Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உப்பாகக் கரைக்கும் கோனியம்மன்
 
பக்தி கதைகள்
உப்பாகக் கரைக்கும் கோனியம்மன்

உலகத்தில் எல்லோரும் துாக்கிச் சுமக்கும் வசன மூட்டை பல உண்டு. அதில் ஒன்று ‘‘அவன் சரியில்ல. ரொம்ப மோசம்...’’ ‘‘அந்தம்மா சரியில்ல. ரொம்ப மோசம்...’’ ‘‘அத்தை ரொம்ப மோசம்’’ ‘‘மாமா ரொம்ப மோசம்’’ ‘‘பாஸ் ரொம்ப மோசம்’’ ‘‘பியூன் ரொம்ப மோசம்’’ ‘‘டீச்சர் ரொம்ப மோசம்’’ இவர் மோசம்.. அவர் மோசம்... இப்படி எல்லா நாளும் எல்லாப் பொழுதும் யாரையாவது மோசம் என்று சொல்லுகிறோம்.
நம்மைப் பற்றி பிறரும் இப்படி சொல்லக் கூடும் என்ற நினைப்பு நமக்கு இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. நமக்கெல்லாம் ஒரே நினைப்பு நாம் 200 சதவீதம் சரி. நம்மிடம் தவறு இல்லை. எல்லாத் தப்பும், தவறும் மற்றவர்களிடம் மட்டும் என்பதே....
ஒரு நிமிடம் நிதானித்து மனசை நிலைப்படுத்தி நம்மையே கேட்டுக் கொள்வோம். மற்றவரிடம் மட்டும் தான் கரும்புள்ளிகள் உண்டா? அழுக்கு உண்டா? நாம் துாய்மையானவர்களா?
மனசாட்சியுடன் பதில் சொன்னால் – ‘‘இல்லை... நான் முழுக்க நல்ல ஆள் இல்லை’’ என்பதே பதிலாக இருக்க முடியும். ‘‘இல்லை... என்னிடமும் அழுக்கு உண்டு’’ என்பது தான் பதிலாக இருக்க முடியும். இந்த ஒப்புதல் வாக்குமூலம் தரும் மனசுதான் உன்னதமானது.  இந்த உண்மையை ஏற்கும் மனசுதான் உயர்வானது.
அப்படி நம்மை தட்டித் தட்டிச் செம்மையாக்கும் தலம் ஒன்றுண்டு. அங்கே போகும் போது முதுகில் பெரிய கோபமூட்டை, எரிச்சல் மூட்டை, வெறுப்பு மூட்டை சுமந்து போவோம். ‘‘எதை வேண்டுமானாலும் சுமந்து வா... உன்னைச் சீர்ப்படுத்திச் சந்தோஷம்,  நிம்மதி மூட்டையை தருவதற்காக நான் காத்திருக்கிறேன்..’’ என்று சொல்லாமல் சொல்லும் அம்மையாக இருக்கிறாள் கோயம்புத்துார் கோனியம்மன்.
கோனியம்மன் மகிமை பற்றிய அருளுரைகள் எனக்குக் கிடைத்துக் கொண்டே இருந்தன. அந்தச் சமயத்தில் என் மனசுக்குள் பொங்கிய தனிமை ஆழிப்பேரலை தந்த வலி அதிகம். அந்தச் சமயத்தில் என் மனசுக்குள் பொங்கிய அழுத்த எரிமலை தந்த வலி அதிகம். முள்வேலிக்குள் சிக்கிக் கொண்ட பரிதவிப்பு. சக்கர வியூகத்துக்குள் சிக்கிக் கொண்ட பரபரப்பு. பணிச்சூழ்நிலை தந்த இறுக்கம் என்பதாக வெளிச்சம் இல்லாத இருட்டுக் குகைக்குள் அலை பாய்ந்து கிடந்தேன்.
ஒருநாள் மாலை கோனியம்மன் கோயிலைக் கடந்தேன்... அம்மையைத் தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் ஏதுமின்றிக் கோயிலைத் தாண்டி நடந்தேன். பரபரப்பான வீதி. பரபரப்பான மனிதர்கள். ஆனால் நான் மட்டும் தனிமையில். முன்னாலோ, பின்னாலோ யாரே பேசிக் கொண்டார்கள் ‘‘நான்தான் உனக்காக் காத்திட்டிருக்கேன்... நீ பாட்டுக்கு நடந்து போயிட்டே இருக்கியே... திரும்பி வா... வந்து பாரு...’’ சுரீரென்று மின்னலாக வெட்டியது. அந்த வார்த்தைகள் மனிதர்கள் மூலமாக அம்மை எனக்கு அனுப்பிய அசரீரி என்பது புரிந்தது.
கோயிலில் அம்மை பேரழகியாகக் காத்திருந்தாள். உக்கிரமான பார்வையோடு இருப்பாள் அம்மை என்றார்கள். அக்கிரமம் அழிப்பதற்கு உக்கிரம் தேவைதானே? எட்டு கைகளில் எட்டுவிதமான ஆயுதம் ஏந்தி இருப்பாள் என்றார்கள்.  சரிதானே... தீமைக்கு ஏற்றபடியான ஆயுதம் கொண்டுதானே தீமைகளை அழிக்க முடியும்?
கோயம்புத்துாரின் காவல் தெய்வம் அம்மை. தேர்த் திருவிழா நடக்கிற ஒரே திருக்கோயிலும் இதுவே.  பூப்போட்டு அம்மையின் அருளாசியோடுதான் கொங்கு மக்கள் எந்தச் செயலையும் துவங்குவார்கள். எனது கோவை நாட்களும்,கோவை வருடங்களாக ஆனதும் அப்படித்தான். இப்போது கோனியம்மன்தான் என் சுமைதாங்கி. கோனியம்மன் தான் என் வழித்துணை. கோனியம்மன்தான் என் வாழ்க்கைத்துணை. கோனியம்மன்தான் என் சூரிய சந்திர நட்சத்திரங்களின் வெளிச்சம். கோனியம்மன்தான் என் எழுத்து, பேச்சு, சிந்தனை செயலாக்கம் என வெவ்வேறு வடிவமெடுக்கும் அம்மை.
ஒரு கையில் சூலம், ஒரு கையில் உடுக்கை, ஒரு கையில் வாள், ஒரு கையில் சங்கம், ஒரு கையில் கபாலம், ஒரு கையில் தீ, ஒரு கையில் சக்கரம், ஒரு கையில் மணி சிவனைப்போல இடது காதில் தோடு, வலது காதில் குண்டலம். வேப்பமரம், வில்வமரம், நாகலிங்கமரம், அரசமரம் புடை சூழ அம்மை அருள்பாலிக்கும் புனிதம். வார்த்தைக்கு, வர்ணனைக்கு அப்பாற்பட்டது.
‘‘வந்துட்டியா?’’
‘‘ம்..ம்... வந்தாச்சு...’’
‘‘கவலையை மற... சந்தோஷத்தில் பற...’’
‘‘அப்படியா சொல்றே? மனசுக்குள்ள இருக்கற பதைபதைப்பை என்ன பண்ண?’’
‘‘அதான் சொல்றேனே.. உப்பு வாங்கிப் போடு.. அது கரையறதுக்கு முன்னாடி உன் பதைபதைப்பு கரையும்....’’
அம்மை சொன்னாள். சொன்னது மாத்திரமல்ல. ஒவ்வொரு முறையும் என்னைச் சிதைக்கும் எதிரிகளை நொறுக்கி – என் மனசு வெளிச்சத்தைச் செதுக்கிக் கொடுத்தவளும் அம்மைதான். கொடுப்பவளும் அம்மைதான்.
ஒரு பெண்ணாக – ஒரு தாயாக – ஒரு காவல் அம்மையாக – மகளின் மனசு அவளுக்குத் தெரியுமே... ஒவ்வொரு பிரச்னைக்கும்  ஆயுதம் ஏந்தி அவள் வதம் செய்வதும், அதன்பின் அந்தப் பூரிப்பை நம் மனசுக்குள் நிறைப்பதும் – அம்மையின் மாயாஜாலம்.
நவராத்திரி விழாவில் கோனியம்மன் அலங்காரம் கற்பனைக்கு எட்டாத வகையில் எழில் பொங்குவதாக இருக்கும். அம்மைக்கான பூவும், பட்டும், வாசனாதி திரவியங்களும், பிரசாதப் பொருட்களும், குங்குமமுமாக அள்ளிக் கொடுக்கக் கொங்கு மக்கள் காத்திருப்பர். அம்மைக்குத் தருவதால் அவளின் அருளாகி கிடைக்கிறது என்பது அவர்களின் அனுபவம்.  
