|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » நேர் செய்யப்பட்ட கர்மக்கணக்கு |
|
பக்தி கதைகள்
|
|
“என் பொண்ணுக்கு முதுகுத் தண்டுல சிக்கலான ஆப்ரேஷன் செய்யணும்னு சொல்லிட்டாங்க. எனக்கு பயமா இருக்கு. பச்சைப்புடவைக்காரிகிட்ட “என் பொண்ணக் காப்பாத்து”ன்னு கேட்கக்கூட தயக்கமா இருக்கு. எனக்காக வேண்டிக்கங்க சார்’’ தழுதழுத்த குரலில் பேசியவர் நண்பரான மருத்துவர் நாதன். “என்னைக்கு ஆப்ரேஷன்?” “வெள்ளிக்கிழமை” ஆறுதலாக பேசி விட்டு இணைப்பைத் துண்டித்தேன். மனம் பதைபதைத்தது. நாதன் வித்தியாசமான மருத்துவர். பெரிய கார், வீடு வாங்க வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும் என்ற சராசரி ஆசைகள் இல்லாதவர். ஓய்வு நேரத்தையும், சேமிப்பையும் ஏழைக் குழந்தைகளின் சிகிச்சைக்காகச் செலவிடும் நல்ல மனிதர். இரவு உணவு வேண்டாம் என்று சொல்லி விட்டு மனம் போன போக்கில் நடந்தேன். சாலையில் என்னை இடிப்பதுபோல் ஒரு ஷேர் ஆட்டோ வந்து நின்றது. “மீனாட்சி கோயிலுக்கு வரீறீங்களா?” “இந்த நேரத்திலா? நடை சாத்தியிருப்பாங்களே?” “நடை சாத்தினால் என்ன? நான் இருக்கிறேனே!” பின்னால் இருந்த பெண் பயணியின் குரல் கேட்டு யாரென்று தெரிந்துகொண்டேன். விழுந்து வணங்கினேன். “நண்பனுக்காக கவலைப்படுகிறாயோ?” “ எனக்காக கவலைப்படுகிறேன், தாயே! அடுத்தவர்களுக்கு எப்படி உதவுவது என எந்நேரமும் சிந்திக்கும் அவருக்கே இந்தக் கதியென்றால் என்னைப் போல் சுயநலவாதிகளின் நிலையை யோசித்தேன், கலங்கிவிட்டேன், தாயே.” “பல முறை சொல்லிவிட்டேன். கர்மக்கணக்கு நுட்பமானது. உன் அறிவுக்கு எட்டாது.” நான் அவள் கொத்தடிமைதானே! எதையும் கேட்கும் உரிமை எனக்கு இல்லை. அவளாகச் சொன்னால் சொல்லட்டும் “மனம் நிறைய அன்பு இருந்தால் எந்தக் கர்மக்கணக்கையும் அது நேர் செய்துவிடும்.” “எப்படி தாயே?” “உன் நண்பனுக்கு என்ன நடக்கப்போகிறது என காட்டுகிறேன் பார்.” வியாழக்கிழமை மாலை நேரம். நாதன் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின்முன் அமர்ந்திருந்தார். மனைவியும் மகளும் வெளியில் காத்திருந்தனர். “டாக்டர் நாதன்...என்னால எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது. உள்ளே பார்க்கும்போதுதான் நிலைமை எப்படின்னு உறுதியா சொல்ல முடியும்.” சோர்வுடன் மருத்துவமனையின் அலுவலக நிர்வாகியைப் பார்க்கச் சென்றார் நாதன். “எங்க டாக்டர்கிட்ட அப்பாய்ண்ட்மெண்ட் வாங்க மூணு மாசம் காத்திருக்கணும். நீங்க ஒரு டாக்டர்ங்கறதுனால உங்களுக்கு உடனே அப்பாயிண்ட்மெண்ட் கெடச்சது.” “தேங்க்ஸ்.” “ஆப்ரேஷனுக்கு ஏறக்குறைய எட்டு லட்சம் ரூபாய் செலவாகும். உங்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கு. அதனால கவலைப்படவேண்டாம்.” காரில் வீடு திரும்பும்போது யாருமே பேசவில்லை. இரவு நேரம். நாதனின் மகள் துாங்கச் சென்றுவிட்டாள். நாதன் பித்துப் பிடித்தவரைப் போல அமர்ந்திருந்தார். அவர் மனைவி அந்த அறையில் இருந்த பச்சைப்புடவைக்காரியின் படத்தைப் பார்த்தபடி அழுது கொண்டிருந்தாள். துள்ளிக்கொண்டு எழுந்தார் நாதன். “கீதா... இந்த ஆப்ரேஷனுக்கு இன்சூரன்ஸ் போக நாம ஒரு லட்சம் ரூபா கட்டவேண்டியிருக்கும். அதுபோக நம்ம பேங்க் அக்கவுண்ட்ல எவ்வளவு பணம் இருக்குன்னுப் பாத்துச் சொல்லேன்.” கீதா கணினியில் பார்த்துவிட்டுச் சொன்னாள். “அறுபதாயிரம் தேறும். எதுக்கு?” “நாம ரெண்டு பேரும் டாக்டரா இருக்கோம். நல்லா சம்பாதிக்கறோம். இன்சூரன்ஸ் இருக்கு. மொத்தப்பணத்தையும் அவங்க கொடுத்துருவாங்க. நம்ம செல்வாக்கைப் பயன்படுத்தி சர்ஜனோட அப்பாயிண்ட்மெண்டையும் உடனே வாங்கிட்டோம். நம்ம பொண்ணுக்கு இருக்கிற வியாதி ஒரு ஏழையோட பொண்ணுக்கு வந்தா பாவம் எவ்வளவு கஷ்டப்படுவான்?” “அதுக்கு நீங்க என்ன செய்யப் போறீங்க?” “அந்த மருத்துவமனையில ஏழைகளுக்கு சிகிச்சை கொடுக்க அறக்கட்டளை நடத்தறாங்களாம். ஆபீஸ்ல போர்ட் பாத்தேன். அந்த அறக்கட்டளைக்கு அம்பதாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தா என்ன? இப்போதைக்கு இவ்வளவுதான் முடியும். அப்புறம் முடிஞ்சத தரோம்னு சொல்லுவோம்.” “அது வந்து.. .. “ “எல்லாப் பணத்தையும் ஒரே கணக்குக்கு மாத்தி அம்பதாயிரம் ரூபாய்க்கு செக் எழுதிக்கொடு. இப்பவே போய் கொடுத்துட்டு வர்றேன்.” கீதா மணியைப் பார்த்தாள். இரவு ஒன்பது மணி. சொன்னதைச் செய்துவிட்டார் நாதன். வெள்ளிக்கிழமை. ஒரு மணி நேரத்தில் முடிய வேண்டிய அறுவை சிகிச்சை இழுத்துக்கொண்டே போனது நாதனும் மனைவியும் உறைந்து போயிருந்தனர். மூன்று மணி நேரம் கழித்து அறுவை சிகிச்சை நிபுணர் வெளியே வந்தார். “வாழ்த்துக்கள் நாதன். எல்லாம் நல்லபடிய முடிஞ்சிருச்சி. நடுவுல ஒரு இடத்துல ரொம்பவே சிக்கலாயிருச்சி. என்ன செய்யறதுன்னே தெரியல. யாரோ என் கையப் பிடிச்சி இப்படித்தான் செய்யணும்னு சொல்லிக்கொடுத்த மாதிரி இருந்தது. உங்க மக நுாறு வயசு நல்லா இருப்பா.” நாதன் அவரை அணைத்துக்கொண்டு அழுதார். நாதனும், கீதாவும் வெளியில் இருந்தபடி கண்ணாடி வழியாக தங்கள் மகளைப் பார்த்தனர். அவர் மயக்க நிலையில் இருந்தாள். அந்த மருத்துவமனையின் அலுவலக நிர்வாகி நாதனைத் தேடி வந்தார். “சாரி டாக்டர் நாதன். உங்க இன்சூரன்ஸ் கம்பெனில ஒரு லட்சம் ரூபாய்தான் தரமுடியும்னு சொல்லிட்டாங்க. பாக்கி ஏழேகால் லட்சத்த நீங்க இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள கட்டணும்.” “அவ்வளவு பணத்துக்கு எங்க போகறது கீதா?” நிர்வாகி சென்றவுடன் மனைவியிடம் கேட்டார் நாதன். “என் நகையை அடகு வைக்கலாம். இல்லை வித்துடலாம். ஆனா இன்னிக்குச் சாயங்காலத்துக்குள்ள...வேற யார்கிட்ட அவ்வளவு பணத்தக் கேக்க முடியும்’’ சாப்பிடக்கூடத் தோன்றாமல் இருவரும் அங்கேயே அமர்ந்திருந்தனர். ஒரு பெண் அவர்களை நோக்கி வந்தாள். கூட வந்த மருத்துவமனை ஊழியர் அவளிடம் “இவர்தாம்மா டாக்டர் நாதன்” என்றார். நாதனின் காலில் அந்தப் பெண் விழுந்தாள். திடுக்கிட்டு எழுந்தார். “ஐயா... எங்க ஒரே புள்ளைக்கு ஆப்ரேஷன் செய்யணும்னு போன மாசமே சொல்லிட்டாங்க. நானும் பிச்சையெடுக்காத குறையா ஒவ்வொருத்தர்கிட்டயா கேட்டுக்கிட்டிருக்கேன். அம்பதாயிரம் ரூபாய் குறைவா இருந்ததுங்க. என்ன செய்யறதுன்னு தெரியாமத் தவிச்சிக்கிட்டிருந்தோம். நேத்து ராத்திரி பத்து மணிக்கு ஆஸ்பத்திரிலருந்து போன் பண்ணாங்க. பணம் கெடைச்சிருச்சி நாளைக்கே புள்ளையச் சேத்திருங்கன்னு சொன்னாங்கய்யா. இப்போ நல்லபடியா ஆப்ரேஷன் நடந்துக்கிட்டிருக்கு. நீங்கதான் பணத்தக் கொடுத்ததாச் சொன்னாங்கய்யா. நீங்க எங்க குலசாமிய்யா. பொண்டாட்டி புள்ளையோட நுாறு வருசம் நல்லா வாழணும்யா.” நாதன் கண்களைத் துடைத்தார். அந்தப் பெண்ணை தேற்றி அழைத்துச் சென்றனர். “கீதா... வா... சாப்பிட்டுட்டு வரலாம்’’ “ஏழேகால் லட்சம்.. . “ “பாப்போம்’’ சாப்பாட்டில் கைவைத்த போது நாதனின் அலைபேசி ஒலித்தது. “இன்சூரன்ஸ் கம்பெனிலருந்து பேசறோம். உங்க கிளைம் பிராசஸ் செய்யும்போது பெரிய தப்பு நடந்துருச்சி. ஒரு லட்சம் தான் கொடுப்போம்னு தப்பாச் சொல்லிட்டோம் சார். எங்களை மன்னிச்சிருங்க. மொத்தச் செலவு எட்டேகால் லட்சம். நீங்க அறுபதாயிரம் கட்டினா போதும் பாக்கிய நாங்க கொடுத்திருவோம்.” நாதன் ‘அம்மா’ என அலறியபோது அந்த உணவுக்கூடத்தில் இருந்தவர்கள் எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். “தனக்கு துன்பம் வந்த காலத்திலும் அடுத்தவர் துன்பத்தை நினைத்துக் கையில் இருந்த பணத்தையெல்லாம் கொடுத்த நாதனின் அன்பு அவரது கர்மக்கணக்கை ஒரே நொடியில் நேர் செய்துவிட்டது.” ஷேர் ஆட்டோ நின்றது. அழுதபடியே அவளது கால்களில் விழுந்தேன். நிமிர்ந்தபோது அவள் அங்கு இல்லை.
|
|
|
|
|