Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » குருவாக வந்தவள்
 
பக்தி கதைகள்
குருவாக வந்தவள்


“என் பேரு விஜயா. நான் உங்ககிட்டக் கொஞ்சம் மனசுவிட்டுப் பேசணும், சார்.”
ஏதோ ஒரு உந்துதலில் அவளின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். ஒரு வெள்ளிக்கிழமை மாலை நட்சத்திர ஓட்டலின் உணவகத்தில் சந்தித்தோம்.
விஜயா நல்ல உயரம். அதற்கேற்ற உடல் வாகு. நல்ல நிறம். நாற்பது வயதிருக்கும்.
“நீங்க எனக்கு ஒரு சத்தியம் செஞ்சி தரணும்யா.”
திடுக்கிட்டேன்.

 “நான் எவ்வளவு அதிர்ச்சியான விஷயங்களைச் சொன்னாலும் நீங்க நடுவுல எழுந்து போகக்கூடாது. நல்லா சாப்பிட்ட பிறகு தான் போகணும். உங்களுக்கு வாய்க்கு ருசியா சாப்பாடு வாங்கித்தரது என்னைப் பொருத்தமட்டுல ஒரு நேர்த்திக்கடன்னு வச்சிக்கங்கய்யா.”
நெகிழ்ந்து போய் சத்தியம் செய்தேன்.

 “மொத அதிர்ச்சி. நீங்க நெனைக்கற மாதிரி நான் நல்ல பொம்பளை கெடையாது.”
என்ன சொல்கிறாள் இவள்?

“நான் ஒரு  விலைமகள்.”
அதிர்ச்சியில் துள்ளி எழுந்தேன்.  கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து தண்ணீர் கொட்டியது.
“சத்தியம் செஞ்சிக் கொடுத்திருக்கீங்கய்யா.  இந்தக் கேடுகெட்டவளோட பேசப் பிடிக்கலேன்னா சும்மா உம்முன்னு உக்காந்திருங்க. சாப்பிடாமப் போகக் கூடாது.”
நான் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

“இப்போ அடுத்த அதிர்ச்சி. எனக்கு எய்ட்ஸ். எவ்வளவு நாள் உயிரோட இருப்பேன்னு  தெரியாது.”
அடுத்த சில நிமிடங்கள் அங்கே மவுனம்  நிலவியது.

“ஒரு நிமிஷம் வந்துடறேன்.”

சத்தியமாவது சர்க்கரைவள்ளி கிழங்காவது? இப்போது தப்பித்துச் செல்லாவிட்டால் பின்னால் பெரிய பிரச்னையாகிவிடும்.  வாசல் வரை வந்துவிட்டேன். உள்ளே நுழைந்து கொண்டிருந்த ஒரு பெண் என்னை வழி மறித்தாள்.
“வெட்கமாக இல்லை? உனக்கு உணவு வாங்கித் தருவதை நேர்த்திக்கடன் போல் செய்துகொண்டிருக்கிறாள். அவளது அன்பை உதாசீனப்படுத்திவிட்டு வருகிறாயே! சத்தியத்தை மீறலாமா?”
“தாயே! அவள்...ஒரு மாதிரி..’’

“எனக்கு தெரியும். ஆனால் அவள் உன்னைவிட நுாறு மடங்கு நல்லவள். உள்ளே போ. அவளுடன் பேசு. ஒரு காரணமாகத்தான் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறேன். எதைக் கேட்டாலும் மறுக்காதே”
அன்னையை வணங்கிவிட்டு விஜயாவிடம் சென்றேன்.
“சொல்லும்மா.”
“நான் பாவ வாழ்க்கை வாழ்ந்தவள்.”
“பச்சைப்புடவைக்காரியின் சன்னதியில் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும்.”