அம்மையின் ஒவ்வொரு ஆயுதமும்  மனதில் இருக்கும் அழுக்காறு அழிக்கும். கோபம் அழிக்கும். பொறாமை அழிக்கும். நம்மிடம் உள்ள ‘‘அவன் சரியில்லை. சுத்த மோசம்...’’ ‘‘அவள் சரியில்லை. சுத்த மோசம்..’’ என்பதான புகார்களை அழிக்கும்.
‘‘நீ பார்த்துக்கோம்மா அவர்களை.. உன் அருளுக்கும், கருணைக்கும் தகுதியான பிறவியாக என்னை மாற்றிக் கொள்கிறேன். என் அழுக்குகளைத் துவைத்துச் சலவை செய்து கொள்கிறேன்...’’  இப்படி சொல்லி விடுவோம் நாம். சகலத்தையும் அம்மையின் காலில் போட்டு விட்டு, நம்மை நாம் செதுக்கிக் கொள்ளத்தான் அவளது கைகளில் அத்தனை ஆயுதங்கள்.
கோனியம்மன் கோயிலில் நவக்கிரகங்கள் தம்பதி சமேதராகக் காட்சியளிப்பது சிறப்பு. வெளியே பரபரப்பான டவுன்ஹால். வண்டி வாகனங்களின் நெரிசல், ஓடிக் கொண்டிருக்கும் மக்கள். கோனியம்மன் கோயில் உள்ளே ஆழ்கடலின் அமைதி. மனசுக்கு இதமும் பதமும் தரும் தெய்வ சாந்நித்யம். நமக்குத்தான் புரிவதில்லை. வெளியே இருக்கும் பரபரப்பும் அம்மைதான். உள்ளே இருக்கும் நிதானமும் அம்மைதான்.
ஆங்காரமும், ஓங்காரமும் அம்மை. ரெளத்ரமும், பவித்ரமும் அம்மை. ஆண்மையும், பெண்மையும் அம்மை. வீரமும், தாய்மையும் அம்மை. உப்பும் அம்மை. உப்புக் கரைசலும் அம்மை. இனிப்பும் அம்மை. இனிப்புப் பாகும் அம்மை. வார்த்தையும் அம்மை. மவுனமும் அம்மை.
 அம்மை கொடுத்த தரிசனமும் அவளின் கரிசனத்தின் அடையாளம். தெம்பின் அடையாளம். தைரியத்தின் அடையாளம். தெளிவின் அடையாளம். இப்போதெல்லாம் அம்மை முன் கைகூப்பும் போது கவலை மூட்டை இருப்பதில்லை. நம்பிக்கை மூட்டைதான் சுமக்கிறேன்.
ஆக்ரோஷமானது
என் தாண்டவம்
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
எனக்கானது ருத்ர தாண்டவம்
உச்சம் ஏறுகிறது
ரெளத்திரத்தின் வெப்பம்
அவர்கள் தாக்கும் போதெல்லாம்
உருளுகின்றன
என் மண்டையோடுகள்
வெட்ட வெட்ட
முளைக்கும் மண்டையோடுகளுக்கு
என் முலைப்பாலைத் தருகிறேன்
உயிர்க்கின்றன மண்டையோடுகள்
நானே பிறப்பேன்
நானே இறப்பேன்
நானே சுமக்கிறேன்
என் கருவறையும்
என் கல்லறையும்
யாரும் எடுத்து வைக்க முடியாது
என் கருவறைக்குக் கல்
உடுக்கையும் சூலமும்
என் அலங்காரம்
ருத்ர தாண்டவம் என் நடை
தீக்கங்கு என் பூமாலை
நான் பேய்ச்சி
நான் தாய்ச்சியுமானவள்
முலைப்பாலின் கவிச்சியுடன்
நான் சுயம்புவானவள்
நான் காளியானவள்
நான் கவிதையானவள்...
என் இந்தக் கவிதை தந்தவள் – என் கோனியம்மன்தான்...
.............
தொடரும்
..................


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar