Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவள் தெளிவித்த மயக்கம்
 
பக்தி கதைகள்
அவள் தெளிவித்த மயக்கம்


“நீங்க ஒரு காலத்துல கண்ணனப் பத்திப் பேசினீங்க, எழுதினீங்க.  பகவத் கீதையப் பத்தி நீங்க எழுதின கண்ணா வருவாயாங்கற புத்தகம் இப்பவும் என் மனசுல அப்படியே நிக்குது. திடீர்னு பச்சைப்புடவைக்காரி, மீனாட்சி, கொத்தடிமைன்னு பேச ஆரம்பிச்சிட்டீங்களே இந்த மாற்றதுக்கு என்ன காரணம்?”
அபிராமி அந்தாதியைப் பற்றி உருக்கமாக ஒரு மணிநேரம் பேசி முடித்தபின் ஒரு வில்லங்கம் வீராச்சாமி என்னிடம் கேட்ட கேள்வி அது.
“அன்பே தெய்வம். அந்த அன்பு ஒரு நாளைக்குப் பச்சைப்புடவையக்கட்டிக்கிட்டு கையில கிளிய வச்சிக்கிட்டு நின்னுக்கிட்டிருக்கும். இன்னொரு நாள் மாட்டிடையன் வேஷம் போட்டுக்கிட்டு புல்லாங்குழல ஊதியபடி பகவத் கீதை சொல்லும். நீங்ககூட காலையில ஆபீஸ் போகும் போது கோட் – சூட் அணிந்து கம்பீரமாப் போறீங்க. இதோ இப்போ இந்த ஆன்மிகக் கூட்டத்துக்கு எளிமையா வேஷ்டி, கதர்ச்சட்டையில வந்திருக்கீங்க,. அதுக்காக இன்னிக்கு சாயங்காலம் நீங்க மதம் மாறிட்டீங்கன்னு சொன்னா நல்லாவா இருக்கும்?”
“பச்சைப்புடவைக்காரிக்குக் கொத்தடிமைன்னாலும் அந்தக் கண்ணனுக்குக் கொத்தடிமைன்னாலும் ஒண்ணுதானே!”
“இதில் என்ன சந்தேகம்? பச்சைப்புடவைக்காரி எனக்கு ஒரு முறை அந்தக் கண்ணனாக காட்சியளித்திருக்கிறாள்.”
“சபாஷ். பகவத் கீதையில கண்ணன் “நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகம் தோறும் அவதரிப்பேன்”ன்னு சொன்னது பொய்தானே!  இந்தக் கலியுகத்துல எத்தனையோ நல்லவங்க அழிஞ்சிட்டாங்க. எங்க பாத்தாலும் தீமை தலைவிரிச்சி ஆடுது. தர்மமாவது தர்ப்பூசணியாவதுன்னு மக்கள் வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. கண்ணன் சொன்னபடி அவதாரம் எடுக்கலையே!  உங்க பேச்சுப்படி கண்ணன், மீனாட்சி, சிவன் எல்லாமே ஒண்ணுங்கறதுன்னால எல்லாரும் பொய்தான் இல்லையா?”
என் தலை சுற்றியது. காட்சி மங்கலாகி இருண்டது.
கண்விழித்தபோது  அழகான பெண் மருத்துவர் நாடியைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
“எனக்கு ஒண்ணும் இல்ல, டாக்டர். ஒரு ஜுஸ் குடிச்சாச் சரியாயிரும்.”
“எனக்கே மருத்துவம் சொல்லித் தருகிறாயா?”
“தாயே!”
“நானேதான் .அவன் கேட்ட கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. அதற்குச் சரியான பதில் கிடைக்கவில்லையென்றால் நாத்திகம் தலைவிரித்து ஆட ஆரம்பித்துவிடும்.”
“என்ன பதில் சொல்வேன்?”
என்னைக் கொத்தடிமையாகக் கொண்டு என் மேல் பெற்ற தாயைவிட அதிகமாக அன்பு காட்டும் அகிலாண்டேஸ்வரி என் ஞானகுருவாக மாறி காதில் உபதேசம் செய்தாள்.
அன்னையை வணங்கிவிட்டு வெளியே வந்தேன். என்னமோ ஏதோ என்று பதறியவர்களை ஆசுவாசப்படுத்திவிட்டு மேடையேறினேன்.
“மயக்கம் முழுசாத் தெளிஞ்சிருச்சா.. இல்ல.. ”
வில்லங்கம் வீராச்சாமி  நக்கலாகக் கேட்டார்.  கூட்டம் சிரித்தது.
“தெளியல. தெளியவும் தெளியாது. தெளியவும் வேண்டாம்.  இது பச்சைப்புடவைக்காரியோட அன்பால் உண்டான மயக்கம்.”
“இந்த சால்ஜாப் எல்லாம் வேண்டாம். பதிலைச் சொல்லுங்க.”
“என்ன கேள்வி?”
“ராவணன அழிக்க ராமனா அவதாரம் எடுத்தார் கடவுள். இரணியன அழிக்க நரசிம்மமா. கம்சன அழிக்க கிருஷ்ணனா. இந்தக் கலியுகத்துல லட்சம் இரணியர்கள், பத்து லட்சம் ராவணர்கள், ஒரு கோடி கம்சர்கள் இருக்காங்க. கடவுள் ஏன் அவதாரம் எடுத்து அவங்கள அழிக்கல? நல்லோரைக் காக்க, தீயோரை அழிக்க, தர்மத்தை நிலைநாட்ட நான் யுகம் தோறும் வருவேன்னு சொன்னது பொய்தானே!’’
“நிறுத்துங்க. உங்க கேள்வியிலயே பதில் இருக்கு. முன்னாடிக் காலத்துல மொத்தத் தீமையும் ஒரு இடத்துல ஒருமிச்சி இருந்தது. திரேதா யுகத்துல உலகத்துல இருந்த தீமையெல்லாம் ராவணன்கிட்டயும் அவனச் சார்ந்த சிலர்கிட்டயும் இருந்தது.  அதனால கடவுள் ராமனாப் பிறந்து ராவணன அழிச்சார்.
“துவாபரா யுகத்துல தீமையெல்லாம் கம்சக் கூட்டத்தில மட்டும் இருந்தது. கண்ணனாப் பிறந்து கம்சனோட வம்சத்தையே அழிச்சார்.
“ஆனா இன்னிக்கு தீமை ஒரு இடத்துல இல்ல. உலகம் பூராப் பரவிக் கிடக்கு.  இன்னிக்கு ஒரு ராவணன் இல்லை. லட்சோப லட்சம் ராவணங்க இருக்காங்க. கோடானு கோடி கம்சர்கள் இருக்காங்க. அவங்கள அழிக்க ஒரு ராமனோ ஒரு நரசிம்மனோ போதாது.  சுயநலத்துக்காக நாட்டையே சுரண்டற அரசியல்வாதிகள்,  புனிதமான மருத்துவத் தொழில்ல இருந்தும் பணத்தாசைக்காக மக்கள் உயிரோட விளையாடற மருத்துவர்கள், பெண்களப் போகப் பொருளா மட்டும் பாத்து வயசு வித்தியாசம் பாக்காம கற்பழிக்கற காமுகர்கள், சொத்துக்கு ஆசைப்பட்டு சொந்த சகோதரனுக்கே துரோகம் செய்யற பாவிகள்னு நாம பாக்கற இடம் எல்லாம் துரியோதனர்கள், ராவணர்கள், கம்சர்களும் இருக்காங்க.
எல்லா இடங்கள்லயும் கடவுள் அவதாரம் சத்தமில்லாம நடந்துக்கிட்டேதான் இருக்கு. உங்க பையனுக்கு திடீர்னு வயத்து வலி வந்தபோது அவன் உயிரக் காப்பாத்த நாலு மணி நேரம் சோறு தண்ணியில்லாம  ஆப்ரேஷன் செஞ்ச டாக்டர்,  தற்கொலை ஒண்ணுதான் முடிவுன்னு தவிச்சிக்கிட்டிருக்கும்போது உங்க மகளுக்கு நல்ல வார்த்தை சொல்லி நம்பிக்கை கொடுத்த அவ தோழி, நாம வழி தவறிப் போக இருந்த சமயத்துல நம்மளக் கண்டிச்சித் திருத்தின நம்ம ஆசிரியர்,  தெரியாத ஊர்ல பணத்தத் தொலச்சிட்டு நாம பட்டினி கிடந்தபோது நமக்குச் சோறு போட்டு  சொந்த ஊருக்கு அனுப்பிவச்ச புண்ணியவான் – இவங்கல்லாம் யாருன்னு நெனக்கறீங்க?  எல்லாரும் கண்ணனோட அவதாரம்தான். பச்சைப்புடவைக்காரியோட அவதாரம் தான்.”
கேள்வி கேட்டவர் உறைந்து போயிருந்தார். நான் தொடர்ந்தேன்.
“அந்தக் காலத்துல ஒரு யுகத்துக்கு ஒரு கெட்டவன் தான் இருந்தான். அப்போ ஒரு யுகத்துக்கு  ஒரு அவதாரம் எடுத்தாப் போதும். ஆனா இப்போ  ஒவ்வொரு விநாடியும் ஒரு கெட்டவன் முன்னால வந்து நிக்கறான். ஒவ்வொரு விநாடியும் அந்தப் பச்சைப்புடவைக்காரி அவதாரம் எடுக்கறா.”
எல்லோரும் வாயடைத்துப் போயிருந்தபோது ஒரு குண்டைத் துாக்கிப் போட்டேன்.
“தன் அண்ணன் கண்ணன் சொன்னது தப்புன்னு பச்சைப்புடவைக்காரி என் காதுல வந்து சொன்னா?”
கூட்டமே கொதித்தெழுந்தது.
“கண்ணன் சொன்னது குறைவு, செய்தது அதிகம். கண்ணன் என்ன சொல்லியிருக்கவேண்டும்?
“நல்லோரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் நான் ஒவ்வொரு கணமும் அவதரிப்பேன்” என்று சொல்லியிருக்கவேண்டும். ஸம்பவாமி யுகே யுகே என்பதற்குப் பதிலாக ஸம்பவாமி க்ஷணே க்ஷணே என்று சொல்லியிருக்கவேண்டும்.  என்ன இருந்தாலும் தன் அண்ணனை விட்டுக் கொடுப்பாளா தங்கைகாரி?”
ஒரு வழியாகக் கூட்டம் முடிந்தது.
“சார்... டாக்டர் உங்கள டெஸ்ட் பண்ணனுமாம்...வாங்க.”
மருத்துவச்சி வேடத்தில் இருந்த மகா மருத்துவச்சியின் கால்களில் வேரறுந்த மரம் போல விழுந்தேன்.
“விளாசித் தள்ளிவிட்டாயே!”
“நீங்கள் எனக்குச் செய்த உபதேசத்தைத்தானே அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.”
“நான் உன் காதில் சொன்னது இரண்டே வாக்கியங்கள்தான். “நானே அன்பு. அன்பே நான்” ஆனால் நீ என்னவெல்லாமோ பேசிவிட்டாயே!”
“அந்த இரண்டு  மகா வாக்கியங்களுக்குள்தானே எல்லாமே இருக்கிறது?”
“உன்னைக் கேள்வி கேட்டு மயங்கச் செய்தவன் மேல் கோபம் வரவில்லையா?”
“அவர் அப்படி கேட்டதால்தானே நீங்கள் எனக்கு ஞானோபதேசம் செய்தீர்கள்? அதனால்தானே பகவத் கீதை ஸ்லோகத்திற்கு அப்படி ஒரு விளக்கம் கொடுக்க முடிந்தது? அவருடைய காலில் விழுந்து கதற வேண்டும் என்று தோன்றுகிறது, தாயே!”
“அவன் அங்கே இருந்தால்தானே!”
“பின்?”
“அவன் கேட்ட கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது. அதற்கு உன் மூலம் பதில் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். அதனால் நான்தான் அந்த ஆளாக வந்தேன். “
மகா மருத்துவச்சியின் காலில் விழுந்து கதறினேன். நிமிர்ந்தபோது அவள் அங்கு இல்லை.
.............
தொடரும்
................


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar