|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » விசித்திர விருப்பம் |
|
பக்தி கதைகள்
|
|
வேதாந்த தேசிகன் கி.பி.1369ல் பரமபதம் அடைந்தார். கி.பி.1268ல் அவதரித்த தேசிகன் நுாறு ஆண்டுகளுக்கும் மேல் காஞ்சி மண்ணில் நல்வாழ்வு வாழ்ந்தவராவார்! இடையில் திருவரங்கம், திருவஹீந்திரபுரம், திருமலை என்று சென்றும், வந்தும் அவர் சாதித்த செயல்கள் பலப்பல. ராமானுஜரால் கட்டப்பட்ட வைணவ சம்பிரதாயம் என்ற மாளிகை, வேதாந்த தேசிகனால் பெரிதும் பேணப்பட்டு அடுத்த கட்டத்திற்கும் சென்றது. இவர் வாழ்ந்த காலத்தில் அத்திவரதப் பெருமான் திருக்குளத்தை விட்டு வெளியே வந்து ஒரு மண்டல காலம் காட்சி தந்து சென்றதாக குறிப்புகள் இல்லை. ஆயினும் பிரம்மப் பிரயத்தனத்தின் போது மயனால் இந்திர கட்டளைக்கேற்ப வடிக்கப்பட்ட அத்திமரத்தாலான தாருரூபம் திருக்குளத்திற்குள் இருந்ததை ஞானத்தால் உணர்ந்தவராக தேசிகன் இருந்தார். அதை காட்டித் தரவோ இல்லை தான் கண்டு பேறு பெறவோ அவர் முயலவில்லை. அவ்வாறு நடப்பது என்பது எம்பெருமானின் திருவுள்ளத்திற்கு மாறானது எனக் கருதியதால் ‘அத்திகிரி மகாத்மியம்’ என்ற பாடல் தொகுப்பை எழுதி திருப்தியடைந்தார். ஆயினும் எம்பெருமான் பின்வரும் நாளில் என்றாவது ஒரு நாள் எப்படி வெளிப்பட வேண்டுமோ அப்படி வெளிப்பட்டு அவனது அருள் அனைவருக்கும் சேரும் எனக் கருதினார். கலியின் கொடுமைக்கு ஏற்ப தர்மம், நியாயங்களுக்கு சோதனை ஏற்பட்ட காலங்களில் குளத்திற்குள் குளிர்ந்து கிடந்தே எம்பெருமானும் அருளாட்சி புரிந்தான். பலவித ஆட்சி மாற்றங்கள்! பல மன்னர்கள்! பல போக்குகள்! பருவ மாற்றங்கள் எப்படி பூமிக்கு இயற்கையான ஒன்றோ அதுபோல காட்சி மாற்றங்களும் இயற்கையானதே! ஒருவரைப் போல் இன்னொருவர் எப்படி இருப்பதில்லையோ, ஒருவர் குரல் போல எப்படி இன்னொருவர் குரலும் அமைவதில்லையோ, அதே அடிப்படையில் ஒருகாலம் போல இன்னொரு காலம் இருந்ததில்லை. இருப்பதில்லை – இருக்கப் போவதுமில்லை. இந்த இயற்கையை உலகுக்கு புரிவிப்பவன் போல பலப்பல சோதனைகளை அளித்தவனும் அவனே! அதை எதிர்த்து வெற்றி கொண்டவனும் அவனே! அவன் சன்னதியில் ராமானுஜர் போல், தேசிகர் போல் மகான்கள் மட்டுமல்ல, பக்தி என்றால் என்னவென்றே தெரியாத பாமரர்களும் நின்று எம்பெருமானைக் கண்டு வணங்கியும் உள்ளனர். அவனை ஒரு கலாரூபமாக கண்டுகளித்த மிலேச்சர்களும் இதில் அடக்கம். இந்த ரூபத்தை உடைத்து நொறுக்கினால் தான் இந்த காஞ்சி தம் வசமாகும் எனக் கருதியவர்களும் உண்டு. டெல்லியில் அவுரங்கசீப் தலைமையிலான ஆட்சி 49 வருடகாலம் நீடித்த