“நான் விலைமகளா வாழ்ந்ததை பாவம்னு நெனைக்கல. போன ஜென்மத்துல பெரிய அளவுல பாவம் செஞ்சிருக்கணும். அதனாலதான் ஒரு ஏமாத்துக்காரனோட காதல் வலையில விழுந்தேன். அவனுக்கு வேண்டியது கெடச்சவுடனே என்னை இந்த நரகத்துல தள்ளிட்டான். வலி, வேதனை, அவமானம், பசின்னு ஒரு கொடுமையான வாழ்க்கை வாழ்ந்துட்டேன். உன் உடம்ப வித்துத்தான் வயித்தக் கழுவ முடியும்ங்கறமாதிரி கேவலமான வாழ்க்கை.”
என்னால் முடிந்தவரை நல்ல வார்த்தை சொன்னேன்.

கிளம்பும்போது விஜயா உருக்கமாகப் பேசினாள்.
“எனக்கு ஒரு வரம் வேணுங்கய்யா. மாட்டேன்னு மட்டும் சொல்லிதீங்க.”
அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“என் முடிவு நெருங்கிருச்சி. என் வாழ்க்கையோட கடைசி நிமிடங்கள்ல உங்கள பாக்க ஆசைப்படறேன். அந்த சமயத்துல  ஊர்ல இருந்தா வருவீங்களா?”
பச்சைப்புடவைக்காரி ஆணையிட்டுவிட்டாளே!  
“நிச்சயமா.”
என் வலது கையை எடுத்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள். பின் கிளம்பிச் சென்றாள்.

ஒரு மாதம் கழித்து ஒரு நாள். நான் மீனாட்சி கோயிலுக்குக் கிளம்ப யோசித்த நேரத்தில் இடியாக வந்து இறங்கியது அந்தச் செய்தி.  மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாளாம் விஜயா. ஓடினேன்.
விஜயாவின் முகத்தில் மரணத்தின் சாயல்  தெரிந்தது. தனியாக இருந்தாள். துணைக்கு யாருமில்லை. அருகில் அமர்ந்து அவளது கையைப் பற்றினேன். “நான் ஒரு எய்ட்ஸ் நோயாளி. என்னை தொடாதீங்க.”
“தொடறது மூலமா எய்ட்ஸ் பரவாது.”
“ஏதாவது சொல்லுங்கய்யா.”
“என்னம்மா சொல்றது? நான் முன்னபின்னச் செத்திருந்தாத்தானே சாவப்பத்தி சொல்ல முடியும்? ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயமா தெரியும்மா.... அவங்கள மன்னிச்சிரும்மா.”
“யாரையா?”
“உன்னக் காதலிச்சிக் கைவிட்டவன், இந்தக் கேடுகெட்ட தொழில்ல உன்ன தள்ளிவிட்டவங்கள, உனக்கு வலியையும் வேதனையையும் கொடுத்தவங்கள, உன்னைப் பட்டினி போட்டவங்கள, உனக்கு இந்த மரணத்தை கொடுத்த உன் வாடிக்கையாளர்கள –  ஒருத்தர் பாக்கியில்லாம மனப்பூர்வமா மன்னிச்சிரும்மா.”
“அப்படி மன்னிச்சிட்டா நான் செஞ்சது தப்பில்லன்னு ஆயிருமாய்யா?”
“அது தெரியாதும்மா. ஆனா மனசுல வன்மம் இருந்தா அடுத்த நிலைக்குப் போகறது கஷ்டமா இருக்கும்.. .”
விஜயாவின் புன்னகையில் விரக்திதான் மிஞ்சியிருந்தது.
“அவங்கள மன்னிக்க நான் யாருங்கய்யா? ஒரு ஆளை மன்னிக்கறதுக்கு நாம அவரவிட ஒரு படியாவது மேல இருக்கணும், இல்லையா?  நான் உயர்ந்தவளும் இல்ல. ஒழுக்கமானவளும் இல்ல. நான் செய்ய முடிஞ்சதெல்லாம் என்னை நானே மன்னிச்சிக்கறதுதான்.  எனக்கு ஒத்துவராத குணம் கொண்ட ஒரு ஆளை முட்டாள்தனமாக் காதலிச்சதுக்கு என்னை நானே மன்னிச்சிக்கலாம். கீழ்த்தரமான மனிதர்களோட கீழ்த்தரமான ஆசைகளை நிறைவேத்தினா தான் உனக்குச் சாப்பாடுன்னு இந்த சமூகம் சொன்னபோது பட்டினி கிடந்து சாகாம இருந்ததுக்காக என்னை நானே மன்னிச்சிக்கலாம்.

