|
திருப்பதி அருகிலுள்ள மங்களாபுரத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். பெயர் கங்கம்மா. சுண்டல் விற்கும் அவளுக்கு ஆதரவு யாருமில்லை. கணவர், பிள்ளைகள் இறந்து விட்டனர். அந்தக் காலத்தில் காட்டுப் பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து திருப்பதிக்கு செல்வர். அப்படி ஒருநாள் பக்தர்கள் மலையேறிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் ‘‘ஐயா! நீங்கள் மலைக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?’’ என ஏதும் அறியாதவளாக கேட்டாள். அவளது அறியாமை கண்ட அவர்கள் சிரித்தனர். ‘‘என்ன பாட்டி! கேட்கிறீங்க? திருமலை அடிவாரத்தில் இப்படி இருக்கியே! மலை மேல கோயில் இருப்பது தெரியாதா!’’ என கோபித்தனர். ஆனால் ஒருவர் இரக்கத்துடன், ‘‘ பாட்டி! மலை மீது பெருமாள் இருக்கிறார். அவரை தரிசித்தால் பிறவி நோய் தீரும். ‘கோவிந்தா’ சொல்லி அவனைக் கும்பிட்டா உன் பாவமெல்லாம் தீரும்,’’ என எடுத்துச் சொன்னார். இதைக் கேட்டாளோ இல்லையோ! சுண்டல் கூடையோடு மலையேறத் தொடங்கினாள். ஏழுமலையப்பனைக் கண்குளிரக் கண்டாள். ‘‘அப்பனே! கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே! அந்த பக்தர் சொன்னாரே! எனக்கும் பிறவி வேண்டாமையா’’ என மனம் உருகினாள். அவளுடன் வந்த பக்தர்கள் மலையை விட்டுக் கிளம்பினர். அவள் மட்டும் தங்கிவிட்டாள். அப்போது கிழவர் ஒருவர் வந்தார். ‘‘அம்மா! சுண்டல் கொடு’’ என்று கேட்டார். அவளும் கொடுத்தாள். சாப்பிட்டு விட்டு நடக்க தொடங்கினார். ‘‘ஐயா! சுண்டலுக்கு காசு கொடுக்கலையே’’ என்றாள் பாட்டி. ‘‘அம்மா! நான் ஒரு கடன்காரன், கல்யாணத்துக்கு கடன் வாங்கிவிட்டு, வருமானத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். சுண்டலுக்கு கூட பணமில்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேனே!’’ என்றார் பணிவாக. ‘‘சரி, நாளைக்கு காசு தாங்க,’’ என மூதாட்டி சம்மதித்தாள். தன் முன் நிற்பவர் உலகிற்கே படியளக்கும் ஏழுமலையான் என்பதை பாமரப் பெண் கங்கம்மா எப்படி அறிவாள்! மறுநாள் சொன்னபடி கிழவர் வரவில்லையே. ‘இப்படி ஏமாற்றி விட்டாரே’ என மனதிற்குள் பொருமினாள். நாளடைவில் அவள் காலம் முடிந்தது. ஒருநாள் இறந்தாள். சுண்டலுக்கு தர வேண்டிய கடனுக்கு பதிலாக, மேலான வைகுண்ட பதவியைக் கொடுத்தார் ஏழுமலையான்.
|
|
|
|