போது, காஞ்சியில் அதன் அதிர்வுகள் இருக்கவே செய்தன. ஆயினும் உயிரை விடவும் பக்தி உணர்வும் அவன் நினைவுமே பெரிது எனக் கருதிய வைணவர்கள் மற்றும் ஆதிசைவர்களால் காஞ்சிபுரம் தன்னை காப்பாற்றிக் கொண்டது. காணக் கிடைக்கும் சில குறிப்புகளின் படி 1609ல் பிரம்மனால் அருளப் பெற்ற, யாக வேள்வியில் தோன்றிய பேரருளாளப் பெருமானின் உற்ஸவ மூர்த்தம் கோயிலில் இல்லாது போனதாக தெரிகிறது. மிலேச்சர்கள் வசம் எம்பெருமான் அகப்பட்டு அழிந்து விடக்கூடாது என்று கருதிய ஸ்ரீவைஷ்ணவ தாசர்களால் உடையார் பாளையம் எனப்படும் ஊரில் வாழ்ந்த ஜமின்தார் வசம் சென்று சேர்க்கப்பட்டதாக தெரிகிறது. இதன் பின்புலம் கூர்ந்து நோக்கப்பட வேண்டிய ஒன்று. அன்று மார்கழி மாத ஏகாதசித் திருநாள்! காஞ்சிவாழ் வைணவர்கள் ஏகாதசி விரதமிருந்து அதிகாலை சொர்க்கவாசல் கதவு திறக்கையில் அதன் வழியே எம்பெருமானைப் பின் தொடர்ந்து சென்று விடுவதன் மூலம், பிறவித் தளையில் இருந்தும் விடுபட்டுவிடும் நம்பிக்கையோடும் உருக்கத்தோடும் இருந்தனர். இச்சமயம் ஊருக்குள் மிலேச்சர்களும் புகுந்து பல இடங்களை ஆக்ரமித்திருந்தனர். விஜயநகர மன்னர் நரசிங்கராயனின் கட்டளைக்கேற்ப கங்காதரன் எனும் சிற்றரசனின் மகன் விரூபாஷ தானாயகன் என்பவன் இச்சமயம் உள்ளூர் அதிகாரியாக இருந்ததாக தெரிகிறது. இந்த விரூபாஷ தானாயகனும் அன்றைய இரவில் மாறுவேடத்தில் ஊருக்குள் நோட்டமிட்டபடியே நடந்து வரலானான். உறங்கி விடக்கூடாது என்று கருதிய பல வைணவர்கள் அந்த இரவில் பரமபதம் என்கிற தாய விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். பித்தளையால் ஆன தாயக்கட்டைகள் உருட்டிப் போடப்படும் ஓசைகள் வீட்டுக்கு வீடு கேட்டபடி இருந்தன! வீட்டு வாயிலில் அணைந்து விடாதபடி மாட விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பலர் தங்கள் வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். தானாயகன் ஒரு வைணவர் வீட்டு வாசலில் நின்று கவனிக்கலானான்! பின் மெல்ல அருகில் சென்று பார்க்கலானான். பரமபதத்தில் ஈடுபட்டிருந்த இருவரில் ஒருவர் புண்ணிய ஏணிகளில் ஏறி வைகுண்டம் எனும் உச்சம் நோக்கி சென்றபடி இருக்க, இன்னொருவரையோ பரமபத கட்டங்களின் ஊடே கிடந்த அசுர சர்ப்பங்கள் மேலேற விடவில்லை. மேலேறிக் கொண்டிருந்த வைணவர் உணரச்சிப் பெருக்கில் இருந்தார். இன்னும் சில கட்டங்கள் தான்... கடந்தால் வைகுண்டம் தான். அதே சமயம் இடையில் ஒரு பாம்பு அவரை விழுங்கி தொடங்கிய இடத்துக்கே அனுப்பக் காத்திருந்தது. அதனால் கட்டையை உருட்ட அவர் கைகள் தயங்கின. எதிரில் இருந்த வைணவரோ ‘‘உம்.. உருட்டுமய்யா உருட்டும்... வைகுண்டமா இல்லை மீண்டும் நரகவாசமா என்று பார்த்து விடுவோம்...’’ என்றார். அவரும் காஞ்சிவரதனை எண்ணிக் கொண்டு எம்பெருமானே என கட்டைகளை உருட்டினார். பன்னிரண்டு என்ற எண்ணிக்கை விழுந்து நேராக வைகுண்டத்திற்குள் அவரது சோழி புகுந்து நின்றது. ‘‘ஆஹா வைகுண்டம்..வைகுண்டம்! எம்பெருமான் கருணை கிட்டி விட்டது. என் விரதம் பூர்த்தியாகி விட்டது. இனி எனக்கு இந்த மானுடப் பிறப்பில்லை ஏன் மறுபிறப்பே இல்லையென்பேன்.. நான் இனி நித்ய சூரி!’’ என்று உற்சாகக் குரலெடுத்து கத்தலானார். அதைக் கண்ட தானாயகன் அவரிடம் பேசலானான். ‘‘சுவாமி.. இது என்ன விந்தை! இது ஒரு பொழுது போக்கு விளையாட்டு – இதில் வென்றால் பிறப்பையே வென்றதாகி விடுமா... உங்கள் சந்தோஷம் எனக்கு இப்படி கேள்வியைத் தான் எழுப்புகிறது’’ என்றான். அவரும் பதில் தரலானார். ‘‘நீ யாரப்பா?’’ ‘‘நானொரு நாடோடி’’ ‘‘உறங்க வேண்டிய நேரத்தில் இப்படி ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாயே..?’’ ‘‘உறக்கம் வரவில்லை.. அப்படியே இந்த காஞ்சி நகரை சுற்றி வருவோம் என்றே கிளம்பினேன். ஆனால் இந்த நகரமோ இரவிலும் விழித்திருக்கிறது. ஒரே கொண்டாட்டமாக உள்ளது..’’ ‘‘இன்று என்ன நாள் என்று உனக்கு தெரியாதா?’’ ‘‘என்ன நாள்?’’ ‘‘வைகுண்ட ஏகாதசியப்பா.. வருடத்திற்கொரு முறை வரும் உயிர்களுக்கான விடுதலை நாள்...’’ ‘‘விடுதலை நாளா? புரியவில்லை எனக்கு...’’ ‘‘ஆம்.. இந்த உடம்பெனும் சிறைக்குள் அடைபட்டிருக்கும் உயிருக்கு முக்தியும், மோட்சமும் கிடைக்கும் நாள்..’’ ‘‘முக்தியும் மோட்சமும் எங்குள்ளது.. அங்கே அப்படி என்ன இருக்கிறது?’’ ‘‘அது சரி.. ஊரைச் சுற்றி உண்டு களித்து நோக்கமின்றித் திரியும் உனக்கெப்படி முக்தி மோட்சம் பற்றி தெரியும்.. உனக்கு நான் சொன்னாலும் புரியப் போவதில்லை.. நீ உன் வழியே செல் – ஆயினும் இன்று இரவு கண் விழித்து ஊரைச் சுற்றும் உனக்கும் உண்டு முக்தி மோட்சம்..’’ ‘‘இப்படி அலட்சியமாக பதில் கூறினால் எப்படி? விளக்கமாகச் சொன்னாலல்லவா புரியும்...’’ – தானாயகன் அந்த வைணவரைத் துாண்டி விட்டார். அதே வேளை ஐந்தாறு குதிரைகளின் மேல் சில மிலேச்ச வீரர்கள் தெருவில் ஊர்வலம் போவது போல் வரவும் மாட விளக்கை அணைத்து விட்டு எல்லோரும் வீட்டினுள் சென்று கதவுகளை தாழிட்டுக் கொண்டனர். தானாயகனை ஒரு மிலேச்ச அதிகாரி பிடித்துக் கொண்டான். ‘‘அடேய்.. யார் நீ? உறங்காமல் இங்கென்ன செய்து கொண்டிருக்கிறாய்?’’ – அதிகாரியிடம் கடுமை தொனித்தது. தானாயகனுக்கோ கண்கள் சிவக்க ஆரம்பித்தன.
|
|
|
|
|