“நான் விலைமகள்தான், ஒத்துக்கறேன். ஆனா எனக்கும் ஞானிக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல. ஞானி நிரந்தரமான சந்தோஷத்தை தேடுறார். விலைமாதுவும் அதையேதான் தேடிக்கிட்டு இருக்கா. பாதையில் தான் வித்தியாசம். நோக்கம் ஒண்ணுதான். இதோ இப்போ சாகும்போது ஒண்ணு நல்லாப் புரியுது. என் வழி சரியான வழியில்லை. என் வழியில போய் நிரந்தர சந்தோஷத்தைத் தேட முடியாது. ஞானி சாகும்போது அவனுக்கும் இதே உணர்வுதான் இருக்கும். தன் வழி சரியில்லைன்னு அவனும் உணர்வான். அப்படி உணர்ந்தா தான் அவன் உண்மை ஞானி. சந்தோஷத்துக்கு வழியே இல்ல.  சந்தோஷம்தான் வழியே.
“நிரந்தரமான சந்தோஷங்கறது பச்சைப்புடவைக்காரியோட திருவடிதான். அத அடைய என்ன வழி? பக்தி? சரணாகதி? ஞானம்? பூஜை? தியானம்? கடமையச் செய்யறது? எல்லாமே தப்பு. அவள் திருவடி அடைய சிறந்த வழி அவளுடைய திருவடிகள்தான். வேற வழியே கிடையாது.”
விஜயாவிற்கு விக்கல் எடுத்தது. தண்ணீரை எடுத்து வாயில் கொஞ்சம் ஊற்றினேன்.
போதும் என சைகை காட்டினாள்.
அவள் வலது கையை எடுத்து என் கண்களில் ஒற்றிக்கொண்டேன். என்னையே பார்த்துக்கொண்டிருந்தவளின் பார்வை அப்படியே நிலைகுத்திவிட்டது.  நர்ஸ் அவளது நாடியைப் பிடித்துப் பார்த்து உதட்டைப் பிதுக்கினாள்.
“ டாக்டர் உங்களப் பாக்கணும்னு சொன்னாங்க.”  என்று இன்னொரு நர்ஸ் தெரிவித்தாள். அவளின் பின்னால் ஓடினேன்.
 “பெருமையாக இருக்கிறதப்பா. யாராக இருந்தாலும் சரியான நேரத்தில் சரியான வார்த்தைகளைப் பேசி ஆறுதலையும் ஞானத்தையும் உன்னால் தர முடிகிறதே!”
பேசியது பிறவி நோயைப் போக்க வல்ல மகா மருத்துவச்சி என்பது தெரிந்தது. காலில் விழுந்து வணங்கினேன்.
 “என்னை ஏன் கேலி செய்கிறீர்கள் தாயே?”
“என்னப்பா சொல்கிறாய்?”
“நீங்கள் என்னிடம் அடிக்கடி வந்து பேசுகிறீர்கள். துன்பப்படுபவர்களிடம் என்னை அனுப்பி பேச வைக்கிறீர்கள். ஒரு கட்டத்தில் நான் நினைத்தால் யாருக்கும் ஞானத்தையும், ஆறுதலையும் தரமுடியும் என்று என் மனதிற்குள் அகம்பாவம் வந்திருக்கவேண்டும். என் அகந்தையை அழிக்க  விலைமகளை எனக்கு குருவாக அனுப்பி வைத்து அவள் மூலம் விலைமதிக்கமுடியாத பாடத்தைக் கற்றுக் கொடுத்தீர்கள். அவர்களை மன்னிக்க நான் யார் என்று விஜயா கேட்டபோது இதுவரை புரியாத பல விஷயங்கள் புரிந்தன”

அன்னை கலகலவென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. அவளை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தேன். அடுத்த கணம் அவள் அங்கு இல்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar