|
ஒருமுறை நாரதர் வீணை இசைத்தபடி பூமிக்கு வந்தார். அவரை வேடிக்கை பார்த்த மக்கள், ‘‘பார்த்தாயா! இந்த ஆளுக்கு நாரதர் வேடம் கச்சிதமா இருக்கு. நாடகத்தில் நடிக்க போறார் போலிருக்கு’’ என தங்களுக்குள் பேசினர். அவரும் மரத்தடியில் ஓய்வெடுத்தார். அப்போது அவரைக் கண்ட பண்ணையார் ஒருவர், ‘‘சுவாமி! தங்களின் தரிசனம் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். பாற்கடலுக்கும், வைகுண்டத்துக்கும் நினைத்தவுடன் சென்று பெருமாளை தரிசிக்க உங்களால் முடியும். ஆனால் மனிதனான நான் எப்போது பெருமாளை தரிசிப்பேன்’’ எனக் கேட்டார். அந்த நேரத்தில் இரண்டு துறவிகள், கூலியாள் ஒருவரும் அங்கு வந்தனர். அவர்களும் நாரதரின் பதிலை எதிர்பார்த்து நின்றனர். ‘‘நீங்கள் அனைவரும் என்னை உண்மையான நாரதர் என்றே நம்புகிறீர்கள் இல்லையா?’’ ஒரே குரலில் ‘ஆமாம் சுவாமி’’ என்றனர். ‘‘நீங்கள் வைகுண்டம் சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும் என நானும் விரும்புகிறேன். உங்களின் எண்ணத்தை பெருமாளிடம் கேட்டு வருகிறேன். அதுவரை பொறுமையுடன் இருங்கள். வரும் பவுர்ணமியன்று இரவில் இந்த ஊரிலுள்ள பெருமாள் கோயிலுக்கு வாருங்கள். பதில் சொல்கிறேன்,’’ என சொல்லி மறைந்தார். பூலோகவாசிகளின் எண்ணத்தை பெருமாளிடம் சொன்னார் நாரதர். ‘‘நான் சொல்வதை அப்படியே அவர்களிடம் சொல். ‘வைகுண்டத்திற்கு நான் சென்ற போது ஒரு யானையை ஊசியின் காதில் பெருமாள் நுழைத்துக் கொண்டிருந்தார்’ என்று சொல். இதை யார் நம்புகிறார்களோ அவர்களால் மட்டுமே வைகுண்டத்தை அடைய முடியும்’’ என்றார் பெருமாள். பவுர்ணமியன்று கோயிலில் அவர்கள் காத்திருக்க நாரதரும் வந்தார். ‘‘பக்தர்களே! நான் வைகுண்டத்தில் பெருமாளை சந்தித்த போது அவர் ஒரு யானையை ஊசியின் காதிற்குள் நுழைத்துக் கொண்டிருந்தார். உங்களின் கேள்விக்கு அவர் இன்னும் பதில் சொல்லவில்லை’’ என்றார். பணியாளரைத் தவிர மற்றவர்கள் வாய்விட்டு சிரித்தனர். ‘‘ஊசிக்குள் நுாலை நுழைக்கவே படாதபாடு பட வேண்டுமே! யானையை எப்படி நுழைக்க முடியும்... நம்ப முடியவில்லையே’’ எனக் கேட்டனர். பணியாளர் மட்டும், ‘‘நாரதரே! அபார சக்தி கொண்ட பெருமாள் நினைத்தால் ஊசிக்குள் யானையை என்ன! இந்த பூமியைக் கூட நுழைப்பார்’’ என்று சொல்லி பரவசப்பட்டான். ‘‘பார்த்தீர்களா! பெருமாளால் எல்லாம் முடியும் என நம்புபவனே பக்தன். இவருக்கு தரிசனம் கிடைப்பது உறுதி’’ என சொல்லி மறைந்தார்.
|
|
|
|