|
அத்தி விருட்சம் மூலம் எம்பெருமானின் அருட்சொரூபம் அப்படியே வடிக்கப்பட்டது! ஒன்றே இரண்டாக இருத்தல் போல் அந்த மரச்சிலை நின்ற நிலையிலும், படுத்த நிலையிலும் கச்சிதமாக பொருந்தியது. ‘ஒன்பது அடி உயரம், மூலிகைச் சாந்து வண்ணம், திவ்ய லட்சணம்’ என்று எம்பெருமான் விக்ரஹம் உறங்குவது போல காட்சியளித்தது! இவ்வேளையில் நெருப்பில் தோன்றிய உற்ஸவரான பஞ்சலோகத் திருமேனியில் கன்னத்தில் தீச்சூட்டின் சிவப்பு ஒரு தடயம் போல காட்சியளித்தது. அதைக் கண்ட பிரம்மாவுக்கு வருத்தம் ஏற்பட்டது. ‘‘ஐயனே! தாங்கள் உவந்து அளித்த மூர்த்தத்தில் இது என்ன தங்கள் திருமுகத்தில் தீத்தழும்பு தடயம்?’’ என தயங்கியபடியே கேட்டான். எம்பெருமானும் சிரித்த வண்ணம் பதில் கூறலானான். ‘‘பிரம்மா உன் யாகத்தீதான் அதற்கு காரணம்!’’ ‘‘எம்பெருமானே... அந்த தீயை படைத்ததே தாங்கள் தான்! அப்படியிருக்க அந்த தீயா தங்களைச் சுட்டது?’’ ‘‘இது என்ன கேள்வி? நாம் விலை கொடுத்து வாங்கிய கத்தி என்பதற்காக, அதை நம் வயிற்றில் குத்திக் கிழிக்க முயற்சித்தால் குத்தாமல் போகுமா?’’ ‘‘பெருமானே... இது என்ன பதில்? சர்வமும் நீர்தான்... புவனம் பதினான்கு முதல், புல், பூண்டு வரை எல்லாமே உம் படைப்பு. அதில் தீயும் ஒன்று.. அந்த தீக்கே தீக்காயமென்றால் எப்படி?’’ ‘‘விதியைப் படைத்தவனே மீறலாமா? நெருப்பென்றால் சுட வேண்டும், நீரென்றால் பள்ளம் கண்ட இடத்தே பாய வேண்டும், காற்றென்றால் புலனாகாதபடி எங்கும் நிரம்பிக் கிடக்க வேண்டும். அதேபோல் நான் யாக நெருப்பில் உதித்த சமயத்தில் உச்சபட்ச உஷ்ணத்தை நான் விழுங்கித் தணிக்க முயன்றேன். அவ்வேளை இவ்வாறாகி விட்டது!’’ ‘‘அப்படியானானல் இந்த உற்ஸவ மூர்த்தத்தை காண்பவர்க்கும் தரிசிப்பவர்க்கும், நீங்கள் யாக நெருப்பில் தோன்றிய சம்பவம் புலனாகக் கூடும். அப்படி புலனாக வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமா?’’ ‘‘ஆம்! அதைக் கண்டு பிரம்மனாகிய உன் நினைவு வர வேண்டும். எனக்கான வணக்கம் உனக்கானதாகவும் ஆகிட வேண்டும், அப்படியே விதித்தவனே விதிப்படி நடந்தான் என்னும் செய்தியும், அப்படி நடந்தாலே இயக்கம் என்பது சீர்மையானதாக இருந்திடும் என்பதும் புலனாகும்.’’ ‘‘என்ன ஒரு துார நோக்கு...! எம்பெருமானே, நான் இதைக்கேட்டு வியப்பது மட்டுமல்ல, என் படைப்புத் தொழிலில் நானும் விதிப்படி இயங்கிடும் நடுவுநிலைக்கு என்னை நிலைப்படுத்த முடிவு செய்து விட்டேன்’’ ‘‘அதுவே சிறப்பானது... அவரவரும் அவரவர் தன்மையறிந்தும், பிறர் தன்மை புரிந்தும் செயல்படும் போதுதான் வாழ்வு ரசனைக்குரியதாக ஆகிறது’’ – என்று கூறிய எம்பெருமான் அத்தி மரத்திருமேனி கண்டு புன்னகைத்தான். ‘‘எம்பெருமானே... இந்த விக்ரகம் கண்டு தாங்கள் சிரித்த காரணம் அறியலாமா?’’ ‘‘இதுதான் மூலமாக கோயில் கொள்ளப் போகிறதா?’’ ‘‘ஆம்.. ஒன்று நீங்கள் உகந்த உலோக மேனி.... இதுவோ தேவர்கள் உகந்த அத்தித் திருமேனி... தாங்கள் உகந்தது உற்ஸவ மூர்த்தமாகவும், தேவர்கள் உகந்த இந்த அத்தித் திருமேனி மூல மூர்த்தமாகவும் திகழ வேண்டும் என்பது என் விருப்பம்..’’ ‘‘ஆனால் என் விருப்பமே வேறு.. நான் அதைக் கூறட்டுமா?’’ ‘‘எம்பெருமானே.. கட்டளையிட வேண்டிய தாங்கள் இப்படியா கனிவாய் கேட்பீர்கள்...?’’ ‘‘சர்வத்திலும் நானிருக்கலாம். அப்படிப்பட்ட நான் அந்த சர்வங்களில் ஒன்றாக ஆகிடும் போது எனக்கும் ஒரு வழிமுறை உருவாகிவிடுகிறது. அந்த வழிமுறைப்படி நடப்பதே நலம் பயக்கும்.’’ ‘‘தங்கள் விருப்பத்தை முதலில் கூறுங்கள்...’’ ‘‘இங்கே நீ எனக்கு கோயில் எழுப்பக் காரணம்?’’ ‘‘யாம் பெற்ற இன்பத்தை வையமும் வரும் காலத்தில் பெற வேண்டும் என்பதால்..’’ ‘‘இங்கே நீ பெற்ற இன்பம் எது?’’ ‘‘அகந்தையால் புரிந்த தவறுகள் சீராகின! பெரும் வரசித்திகளுக்கு நான் மட்டுமின்றி, தேவாதி தேவர்களும் ஆளாயினர்! உம்மை கிருஷ்ணாவதாரத்தில் கோவிந்த ராஜனாக கண்டுள்ளோம். இங்கோ வரத ராஜனாக காண்கிறோம். இந்த வரதராஜனின் வரங்கள் வேண்டுவோர்க்கெல்லாம் எப்போதும் கிட்ட வேண்டும் என்று எண்ணியே இங்கே கோயில் எழுப்ப விரும்புகிறேன்’’ ‘‘அப்படியானால் நான் எப்போதும் குளிர்ந்த மன நிலையில் இருக்க வேண்டியது அவசியமல்லவா?’’ ‘‘எம்பெருமானே! குளிரும், சூடும் குணங்கள்! தாங்களே நிர்குணன்! அப்படியிருக்க குளிர்ந்த மனநிலை என்று தாங்கள் குறிப்பிடுவது விசித்திரமாக உள்ளது எனக்கு..’’ ‘‘நிர்குணனே பூமியில் கோயில் கொள்ளும் போது சில குணப்பாடுகளுக்கும் ஆட்படுகிறேன். அவ்வகையில் இங்கே இந்த அத்தி கிரியில் நான் குளிர்ந்த தன்மைக்குள் நிரந்தரமாய் இருந்து வேண்டுவோர் தமக்கும் குளிர்வைத் தர விரும்புகிறேன்.’’ ‘‘அப்படியாயின்...?’’ ‘‘அப்படியாயின் எனது இந்த அத்திமர சிலாரூபம் இத்தலத்தில் எல்லோர் பார்வையிலும் படும்படியாக சன்னதியில் நிற்கவோ கிடக்கவோ தேவையில்லை,’’ ‘‘பின் எப்படி?’’ ‘‘நான் இங்கிருக்கும் திருக்குளத்திற்குள் உள்ளடங்கிக் கிடக்க விரும்புகிறேன்!’’ ‘‘பெருமானே... இது என் விசித்திரமான விருப்பம்! நீரில் பிறருக்கு புலனாகாதபடி கிடக்க விரும்புவதன் நோக்கம்?’’ ‘‘நான் முன்பே குறிப்பிட்டதுபோல் குளிர்ந்து கிடந்து, குளிர்வைத் தர..’’ ‘‘அப்படியாயின் எப்படி வழிபாடு புரிவது?’’ ‘‘அவைகளெல்லாம் காலத்தால் குறைவின்றி நிகழ்ந்திடும். நான் விரும்பும்போது குளத்தில் இருந்து வெளிப்படுவேன். பின் சில காலம் பிறர் பூஜிக்கக் கிடப்பேன், மீண்டும் ஜலவாசம் கொள்வேன்’’ ‘‘மற்ற நாட்களில்?’’ ‘‘கல்லிலோ சுதையாலோ உருக்கொண்டு காட்சி தந்தால் வேண்டாம் என்பாயா?’’ ‘‘புரிகிறது, ஓன்றுக்கு மூன்றாக அதாவது ‘மூலவம், உற்ஸவம் குளஜலம்’ என்பதாக.. அப்படித்தானே?’’ ‘‘அப்படியே தான்...’’ ‘‘அதனாலேயே அத்திவிருட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளதோ?’’ ‘‘ஆம்.. அத்தி மண்ணில் புதைந்தால் வைரம்... மண்மேல் கிடந்தால் வரம்!’’ ‘‘ஆஹா.. அற்புதம்! அற்புதம்! வைரம், வரம் இரண்டுமே காலத்தை விஞ்சியவை!’’ ‘‘ஆம்.. காஞ்சி எனும் இந்த அத்திகிரியும் காலத்தை விஞ்சி நிற்கப் போகிறது. என் அருள் கருணை என்னை அறியப் போகிறவர்க்கெல்லாமும் கிட்டப் போகிறது.’’ ‘‘அவர்களில் அசுரர்கள் இருந்து அலட்சியம் செய்தால்?’’ ‘‘என் வரையில் இரண்டும் ஒன்றே!’’ எம்பெருமான் பிரம்மனிடம் நிகழ்த்திய இந்த வாதப்பிரதிவாதங்கள் வரலாறாகியது. அத்திகிரி கோயிலும் எழும்பி நின்றிட அத்திச்சொரூபமும் அனந்த சரசில் வெள்ளிப் பேழைக்குள் மூழ்கிய நிலையில் கோயில் கொண்டது. அது வெளிப்படும் நாளை அவனே தீர்மானம் செய்யலானான். இப்படி உள்ளடக்கமாய் எம்பெருமான் கிடப்பதை தன் ஞானத்தால் உணர்ந்தே வேதாந்த தேசிகனும் காலத்தால் இத்திருக்குளம் பெரிதும் சிந்திக்கப்படும் ஒன்றாகிடும் என்றார். காலத்தால் மிலேச்ச படையெடுப்பின் போது காஞ்சி பேரருளாளன் ஆலயமும் சில சோதனைகளை சந்திக்க நேர்ந்தது... அதில் தொடங்குகிறது அத்திவரதனின் வெளிப்பாடு! |
|
|
|