|
ராதை என்னும் இளம்பெண்ணுக்குத் திருமணமானது. கணவர் வீட்டில் மாமியாருக்கும், அவளுக்கும் எதிலும் ஒத்துப் போகவில்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வளரத் தொடங்கியது. ராதையின் கணவனோ இருதலைக் கொள்ளி எறும்பாக திண்டாடினான். ஒருநாள் ராதை சந்தைக்கு போகும் வழியில் தந்தையின் நண்பரைச் சந்தித்தாள். அவர் மூலிகை மருத்துவர். அவரிடம் மாமியார் பிரச்னையை சொல்லி, அவரைக் கொல்ல வழி கேட்டாள். அந்த மருத்துவர் மூலிகைப்பொடி ஒன்றைக் கொடுத்து, ‘‘இது மெல்லக் கொல்லும் விஷம். தினமும் மாமியார் சாப்பாட்டில் கொஞ்சம் கலந்து கொடு. ஓரிரு மாதத்தில் இயற்கை மரணம் ஏற்படும்’’ என்றார். ‘‘ஆனால் இன்னொரு விஷயத்தை கவனத்தில் கொள். மாமியாரிடம் அன்பு காட்டு. அப்போது தான் உன் மீது யாருக்கும் சந்தேகம் வராது’’ எனத் தெரிவித்தார். அதன்படி மருந்தை உணவில் கலந்து அன்புடன் மாமியாருக்கு பரிமாறினாள். அதைக் கண்ட மாமியாருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. மனம் விட்டு பேச ஆரம்பித்தார். இருவருக்கும் புரிதல் ஏற்பட்டது. ஒரிரு மாதம் கடந்தது. மாமியாரின் மீது உண்மையிலேயே அன்பு அரும்பியது. மருத்துவரிடம் ஓடிய ராதை, ‘‘விஷ மருந்துக்கு மாற்று மருந்து கொடுங்கள்’’எனக் கெஞ்சினாள். திகைப்புடன் பார்த்த அவரிடம், ‘‘ஐயா! மாமியாரை இழக்க நான் விரும்பவில்லை’’ என்று அழுதாள். ‘‘கவலைப்படாதே அம்மா! உயிரைக் கொல்லும் விஷத்தை தரவில்லை; அது சத்துப்பொடி தான். அப்போது உன் மனதில் தான் வெறுப்பு என்னும் விஷம் இருந்தது. அன்பு என்னும் மாற்று மருந்து கொடுத்ததும் அந்த விஷம் மறைந்து போனது’’ என்றார்.
|
|
|
|