பெற்றவனாக திரும்ப அவரை வணங்கினான். அவரும் ‘‘வரதனின் அருளும், அவன் அம்சமான ஹயக்ரீவனின் கருணையும் உன்னை வழிநடத்தட்டும்’’ என ஆசியளித்து புறப்பட்டார்.
|
|
|
|